‘இம்பீச்மெண்ட் தீர்மானம்’ மன்மோகன் சிங் கையெழுத்திடவில்லை என்பது முற்றிலும் தவறானது - காங்கிரஸ்


‘இம்பீச்மெண்ட் தீர்மானம்’ மன்மோகன் சிங் கையெழுத்திடவில்லை என்பது முற்றிலும் தவறானது - காங்கிரஸ்
x
தினத்தந்தி 20 April 2018 9:32 AM GMT (Updated: 20 April 2018 9:32 AM GMT)

தலைமை நீதிபதி மிஸ்ராவிற்கு எதிரான ‘இம்பீச்மெண்ட் தீர்மானத்தில்’ மன்மோகன் சிங் கையெழுத்திடவில்லை என்பது முற்றிலும் தவறானது என காங்கிரஸ் கூறிஉள்ளது. #ImpeachmentMotion #KapilSibal #Congress


புதுடெல்லி,

சுப்ரீம் கோர்ட்டில் ஜனநாயகம் பின்பற்றப்படவில்லை, வழக்குகளை ஒதுக்குவதில் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா பாரபட்சம் காட்டுகிறார் என்று மூத்த நீதிபதிகள் செலமேஸ்வரர், ரஞ்சன் கோகோய், குரியன் ஜோசப், மதன் பீமாராவ் லோகூர் ஆகியோர் ஜனவரியில் போர்க்கொடி உயர்த்தினர். ஆனால் 4 நீதிபதிகள் சுட்டிக் காட்டிய விவகாரங்களில் தலைமை நீதிபதி அக்கறை காட்டவில்லை என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியது. இதுதொடர்பாக காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சார்பில் டெல்லியில் ஆலோசனை நடைபெற்றது. அப்போது கட்சிகள் கடந்த வாரம் ஆலோசனை நடத்தின.

 அப்போது தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவை பதவி நீக்கம் செய்யக் கோரி நாடாளுமன்றத்தில் கண்டன தீர்மானம் கொண்டு வர முடிவு செய்யப்பட்டது. தலைமை நீதிபதிக்கு எதிராக மக்களவையில் கண்டன தீர்மானம் கொண்டு வர 100 எம்.பி.க்கள் ஆதரவும் மாநிலங்களவையில் 50 எம்.பி.க்கள் ஆதரவும் தேவை. இதற்காக எதிர்க்கட்சி எம்.பி.க்களிடம் கையெழுத்து வாங்கும் பணிகளையும் காங்கிரஸ் தொடங்கியது. மாநிலங்களவையில் காங்கிரஸ் தரப்பில் 65 கையெழுத்துக்களும் பெறப்பட்டது.

பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வில் பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் கண்டன தீர்மானம் கொண்டு வரப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் எதிர்க்கட்சிகள் அமளியின் காரணமாக அவைகள் முடங்கி வருகிறது. இதற்கிடையே காங்கிரஸ் கட்சி தலைமை நீதிபதிக்கு எதிராக தீர்மானம் கொண்டுவரும் திட்டத்தை கைவிட்டுவிட்டது என தகவல் வெளியாகியது. ஆனால் காங்கிரஸ் தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டது. இப்போது தலைமை நீதிபதி மிஸ்ராவிற்கு எதிரான ‘இம்பீச்மெண்ட் தீர்மானத்தை கொண்டுவருவதில் எதிர்க்கட்சிகள் தீவிரம் காட்டிஉள்ளன.

தலைமை நீதிபதி மிஸ்ராவிற்கு எதிரான ‘இம்பீச்மெண்ட் தீர்மானத்தை’ கொண்டு வருவது தொடர்பான நோட்டீஸை காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சிகள் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவிடம் கொடுத்து உள்ளது. மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவர் குலாம் நபி ஆசாத் பேசுகையில், “ தலைமை நீதிபதி மிஸ்ராவிற்கு எதிரான ‘இம்பீச்மெண்ட் தீர்மானத்திற்கு’ நாங்கள் 79 எம்.பி.க்களின் கையெழுத்தை பெற்று உள்ளோம், இவர்களில் 6 பேர் ஓய்வு பெற்றுவிட்டார்கள். இப்போது எம்.பி.யாக இருக்கும் 64 பேர் கையெழுத்திட்டு உள்ளார்கள். தீர்மானத்தை எடுத்துக்கொள்வதற்கு தேவையான உறுப்பினர்களைவிட அதிகமான உறுப்பினர்கள் கையெழுத்திட்டு உள்ளனர். துணை ஜனாதிபதி நடவடிக்கை எடுப்பார் என நம்புகிறோம்,” என்றார். 

 ‘இம்பீச்மெண்ட் தீர்மானத்தில்’ காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், சமாஜ்வாடி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சிகளின் எம்.பி.க்கள் கையெத்திட்டு உள்ளார்கள். காங்கிரஸ் தலைவர் கபில் சிபல் பேசுகையில், “தலைமை நீதிபதியின் செயல்பாட்டை சுட்டிக்காட்டி சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகளே நீதித்துறையின் சுதந்திரம் எச்சரிக்கையில் உள்ளது என நம்புகிறார்கள், ஆனால் தேசம் எந்தஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை,” என்று கூறினார். 

தலைமை நீதிபதி மிஸ்ராவிற்கு எதிரான ‘இம்பீச்மெண்ட் தீர்மானத்தில்’ மன்மோகன் சிங் கையெழுத்திடவில்லை என்ற தகவலை முற்றிலும் தவறானது என கபில் சிபல் நிராகரித்தார். 


Next Story