ஆட்டை காப்பாற்ற புலியுடன் சண்டையிட்ட வீரமங்கை ரத்தவழியும் முகத்துடன் செல்பி


ஆட்டை காப்பாற்ற புலியுடன் சண்டையிட்ட வீரமங்கை  ரத்தவழியும் முகத்துடன் செல்பி
x
தினத்தந்தி 5 April 2018 5:55 AM GMT (Updated: 5 April 2018 5:55 AM GMT)

தனது ஆட்டை காப்பாற்றுவதற்காக புலியுடன் போராடி விரட்டி அடித்து உயிர்பிழைத்துள்ளார் மகாராஷ்ட்ரா பெண் ஒருவர்.

மும்பை

மகாராஷ்ட்ராவில் உள்ள நாக்பூர் அருகேயுள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த இளம்பெண் ரூபாலி மேஷ்ராம்(23). சில தினங்களுக்கு முன்னர், வீட்டில் ரூபாலி படுத்துக் கொண்டிருந்தபோது, அவரது ஆட்டுக்குட்டி அலறும் சத்தம் கேட்டது. உடனடியாக வெளியே போய் பார்த்தால், ஆட்டை ஒரு புலி கவ்வி பிடித்து கொண்டு இருந்தது.  உடனடியாக கம்பை எடுத்த அவர் புலியை தாக்கி, போராடி ஆட்டிக்குட்டியை மீட்டார். 

புலியுடன் ஏற்பட்ட மோதலில் ரூபாலிக்கு கடுமையான காயம் ஏற்பட்டது. ஆனாலும் அவர் விடாமல் தனது ஆட்டை காப்பாற்றும் நோக்கத்தோடே செயல்பட்டிருக்கிறார். புலி பதிலுக்கு தாக்கும் சூழலில் ரூபாலியை அவரது தாயார் வீட்டினுள்ளே இழுத்து தாழிட்டார். 

ஆனால் ஏற்கெனவே புலி கடுமையாக தாக்கியதால், ரூபாலியின் ஆடு இறந்தது. ரூபாலியின் தலை, கழுத்து, கால், இடுப்பு என கடுமையான காயங்களும் அவரது தாயாருக்கு லேசான காயங்களும் ஏற்பட்டது. வனத்துறையினருக்கு தகவல் கொடுத்த நிலையில், அவர்கள் வருவதற்கு முன்பாகவே புலி அங்கிருந்து ஓடிவிட்டது. 

வீட்டிற்குள் சென்ற ரூபாலி, முகம் எங்கும் ரத்தம் வழியும் நிலையில் செல்பியும் எடுத்துள்ளார். 

பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு, சிகிச்சை அளிக்கப்பட்டது. ரூபாலிக்கு சிகிச்சை அளித்த மருத்துவர், அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்துவிட்டதாக கூறினார். மேலும், ரூபாலியின் வீரம் எல்லா பெண்களுக்கும் ஒரு எடுத்துக்காட்டு, என்றும் கூறியுள்ளார். ஆனால், ரூபாலியின் கிராம மக்கள், அவருக்கு தெய்வீக சக்தி இருப்பதாகவே நம்புகின்றனர். 


Next Story