கர்நாடக தேர்தல் : தொங்கு சட்டசபையே அமையும் கருத்துக்கணிப்பில் தகவல்


கர்நாடக தேர்தல் : தொங்கு சட்டசபையே  அமையும் கருத்துக்கணிப்பில் தகவல்
x
தினத்தந்தி 24 April 2018 6:47 AM GMT (Updated: 24 April 2018 6:47 AM GMT)

கர்நாடகாவில் தொங்கு சட்டப்பேரவை அமையும் என்று சமீபத்திய கருத்துக் கணிப்புகளில் தெரியவந்துள்ளது. #KarnatakaAssemblyPolls

பெங்களூர்

224 தொகுதிகளைக் கொண்ட கர்நாடக சட்டசபை தேர்தல் அடுத்த மாதம்(மே) 12-ந் தேதி நடக்கிறது. இதையொட்டி வேட்புமனு தாக்கல் கடந்த 17-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. முதல்-மந்திரி சித்தராமையா, கர்நாடக பா.ஜனதா தலைவர் எடியூரப்பா, ஜனதா தளம்(எஸ்) கட்சி மாநில தலைவர் குமாரசாமி உள்பட முக்கிய தலைவர்கள் மனு தாக்கல் செய்துள்ளனர். நேற்று வரை 1,127 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. மனு தாக்கல் செய்ய இன்று கடைசி நாள் ஆகும்.

இந்த நிலையில் சட்டசபை தேர்தல் குறித்த கருத்து கணிப்பில் கர்நாடகா  தொங்கு சட்டப்பேரவை அமையும் என்று சமீபத்திய கருத்துக் கணிப்புகளில் தெரியவந்துள்ளது. 224 தொகுதிகளில் பெரும்பான்மைக்குத் தேவையான 112 தொகுதி, எந்தக் கட்சிக்கும் கிடைக்காது என தெரியவந்து உள்ளது

ஏபிபி என்ற  செய்தி நிறுவனத்தின் கருத்துக் கணிப்பில், 

பா.ஜ.க. தனிப்பெரும் கட்சியாக உருவெடுக்கும் என்றும், அக்கட்சி 89 முதல் 95 தொகுதிகள் வரை வெற்றி பெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் 85 முதல் 91 தொகுதிகளிலும், மதச்சார்பற்ற ஜனதா தளம் 32 முதல் 38 தொகுதிகள் வரை வெற்றி பெறும் என்றும் தெரிவித்துள்ளது. 

இந்தியா டுடே கருத்துக் கணிப்பின்படி, காங்கிரஸ் கட்சி 90 அல்லது 91 தொகுதிகளில் வெற்றி பெறும் என்று தெரிவித்துள்ளது. பா.ஜ.க. 76 முதல் 86 தொகுதிகளில் வெல்ல வாய்ப்பிருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.

டிவி9 கருத்துக் கணிப்பில், காங்கிரஸ் கட்சி 102 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு அடுத்தபடியாக பாரதீய ஜனதா  96 இடங்களில் வெற்றி பெறும் என்று கருத்துக் கணிப்பில் தெரிய வந்துள்ளது. 

டைம்ஸ் நவ் விஎம்ஆர் இணைந்து நடத்திய கருத்துக் கணிப்பில் காங்கிரசுக்கு 91 இடங்களும், பாரதிய ஜனதாவுக்கு 89 இடங்களும் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மதச்சார்பற்ற ஜனதா தளம் 40 இடங்களை பிடிக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.


Next Story