இந்தியாவிலும் கேம்பிரிட்ஜ் அனாலிட்டிகா செயல்பாடு; காங்கிரஸ் - பா.ஜனதா இடையே மோதல் வெடித்தது


இந்தியாவிலும் கேம்பிரிட்ஜ் அனாலிட்டிகா செயல்பாடு; காங்கிரஸ் - பா.ஜனதா இடையே மோதல் வெடித்தது
x
தினத்தந்தி 21 March 2018 11:55 AM GMT (Updated: 21 March 2018 11:55 AM GMT)

இந்தியாவிலும் தேர்தல்களில் கேம்பிரிட்ஜ் அனாலிட்டிகா பணியாற்றியதாக அதனுடைய இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. #CambridgeAnalytica #Facebook #India #Congress #BJP


புதுடெல்லி,
 
சமூக வலைத்தளமான ‘பேஸ்புக்’ எனப்படும் முகநூலை உலகம் முழுவதும் கோடிக்கணக்கானோர் பயன்படுத்தி வருகிறார்கள். இதற்கிடையே, முகநூல் தொடர்பாக இங்கிலாந்தில் பெரும் சர்ச்சை வெடித்துள்ளது.

2016 அமெரிக்க தேர்தலில் டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றதை அடுத்து பெரும் சர்ச்சை வெடித்தது. அமெரிக்க தேர்தலில் டொனால்டு டிரம்பிற்கு ஆதரவாக சமூக வலைதளத்தில் பிரசாரத்தை மேற்கொள்ள பெருந்தொகையில் ஒப்பந்தம் செய்யப்பட்டு பிரிட்டனை சேர்ந்த கேம்பிரிட்ஜ் அனாலிட்டிகா என்ற நிறுவனம் பணியமர்த்தப்பட்டது. பேஸ்புக், ட்வீட்டர் போன்ற சமூகவலைதளங்களில், ட்ரம்ப் குறித்த தகவல்களை பரப்புவதற்காகவும், அவருக்கு ஆதரவான கருத்துக்களை கொண்டு சேர்க்கவும் பணிகளை இந்நிறுவனம் மேற்கொண்டது. 

அமெரிக்க அதிபர் தேர்தலின் போது டொனால்ட் ட்ரம்புக்காக பணியாற்றிய கேம்பிரிட்ஜ் அனாலிட்டிகா என்ற இணைய நிறுவனம், சுமார் 5 கோடி அமெரிக்கர்களின் பேஸ்புக் விவரங்களை திருடியதாக செய்தி வெளியாகியது. சேனல் 4 செய்தி நிறுவனம் நடத்திய கள ஆய்வில் இந்த அதிர்ச்சி சம்பவம் தெரியவந்து உள்ளது. இந்நிறுவனம் ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் வெளியேறுவது தொடர்பாக நடத்தப்பட்ட தேர்தலிலும் தன்னுடைய கைவரிசையை காட்டியதாக தெரிகிறது. 

விதிமுறைகளை மீறி தகவல்களை தவறாக பயன்படுத்தியதாக கூறி கேம்பிரிட்ஜ் அனாலிட்டிகா நிறுவனத்துடனான வர்த்தக உறவை பேஸ்புக் நிறுவனம் துண்டித்துள்ளது. கேம்பிரிட்ஜ் அனாலிட்டிகா நிறுவனம் நைஜீரியா, கென்யா, செக் குடியரசு மற்றும் அர்ஜெண்டினா, இந்தியா என உலக முழுவதும் நடைபெற்ற 200க்கும் அதிகமான தேர்தல்களில் இந்நிறுவனம் பணியாற்றி உள்ளதாக தெரிவித்து உள்ளது.  

இந்தியாவில்... 

2010 ஆண்டு பீகார் மாநில சட்டசபைத் தேர்தலில் இந்திய அரசியல் கட்சி அல்லது கட்சிகளுக்காக பணியாற்றியதாக கேம்பிரிட்ஜ் அனாலிட்டிகா அதனுடைய இணையதளத்தில் தெரிவித்து உள்ளது. தேர்தலில் பாரதீய ஜனதா கூட்டணியுடன் ஐக்கிய ஜனதா தளம் கட்சி வெற்றிப்பெற்றது. இவ்விவகாரம் தொடர்பான தகவல்கள் வெளியாகியது இந்திய தேர்தல்களிலும் தன்னுடைய உத்திகளை கேக்பிரிட்ஜ் அனாலிட்டிகா பயன்பத்தியதா என்ற மில்லியன் டாலர் கேள்வியை அனைவரது மத்தியிலும் எழ செய்து உள்ளது. இந்திய அரசியல் கட்சிகளுக்கு சார்பாக அந்நிறுவனம் பயன்படுத்தியதா என்பது உறுதிசெய்யப்படாத நிலையில் உள்ளது. 

அதனுடைய தலைமை இணையதளமும், பிற துணை இணையங்களும் ஒரு சிக்கலான இணைய பிணைப்பில் காணப்படுகிறது. கேம்பிரிட்ஜ் அனாலிட்டிகாவின் தலைமை நிறுவனமானக Strategic Communications Laboratories உள்ளது. அதனுடைய இந்தியா லிங் பகுதிக்கு செல்லும் போது எந்தஒரு நேரடி தகவலும் கிடையாது. ஆனால் அதனுடன் இணைந்து பணியாற்றும் நிறுவனமாக Ovleno Business Intelligence (OBI)  (இப்போது முடங்கி உள்ளது) தன்னை அடையாளப்படுத்தி உள்ளது. அந்நிறுவனம் லண்டனில் உள்ள எஸ்சிஎல் குரூப்புடன் தொடர்பில் உள்ளதாக தெரிவித்து உள்ளது. ஓபிஐ நிறுவனத்தின் இணையதளத்தில் பாரதீய ஜனதா, காங்கிரஸ் மற்றும்  ஐக்கிய ஜனதா தளம் கட்சிகள் தங்களுடைய வாடிக்கையாளர்கள் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.


Ovleno Business Intelligence இணையதளத்தில் இடம்பெற்று உள்ள வாடிக்கையாளர்கள் விபரம். இப்போது இணையதளம் முடங்கி உள்ளது.

 பீகார் தேர்தலில் பணியாற்றியது தொடர்பான யூகிக்கும் வகையிலான தகவல்கள் மட்டும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

2014 பாராளுமன்றத் தேர்தலில் பாரதீய ஜனதா வெற்றிப்பெற்றது, இதிலும்  கேம்பிரிட்ஜ் அனாலிட்டிகா பணியாற்றியதாக செய்தி வெளியாகி உள்ளது.

காங்கிரஸ் - பா.ஜனதா மோதல்

இவ்விவகாரம் தொடர்பான தகவல்கள் வெளியாகி சர்ச்சை தொடங்கிய நிலையில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மணிஷ் திவாரி தேர்தல் ஆணையம் விசாரணையை தொடங்க வேண்டும் என்றார். எந்த கட்சிக்கு கேம்பிரிட்ஜ் அனாலிட்டிகாவுடன் தொடர்பு உள்ளது என்பது தொடர்பாக விசாரணையை மேற்கொள்ள வேண்டும் என டுவிட்டரில் குறிப்பிட்டார் மணிஷ் திவாரி.


இந்தியர்கள் தகவல் விவகாரத்தில் பேஸ்புக் சமரசம் செய்துக்கொண்டது என கண்டுபிடிக்கப்பட்டால் இந்தியாவிற்கு மார்க் ஜூக்கர்பெர்க்கிற்கு சம்மன் விடுக்க முடியும் என மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை மந்திரி ரவிசங்கர் பிரசாத் கூறினார். டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய ரவிசங்கர் பிரசாத், காங்கிரஸ் கட்சிக்குதான் அந்நிறுவனத்துடன் தொடர்பு உள்ளது என குற்றம் சாட்டிஉள்ளார். காங்கிரஸ் கட்சிதான் தகவல் திருட்டில் ஈடுபட்டு உள்ளது, தேர்தலில் வெற்றிபெற மோசடியாக தகவல் திருட்டில் ஈடுபட்டு உள்ளது என பாரதீய ஜனதாவின் ரவிசங்கர் பிரசாத் குற்றம் சாட்டிஉள்ளார்.

 காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தியின் சமூகவலைதள நிர்வாகத்தில் கேம்பிரிட்ஜ் அனாலிட்டிகாவின் செயல்பாடு தொடர்பாகவும் கேள்வியை எழுப்பி உள்ளார் ரவிசங்கர் பிரசாத்.

பாரதீய ஜனதாவின் குற்றச்சாட்டை உடனடியாக மறுத்து உள்ள காங்கிரஸ் கட்சியை சேர்ந்த திவ்யா ஸ்பந்தனா டுவிட்டரில், காங்கிரஸ் கட்சிக்கு  கேம்பிரிட்ஜ் அனாலிட்டிகாவுடன் தொடர்பு என்ற செய்தியானது முற்றிலும் பொய்யானது என தெரிவித்து உள்ளார். 

காங்கிரஸ் கட்சி ஒருபோதும் கேம்பிரிட்ஜ் அனாலிட்டிகாவை பணியமர்த்தவில்லை. அந்நிறுவனம் வலசாரி கட்சிகளுக்காக மட்டுமே பணியாற்றி உள்ளது, சுதந்திர கட்சிக்கு கிடையாது. பாரதீய ஜனதாவிற்காக பணியாற்றி உள்ளோம் என அந்நிறுவன இணையதளத்திலே தெரிவிக்கப்பட்டு உள்ளது என தெரிவித்து உள்ளார் திவ்யா ஸ்பந்தனா. 

முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய ரவிசங்கர் பிரசாத், “கேம்பிரிட்ஜ் அனாலிட்டிகா சிஇஓவிடம் எத்தனை இந்தியர்களின் தகவல்கள் வழங்கப்பட்டு உள்ளது என நாங்கள் காங்கிரஸிடம் கேள்வி எழுப்புகிறோம்,” என்றார். 

காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ரந்தீப் சுர்ஜேவாலா பேசுகையில், “பாரதீய ஜனதா போலி செய்திகளின் தொழிற்சாலையாகும், அவர்கள் போலியான ஒன்றை மட்டுமே எப்போதும் வழங்குவார்கள். இது போலி அறிக்கையாகவே தெரிகிறது. போலி செய்தியார்கள் சந்திப்பு. போலியான நிகழ்ச்சி நிரல் என்பது பாரதீய ஜனதாவின் தினசரி நடவடிக்கையாகும். காங்கிரஸ் கட்சியோ, காங்கிரஸ் கட்சியின் தலைவரோ கேம்பிரிட்ஜ் அனாலிட்டிகா நிறுவனத்திற்கு எந்தஒரு பணியையும் வழங்கியது கிடையாது, அந்நிறுவனத்தை பயன்படுத்தியது கிடையாது. இது போலியான பிரசாரம். மத்திய சட்டமந்திரியால் ஒரு போலியான செய்தி பரப்பட்டு உள்ளது. 2010-ம் ஆண்டு சம்பந்தப்பட்ட நிறுவனம் பா.ஜனதா மற்றும் ஐக்கிய ஜனதா தளம் கட்சிக்காக செயல்பட்டு உள்ளது, அதன் இணையதளத்திலே தெரிவிக்கப்பட்டு உள்ளது,” என கூறிஉள்ளார். 


Next Story