காஷ்மீரில் சிறுமி பாலியல் பலாத்காரம் பற்றி விசாரிக்க தனிக்கோர்ட்டு


காஷ்மீரில் சிறுமி பாலியல் பலாத்காரம் பற்றி விசாரிக்க தனிக்கோர்ட்டு
x
தினத்தந்தி 14 April 2018 11:00 PM GMT (Updated: 14 April 2018 6:35 PM GMT)

காஷ்மீரில் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து விசாரிக்க தனிக்கோர்ட்டு அமைக்க முதல்-மந்திரி மெகபூபா முப்தி நடவடிக்கை எடுத்து உள்ளார்.

ஸ்ரீநகர்,

காஷ்மீரின் கதுவா மாவட்டத்தை சேர்ந்த 8 வயது சிறுமி, கடந்த ஜனவரி 10-ந்தேதி சிலரால் கடத்தி செல்லப்பட்டு கற்பழிக்கப்பட்டாள். சுமார் ஒரு வாரத்துக்குப்பின் அவளை கொலை செய்த அந்த கும்பல், வீட்டின் அருகே வீசிவிட்டு சென்றது.

இந்த கொடூர சம்பவத்தை மறைப்பதற்கு உள்ளூர் போலீசாரும் உதவி புரிந்தது கண்டறியப்பட்டது. எனினும் அங்கு எதிர்ப்பு வலுக்கவே இந்த கற்பழிப்பு சம்பவத்தில் தொடர்புடைய சிலரை போலீசார் கைது செய்தனர்.

ஆனால் இந்த கைது நடவடிக்கையை கண்டித்து மாநில பா.ஜனதாவினர் அங்கே பேரணி நடத்தினர். இதில் மாநில வனத்துறை மந்திரி லால் சிங் மற்றும் தொழிற்சாலைகள் துறை மந்திரி சந்தர் பிரகாஷ் கங்கா ஆகிய பா.ஜனதா மந்திரிகள் கலந்து கொண்டனர். இதில் பங்கேற்ற சிலர் தேசியக்கொடிகளை ஏந்தி சென்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

சிறுமி கற்பழிப்பு மற்றும் அதைத்தொடர்ந்து நடந்த சம்பவங்கள் அனைத்தும் தற்போது நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கி றது. குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகள் அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றன.

எனவே சிறுமி கற்பழிப்பு விவகாரத்தை விசாரிக்க தனிக்கோர்ட்டு அமைக்க முதல்-மந்திரி நடவடிக்கை எடுத்துள்ளார். இது தொடர்பாக காஷ்மீர் ஐகோர்ட்டு தலைமை நீதிபதிக்கு அவர் கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் கூறுகையில், ‘சிறுமி கற்பழிப்பு வழக்கை விசாரிக்க சிறப்பு விரைவுக்கோர்ட்டு அமைக்க வேண்டும். அதில் 90 நாட்களுக்குள் விசாரணை முடித்து, மாநிலத்திலேயே விரைவாக நீதி வழங்கப்பட்ட கோர்ட்டாக அது அமைய வேண்டும்’ என கோரிக்கை விடுத்து இருந்தார்.

இதைப்போல சிறுமி கற்பழிப்பு விவகாரத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ள போலீசாரை பணிநீக்கம் செய்யவும் மாநில அரசு முடிவு செய்திருப்பதாக மாநில அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

இதற்கிடையே சிறுமி கற்பழிப்பு சர்ச்சையில் சிக்கியுள்ள பா.ஜனதா மந்திரிகள் இருவரும் பதவி விலகி உள்ளனர். அவர்களது ராஜினாமா கடிதங்களை மாநில பா.ஜனதா தலைவர் சத் சர்மா, முதல்-மந்திரிக்கு அனுப்பி வைப்பார் என மாநில பா.ஜனதா மேலிட பொறுப்பாளர் ராம் மாதவ் தெரிவித்தார்.

இதன் மூலம் இந்த விவகாரத்தில் தங்களின் கூட்டணி கட்சியான மக்கள் ஜனநாயக கட்சி மற்றும் காஷ்மீர் மக்களின் அச்சத்தை போக்க முடியும் என அவர் தெரிவித்தார்.

இந்த நிலையில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களை தடுக்க மத்திய அரசை வலியுறுத்தி டெல்லியில் தேசிய மகளிர் ஆணைய தலைவி சுவாதி மாலிவால் தொடங்கியுள்ள காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம் நேற்று 2-வது நாளாக தொடர்ந்தது.

Next Story