வன்கொடுமை தடுப்பு சட்டம் தொடர்பான சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு: அவசர சட்டம் கொண்டு வர மத்திய அரசு பரிசீலனை


வன்கொடுமை தடுப்பு சட்டம் தொடர்பான சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு: அவசர சட்டம் கொண்டு வர மத்திய அரசு பரிசீலனை
x
தினத்தந்தி 15 April 2018 11:00 PM GMT (Updated: 15 April 2018 8:37 PM GMT)

தலித் வன்கொடுமை தடுப்பு சட்டம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு வழங்கிய தீர்ப்பை தொடர்ந்து, இந்த விவகாரத்தில் அவசர சட்டம் கொண்டுவர மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.

புதுடெல்லி, 

மராட்டிய மாநிலத்தை சேர்ந்த சுபாஷ் காசிநாத் மகாஜன் என்ற ஓய்வுபெற்ற அதிகாரி ஒருவர், தன்மீதான எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்பு சட்ட நடவடிக்கையை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு மனு செய்திருந்தார். அதை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, கடந்த மாதம் 20-ந்தேதி பரபரப்பு தீர்ப்பு ஒன்றை வழங்கியது.

அதாவது, தலித் மற்றும் பழங்குடியினர் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் அரசு ஊழியர் ஒருவர் மீது கொடுக்கப்படும் புகாரின் பேரில் அவரை உடனடியாக கைது செய்து விடக்கூடாது என்றும், டி.எஸ்.பி. தலைமையில் பூர்வாங்க விசாரணை நடத்தி அதில் முகாந்திரம் இருந்தால் மட்டுமே மேல் அதிகாரி அனுமதியுடன் கைதுசெய்ய வேண்டும் எனவும் நீதிபதி ஆதர்ஷ் குமார் கோயல் தலைமையிலான அமர்வு தீர்ப்பளித்தது.

இந்த தீர்ப்புக்கு பல்வேறு அரசியல் கட்சிகளும், தலித் பிரிவினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த தீர்ப்பு வன்கொடுமை தடுப்பு சட்டத்தை நீர்த்து போகச்செய்யும் என குற்றம் சாட்டிய தலித் பிரிவினர், தீர்ப்பை எதிர்த்து கடந்த 2-ந்தேதி நாடு முழுவதும் முழு அடைப்பு போராட்டம் நடத்தினர்.

இதில் மத்திய பிரதேசம், ராஜஸ்தான், ஒடிசா, பீகார், பஞ்சாப், அரியானா, டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் பயங்கர வன்முறை வெடித்தது. இதில் சுமார் 10 பேர் கொல்லப்பட்டதுடன், நூற்றுக்கணக்கானோர் படுகாயம் அடைந்தனர்.

பின்னர் இந்த தீர்ப்பை எதிர்த்து மத்திய அரசும், தலித் அமைப்புகளின் கூட்டமைப்பும் சுப்ரீம் கோர்ட்டில் மறு ஆய்வு மனுதாக்கல் செய்ததுடன், தீர்ப்புக்கு இடைக்கால தடையும் கோரினர். ஆனால் இடைக்காலத்தடை விதிக்க நீதிபதிகள் மறுத்து விட்டனர்.

இந்த வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் கடந்த வாரம் எழுத்துப்பூர்வ அறிக்கை ஒன்றை தாக்கல் செய்த அட்டார்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால், ‘மிகவும் சிக்கலான இந்த பிரச்சினையில் சுப்ரீம் கோர்ட்டு வழங்கிய தீர்ப்பு நாட்டில் ஏராளமான பதற்றம், கோபம், அமைதியின்மை மற்றும் நல்லிணக்க சீரழிவை ஏற்படுத்தி விட்டது. தலித் வன்கொடுமை தடுப்புச்சட்டத்தில் சுப்ரீம் கோர்ட்டு வழங்கியுள்ள சமீபத்திய தீர்ப்பு, அந்த சட்டத்தின் வழிமுறைகளை நீர்த்துப்போக செய்து விட்டது’ என்று அதில் கூறியிருந்தார்.

இதற்கிடையே தலித் வன்கொடுமை தடுப்புச்சட்டம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு அளித்த தீர்ப்பு குறித்து பேசிய பிரதமர் மோடி, ‘எங்களால் வலிமை மிகுந்ததாக இயற்றப்பட்ட சட்டம், சுப்ரீம் கோர்ட்டு உத்தரவால் நீர்த்து போக விடமாட்டோம்’ என்று உறுதியளித்து இருந்தார்.

இந்த நிலையில் தலித் வன்கொடுமை தடுப்பு சட்டத்தை நீர்த்து போகாமல் தடுக்க மத்திய அரசு பல்வேறு மட்டங்களில் ஆலோசனை நடத்தி வருகிறது. இதில் 2 முடிவுகளை எடுத்துள்ள மத்திய அரசு, அதில் ஏதாவது ஒன்றை செயல்படுத்துவது குறித்து பரிசீலித்து வருகிறது.

அதன்படி எஸ்.சி, எஸ்.டி. வன்கொடுமை தடுப்பு சட்டம் 1989-ல் இருந்த பழைய வழிமுறைகள் அனைத்தும் உட்படுத்தி அவசர சட்டம் பிறப்பிப்பது அல்லது ஜூலை மாதம் நடைபெறும் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் திருத்தச்சட்டம் கொண்டு வந்து நிறைவேற்றுவது ஆகிய இரண்டில் ஒன்றை செய்வது என மத்திய அரசு ஆலோசித்து வருவதாக மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

அவசர சட்டம் கொண்டு வந்தால் கூட பின்னர் அது தொடர்பாக நாடாளுமன்றத்தில் மசோதா தாக்கல் செய்து சட்டமாக்க வேண்டியது அவசியம். அதேநேரம் அவசர சட்டம் உடனடி பலனை வழங்குவதுடன், சுப்ரீம் கோர்ட்டு உத்தரவால் நாட்டில் எழுந்துள்ள கொந்தளிப்பையும் தணிக்கும் என மத்திய அரசு கருதுகிறது.

எனினும் இந்த விவகாரத்தில் இறுதி முடிவு இதுவரை எடுக்கப்படவில்லை. சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை எதிர்த்து மத்திய அரசு தாக்கல் செய்திருக்கும் மறு ஆய்வு மனு மீதான விசாரணையை பொறுத்தே இதில் முடிவு எடுக்கப்படும் என கூறப்படுகிறது.

இந்த மறு ஆய்வு மனு உடனடி தீர்வை வழங்காமல் போனாலோ அல்லது சுப்ரீம் கோர்ட்டின் முடிவு சாதகமாக அமையாவிட்டாலோ மத்திய அரசு தனது எதிர்கால நிலைப்பாட்டை உறுதி செய்யும் எனவும் டெல்லி வட்டாரங்கள் தெரிவித்தன.

Next Story