திருமணத்தில் கொண்டாட்டத்திற்காக துப்பாக்கியால் சுட்டதில் மணமகன் பலி; நண்பர் தப்பியோட்டம்


திருமணத்தில் கொண்டாட்டத்திற்காக துப்பாக்கியால் சுட்டதில் மணமகன் பலி; நண்பர் தப்பியோட்டம்
x
தினத்தந்தி 30 April 2018 2:59 PM GMT (Updated: 2018-04-30T20:29:50+05:30)

திருமணத்தில் கொண்டாட்டத்திற்காக துப்பாக்கியால் சுட்டதில் மணமகன் பலியானார். #CelebratoryFiring

ஷாஜகான்பூர்,

உத்தர பிரதேசத்தின் லகிம்பூர் கேரி மாவட்டத்தில் ராம்பூர் கிராமத்தில் திருமண நிகழ்ச்சி ஒன்று நடந்தது.  இதில் மணமகன் சுனில் வர்மா மேடையில் மணக்கோலத்தில் அமர்ந்து இருந்துள்ளார்.

அவரது நெருங்கிய நண்பரான ராம்சந்திரா என்பவர் மேடை அருகே நின்று கொண்டு இருந்துள்ளார்.  அவரிடம் உரிமம் பெற்ற துப்பாக்கி ஒன்று இருந்துள்ளது.

இந்த நிலையில், மேடையில் அமர்ந்த மணமகனை நோக்கி துப்பாக்கியை வைத்திருந்த ராம்சந்திரா 2 முறை சுட்டுள்ளார்.  அதில் முதல் முறை துப்பாக்கி குண்டுக்கு மணமகன் தப்பினார்.  தொடர்ந்து 2வது முறையும் துப்பாக்கியால் ராம்சந்திரா சுட்டுள்ளார்.  இதில் குண்டு மணமகன் சுனில் நெஞ்சில் பாய்ந்தது.  அவர் மேடையில் சரிந்து பலியானார்.

இந்த சம்பவத்தினை அடுத்து ராம்சந்திரா அங்கிருந்து தப்பினார்.  அவர் மீது பிரிவு 302ன் கீழ் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது.  இதுபற்றி போலீசார் கூறும்பொழுது, திருமணத்தில் கொண்டாட்டத்திற்காக சுட்டதில் மணமகன் பலியாகி உள்ளார் என முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.  ஆனால், போலீசார் வேறு கோணங்களிலும் விசாரணை நடத்தி வருகின்றனர் என கூறினார்.

மேடையில் மணமகன் சுட்டு கொல்லப்படும் காட்சி வீடியோவில் பதிவாகி வைரலாக பரவி வருகிறது.


Next Story