லாலு பிரசாத் விவகாரம்: எய்ம்ஸ் மருத்துவமனை ஊழியர்கள் மீது மர்ம நபர்கள் தாக்குதல் என போலீசில் புகார்


லாலு பிரசாத் விவகாரம்:  எய்ம்ஸ் மருத்துவமனை ஊழியர்கள் மீது மர்ம நபர்கள் தாக்குதல் என போலீசில் புகார்
x
தினத்தந்தி 30 April 2018 1:04 PM GMT (Updated: 30 April 2018 1:04 PM GMT)

லாலு பிரசாத் யாதவை ராஞ்சி மருத்துவமனைக்கு கொண்டு செல்ல எதிர்ப்பு தெரிவித்து எய்ம்ஸ் மருத்துவமனை ஊழியர்கள் மீது மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தி உள்ளனர். #AIIMSStaff

புதுடெல்லி,

ராஷ்டீரிய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் நான்கு மாட்டு தீவன ஊழல் வழக்குகளில் மொத்தம் 27 வருட சிறை தண்டனை பெற்றுள்ளார்.  ஜார்கண்டின் ராஞ்சி நகரில் உள்ள சிறையில் தண்டனை அனுபவித்து வந்த நிலையில் அவருக்கு உடல் நல குறைவு ஏற்பட்டது.

இதனை தொடர்ந்து டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக லாலு பிரசாத் அனுமதிக்கப்பட்டார்.  காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று காலை அங்கு சென்று லாலுவின் உடல்நலம் பற்றி கேட்டறிந்துள்ளார்.

இந்நிலையில், லாலுவின் உடல் நலம் சீராக உள்ளது.  அவர் பயணம் மேற்கொள்ளலாம் என எய்ம்ஸ் மருத்துவமனை இன்று தெரிவித்தது.  ஆனால் ராஞ்சி மருத்துவமனையில் சிகிச்சை பெற விருப்பம் இல்லை.  அங்கு எனக்கு தேவையான சிகிச்சை அளிக்க போதிய அளவில் வசதிகள் இல்லை என லாலு பிரசாத் கூறினார்.

அதனால் எய்ம்ஸ் மருத்துவமனையிலேயே தொடர்ந்து தங்கி சிகிச்சை பெற அனுமதிக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திற்கு அவர் கடிதம் எழுதியுள்ளார்.

எனினும், லாலு பிரசாத்தின் உடல் நலம் தேறி விட்ட நிலையில் அவரை ராஞ்சி மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்படி எய்ம்ஸ் மருத்துவமனை அறிவுறுத்தியது.  இதனை தொடர்ந்து அதிகாரிகள் லாலு பிரசாத் யாதவை ராஞ்சி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

இந்த நிலையில், லாலுவை ராஞ்சி மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்கு எதிர்ப்பு தெரிவித்த சில மர்ம நபர்கள் எய்ம்ஸ் மருத்துவமனை ஊழியர்களுடன் மோதலில் ஈடுபட்டு உள்ளனர் என டெல்லி போலீசில் புகார் ஒன்று கொடுக்கப்பட்டு உள்ளது.

அதில், அடையாளம் தெரியாத 8 முதல் 10 பேர் எய்ம்ஸ் மருத்துவமனை ஊழியர்கள் மீது தாக்குதல் நடத்தினர்.  மருத்துவமனையின் கண்ணாடி கதவு உடைக்கப்பட்டது.  இதில் குர்ஷித் ஆலம் என்ற பாதுகாவலருக்கு காயம் ஏற்பட்டது.  அதன்பின் எய்ம்ஸ் மருத்துவமனை பாதுகாப்பு ஊழியர்கள் உதவியால் ஊழியர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டது.  வன்முறையாளர்களும் கலைந்து  சென்றனர்.  எனவே, இந்த விவகாரத்தில் எப்.ஐ.ஆர். ஒன்று பதிவு செய்யப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.


Next Story