குற்றவாளிகளுக்கு மரண தண்டனை; போஸ்கோ சட்ட திருத்தத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் அளிக்க வாய்ப்பு


குற்றவாளிகளுக்கு மரண தண்டனை; போஸ்கோ சட்ட திருத்தத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் அளிக்க வாய்ப்பு
x
தினத்தந்தி 20 April 2018 1:54 PM GMT (Updated: 20 April 2018 1:54 PM GMT)

சிறார் பலாத்கார குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்கும் வகையில் கொண்டுவரப்படும் திருத்தத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் அளிக்க வாய்ப்பு உள்ளது. #POCSOAct

புதுடெல்லி,

சிறார்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்படும் சம்பவங்களில் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்கும் வகையில் குழந்தைகள் பாலினக் கொடுமை (போஸ்கோ) சட்டத்தில் கொண்டுவரப்படும் திருத்தத்திற்கு மத்திய அமைச்சரவை வாய்ப்பு அளிக்கலாம் என தகவல் வெளியாகி உள்ளது. நாளை நடைபெறும் அமைச்சரவை கூட்டத்தில் சட்டத்தில் திருத்தம் கொண்டுவருவது தொடர்பான பரிந்துரைக்கு ஒப்புதல் அளிக்கலாம் என தெரியவந்து உள்ளது. 12 வயதுக்குள் கீழ் உள்ள சிறார்களை பாலியல் பலாத்காரம் செய்பவர்களுக்கு மரண தண்டனை விதிக்கும் வகையில் போஸ்கோ சட்டத்தில் திருத்தம் கொண்டுவர பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது.

கதுவாவில் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டது தேசிய அளவில் பெரும் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் நல அமைச்சர் மேனகா காந்தி சட்டத்தில் திருத்தம் கொண்டுவர பரிந்துரை செய்து உள்ளார். 12 வயதுக்குள் கீழ் உள்ள சிறார்களை பாலியல் பலாத்காரம் செய்பவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட வேண்டும் என மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் நல அமைச்சகம் நாடுகிறது என மேனகா காந்தி தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

போஸ்கோ சட்டத்தில் மரண தண்டனை விதிக்கும் வகையில் ஷரத்து கிடையாது. மோசமான பாலியல் தாக்குதலுக்கு அதிகப்பட்சமாக ஆயுள் தண்டனை விதிக்கும் ஷரத்தே உள்ளது. ஏற்கனவே போஸ்கோ சட்டத்தில் மாற்றம் கொண்டுவரும் பணியை தொடங்கிவிட்டதாக மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டில் தெரிவித்து இருந்தது.

Next Story