மெக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பு வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதியின் ராஜினாமா நிராகரிப்பு


மெக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பு வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதியின் ராஜினாமா நிராகரிப்பு
x
தினத்தந்தி 19 April 2018 8:28 AM GMT (Updated: 19 April 2018 8:28 AM GMT)

மெக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பு வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதியின் ராஜினாமா நிராகரிக்கப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

ஐதராபாத் நகரில் கடந்த 2007-ம் ஆண்டு மே 18-ம் தேதி சார்மினாருக்கு அருகில் இருந்த மெக்கா மசூதியில் வெள்ளிக்கிழமை தொழுகை நடந்து கொண்டிருந்த போது சக்திவாய்ந்த வெடிகுண்டு வீசப்பட்டது. இந்த சம்பவத்தில் 9 பேர் உயிரிழந்தனர். 58 பேர் காயமடைந்தனர். 

இந்த குண்டுவெடிப்பின் போது வெடிக்காத 2 சக்திவாய்ந்த வெடிகுண்டுகளையும் போலீசார் பறிமுதல் செய்தனர். இதோடு மசூதிக்கு வெளியே போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டிலும் 5 பேர் உயிரிழந்தனர். இந்து அமைப்பைச் சேர்ந்த அசீமானந்த், தேவேந்திர குப்தா, லோகேஷ் ஷர்மா, பாரத்பாய், ரஜேந்தர் செயத்ரி உள்ளிட்ட 8 பேர் இந்த குண்டு வெடிப்பில் தொடர்புள்ளவர்கள் என்று என்.ஐ.ஏ குற்றம்சாட்டியது.

குற்றவாளிகளில் சுனில் ஜோஷி விசாரணையின் போதே படுகொலை செய்யப்பட்டார். சந்தீர் வி. டங்கே, மத்திய பிரதேசத்தை சேர்ந்த ராம்சந்திர கல்சங்கரா இரண்டு பேரும் விசாரணையில் இருந்து தப்பினர். ஏனைய 5 பேர் மீது ஐதராபாத்தில் உள்ள என்.ஐ.ஏ நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது. 

விசாரணை முடிந்ததையடுத்து, இந்த வழக்கில் கடந்த சில தினங்களுக்கு முன் தீர்ப்பளிக்கப்பட்டது. இதில், குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக போதிய ஆதாரங்கள் இல்லை என கூறிய நீதிபதி ரவீந்திர ரெட்டி 5 பேரையும் விடுவித்து உத்தரவிட்டார். தீர்ப்பு அளித்த கையோடு ராஜினாமா செய்வதாகவும் நீதிபதி ரவீந்திர ரெட்டி கடிதம் அளித்தார். ஆனால், நீதிபதி ரவீந்திர ரெட்டியின் ராஜினாமா மனு நிராகரிக்கப்பட்டுள்ளது. விடுப்பை முடித்துக்கொண்டு பணிக்கு திரும்ப வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. 

Next Story