கர்நாடகா தேர்தல்: ‘இது இந்து வீடு... காங்கிரஸ் கட்சியினருக்கு அனுமதி இல்லை’ வீடுகளில் நோட்டீசு


கர்நாடகா தேர்தல்: ‘இது இந்து வீடு... காங்கிரஸ் கட்சியினருக்கு அனுமதி இல்லை’ வீடுகளில் நோட்டீசு
x
தினத்தந்தி 23 April 2018 2:46 PM GMT (Updated: 23 April 2018 2:46 PM GMT)

கர்நாடகாவில் ‘இது இந்து வீடு... காங்கிரஸ் கட்சியினருக்கு அனுமதி இல்லை’ என வீடுகளில் நோட்டீஸ் ஒட்டப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. #Congress


 பெங்களூரு,


கர்நாடக சட்டசபைக்கு அடுத்த மாதம் (மே) 12-ந்தேதி தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலில் தங்கள் கட்சிகள் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் அடங்கிய பட்டியலை அரசியல் கட்சிகள் வெளியிட்டு வருகின்றன. பிரசாரமும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

தட்சிண கன்னட மாவட்டம் பண்ட்வால் சட்டசபை தொகுதிக்கு உட்பட்டது கன்யானா கிராமம். கடந்த ஆண்டு கன்யானா கிராமத்தை சேர்ந்த 21 வயது கல்லூரி மாணவி தனது காதலனான கேரளாவை சேர்ந்த சமீர்(வயது 27) என்பவருடன் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டார். இதற்கு இந்து அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், இந்த திருமணத்துக்கு காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் உதவியதாக அவர்கள் குற்றம்சாட்டினர். இந்த நிலையில், இந்துக்கள் அதிகமாக வாழும் கன்யானா கிராமத்தில் வருகிற சட்டசபை தேர்தலையொட்டி, 200–க்கும் அதிகமான வீடுகளில் காங்கிரசார் வாக்கு சேகரிக்க வீட்டுக்குள் வரக்கூடாது என்று நோட்டீசு ஒட்டப்பட்டு உள்ளது.

 இதுதொடர்பாக, இந்துக்களின் வீடுகளில் ஒட்டப்பட்டுள்ள நோட்டீசில் ‘இது இந்து வீடு. கபடநாடக காதலுக்கு ஆதரவளித்து இளம்பெண்ணை மதமாற்றம் செய்ய உதவிய காங்கிரஸ் கட்சியினருக்கு இங்கு அனுமதி இல்லை. இந்த வீட்டிலும் பெண் குழந்தைகள் உள்ளனர்‘ என எழுதப்பட்டு உள்ளது. இந்த சம்பவம் கன்யானா மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. காங்கிரசாரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Next Story