பாராளுமன்றத்திலும் பெண்களுக்கு பாலியல் வற்புறுத்தல்; மோடியை சர்ச்சைக்குள் இழுத்த - ரேணுகா சவுத்ரி


பாராளுமன்றத்திலும் பெண்களுக்கு பாலியல் வற்புறுத்தல்; மோடியை சர்ச்சைக்குள் இழுத்த - ரேணுகா சவுத்ரி
x
தினத்தந்தி 24 April 2018 2:58 PM GMT (Updated: 24 April 2018 6:54 PM GMT)

பாராளுமன்றத்திலும் பெண்களை பாலியல் வற்புறுத்தலுக்கு உள்ளாக்கும் சம்பவங்கள் நடைபெறுவதாக காங்கிரஸ் முன்னாள் எம்.பி. ரேணுகா சவுத்ரி கூறியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #RenukaChowdhury


புதுடெல்லி,

பிரபல நடன இயக்குநர் சரோஜ் கான், பாலிவுட்டில் நடிகைகள் சம்மதத்துடனேயே பாலியல் சம்பவங்கள் நடைபெறுகிறது, இதனால், அவர்களின் வாழ்வாதாரம் மேம்படுகிறது என பேசியது சர்ச்சையாகியது. இதனையடுத்து சமூக வலைதளங்களில் அவருக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டு வருகிறது. இவ்விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.பி. ரேணுகா சவுத்ரி பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதாவது பாராளுமன்றத்திலும் பெண்களை பாலியல் வற்புறுத்தலுக்கு உள்ளாக்கும் சம்பவங்கள் நடைபெறுவதாக கூறிஉள்ளார்.

ரேணுகா சவுத்ரி பேசுகையில், “சினிமாத்துறையில் மட்டும் கிடையாது, எல்லா துறைகளிலும் பெண்களுக்கு பாலியல் தொல்லைகள் அளிக்கப்படுகிறது. பாராளுமன்றத்திலும் பெண்களை பாலியல் வற்புறுத்தலுக்கு உள்ளாக்கும் சம்பவங்கள் நடைபெறுகின்றது. பெண்கள் பாலியல் ரீதியாக வற்புறுத்தப்படுவதற்கு பாராளுமன்றம் விலக்கல்ல. இது ஒரு கசப்பான உண்மை,” என கூறிஉள்ளார். இவ்விவகாரத்தில் பிரதமர் மோடியை இழுத்து உள்ள ரேணுகா சவுத்ரி, “பிரதமர் மோடி எனக்கு எதிராக பாராளுமன்றத்தில் தரக்குறைவான கருத்தை தெரிவித்த போது, ஒரு பெண்ணாக என்னுடைய கண்ணியத்தை பறித்துவிட்டார்,” என கூறிஉள்ளார். 

“பாராளுமன்றத்தில் பிரதமர் ஒரு பெண்ணை  அவமதிக்கும் போது, கிரண் ரிஜ்ஜு ஆட்சேபனைக்குரிய வீடியோவை வெளியிட்ட போது எனக்கு அவதூறை ஏற்படுத்தியது,” எனவும் குறிப்பிட்டு உள்ளார். 

பாராளுமன்றத்தில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பிரதமர் மோடி பிப்ரவரியில் பேசினார். அப்போது, பிரதமர் பேச்சின் இடையே காங்கிரஸ் எம்.பி. ரேணுகா சவுத்ரி சத்தமாக சிரித்தார். இதைக்கேட்ட அனைத்து எம்.பி.க்களும் அதிர்ச்சி அடைந்தனர். மாநிலங்களவை தலைவர் வெங்கய்ய நாயுடுவும், ரேணுகா சவுத்ரியை கண்டித்தார். ரேணுகா சவுத்ரியின் சிரிப்பை குறிப்பிட்டு பேசிய பிரதமர் மோடி, ராமாயணா, மகாபாரதம் தொடருக்கு பின் இப்படி ஒரு சிரிப்பை கேட்கிறோம் என்று கூறினார். இதைக் கேட்டு அனைத்து எம்.பி.க்களும் சிரித்தனர். ஆனால், பாஜகவின் தகவல் தொழில்நுட்பப் பிரிவு தலைவர், ரேணுகா சவுத்ரியின் சிரிப்பு மகாபாரதம், ராமாயணத்தில் யாருடையது என்று குறிப்பிட்டு ட்வீட் செய்து இருந்தார். 

ராவணன் தங்கை சூர்ப்பனகை என குறிப்பிட்டது  சமூக வலைதளஙகளில் பெரும் விவாதப்பொருளானது. காங்கிரஸ் கட்சி கடும் அமளியிலும் ஈடுபட்டது. ரேணுகா ஆதார் திட்டம் தொடர்பாக மோடியின் முந்தைய பேச்சையும், இப்போதைய பேச்சையும் ஒப்பிட்ட போது சிரிப்பு வந்தது என்றார். இப்போது இதனை குறிப்பிட்டு இப்போது ரேணுகா சவுத்ரி பேசிஉள்ளார். 

 ரேணுகா சவுத்ரி, உலக அளவில் புகழ்பெற்ற நடிகைகள் தங்களுக்கு நேர்ந்த பாலியல் தொல்லைகளை #Metoo பிரச்சாரம் மூலம் வெளியில் பேச எவ்வளவு நீண்ட காலம் ஆகியிருக்கிறது. இப்போது, இந்தியாவிலும் அவ்வாறு பெண்கள் தாங்கள் சந்தித்த பாலியல் வற்புறுத்தல்கள் குறித்து வெளிப்படையாகக் கூற வேண்டிய தருணம் இது” எனவும் குறிப்பிட்டார். 

Next Story