வாயை மூடுங்கள்! பாரதீய ஜனதாவினருக்கு பிரதமர் மோடி உத்தரவு


வாயை மூடுங்கள்! பாரதீய ஜனதாவினருக்கு பிரதமர் மோடி உத்தரவு
x
தினத்தந்தி 22 April 2018 1:46 PM GMT (Updated: 22 April 2018 1:46 PM GMT)

பொது பிரச்சனைகளில் வரம்பு மீறி பேச வேண்டாம் என பா.ஜனதாவினருக்கு பிரதமர் மோடி உத்தரவிட்டு உள்ளார். #PMModi #BJP


புதுடெல்லி,

ஜம்மு காஷ்மீர் மாநிலம் கதுவாவில் 8 வயது சிறுமி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியையும், கோபத்தையும் ஏற்படுத்தியது. சிறுமி கொலையில் குற்றவாளிகளுக்கு ஆதரவான போராட்டத்தில் பா.ஜனதா மந்திரிகள் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றது, குற்றவாளிகளுக்கு எதிராக போலீஸ் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்த போது பா.ஜனதா ஆதரவு வழக்கறிஞர்கள் போராட்டம் மேற்கொண்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. சிறுமிக்கு நீதி வேண்டும் என இந்தியா முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகிறது. 

உத்தரபிரதேச மாநிலத்தில் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் பா.ஜனதா எம்.எல்.ஏ. கைது செய்யப்பட்டு உள்ளார். இதற்கிடையே பாரதீய ஜனதாவினர் தெரிவித்துவரும் கருத்துக்கள் அக்கட்சியின் தலைமைக்கு கடும் தர்மசங்கடத்தை ஏற்படுத்தி உள்ளது. பாலியல் பலாத்கார விவகாரத்தை அரசியல் ஆக்க வேண்டாம் என ஏற்கனவே பிரதமர் மோடி பேசியிருந்தார். இந்நிலையில் மத்திய அமைச்சர் சந்தோஷ் கங்கர் பேசுகையில், “இந்தியா போன்ற பெரிய நாடுகளில் நடக்கும் ஒன்று, இரண்டு பாலியல் பலாத்கார சம்பவங்களை பெரிதாக்க கூடாது,”என்றார். பா.ஜனதாவினரின் வரம்பு மீறிய பேச்சுக்களால் அக்கட்சியின் தலைக்கு தர்மசங்கடம் ஏற்படுகிறது.

இந்நிலையில் பொது பிரச்சனைகளில் வரம்பு மீறி பேச வேண்டாம் என பா.ஜனதா எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கு பிரதமர் மோடி உத்தரவிட்டு உள்ளார்.  

மீடியாக்கள் முன்னதாக சர்ச்சைக்குரிய வகையில் பேசுவதற்கு தெளிவான செய்தியை கொடுத்து உள்ளார். “நாம் தொடர்ந்து செய்யும் தவறுகள் மீடியாக்களுக்கு தீனி போட்டு வருகிறது. மீடியாக்கள் கேமராக்கள் முன்னதாக பேசும்போது, நாம் சிறந்த சமூக விஞ்ஞானிகள் போலவும், ஆய்வாளர்கள் போலவும் நினைத்துக்கொண்டு வார்த்தைகளை பிரயோகம் செய்கிறோம். அது நம்மை சிக்க வைக்கிறது, நாம் வாய் தவறி கூறும் வார்த்தைகளை மீடியாக்கள் ஊதி பெரிதாக்குகிறது. தீவிரவாதம், பாலியல் பலாத்காரம் என எந்த பிரச்னைகளை எடுத்து கொண்டாலும்  இது நடக்கிறது. இதை பற்றிய கொஞ்சமும் கவலைப்படாமல் கருத்துக்களை தெரிவித்து வருகிறோம். இதனால் கட்சிக்கும், ஆட்சிக்கும் அவப்பெயர் உருவாகி வருகிறது.

எனவே இதுபோன்ற அர்த்தமற்ற கருத்துக்கைள கூறுவதையும், ஆர்வக்கோளாறில் கருத்துக்களை தெரிவிப்பதையும் நாம் உடனடியாக நிறுத்தி கொள்ள வேண்டும். ஊடகங்கள் அவர்களது பணியை செய்யட்டும்,” என்று கூறிஉள்ளார். 

நாமோ ‘ஆப்’ வீடியோ கான்பரன்சிங் வாயிலாக பாஜக எம்.பிக்களிடம் உரையாற்றுகையில் பிரதமர் மோடி மேற்கண்ட உத்தரவை பிறப்பித்து உள்ளார். 

சமூக ஊடகங்களின் முழுதிறனையும் பயன்படுத்துமாறு கட்சியின் தலைவர்களுக்கு பிரதமர் மோடி அறிவுரை வழங்கி உள்ளார். 



Next Story