தேசிய செய்திகள்

உயர் நீதித்துறை நீதிபதிகள் நியமனத்தில் சுப்ரீம் கோர்ட்டு, மத்திய அரசு மோதல் + "||" + High jurisdiction in the appointment of judges Supreme Court, Central Government Conflict

உயர் நீதித்துறை நீதிபதிகள் நியமனத்தில் சுப்ரீம் கோர்ட்டு, மத்திய அரசு மோதல்

உயர் நீதித்துறை நீதிபதிகள் நியமனத்தில் சுப்ரீம் கோர்ட்டு, மத்திய அரசு மோதல்
உயர்நீதித்துறை நீதிபதிகள் நியமனத்தில், சுப்ரீம் கோர்ட்டுக்கும், மத்திய அரசுக்கும் இடையேயான மோதல் போக்கு, பகிரங்கமானதால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.
புதுடெல்லி,

சுப்ரீம் கோர்ட்டு மற்றும் ஐகோர்ட்டு நீதிபதிகள் நியமனத்தில் சுப்ரீம் கோர்ட்டின் தலைமை நீதிபதி தலைமையில் மூத்த நீதிபதிகளை கொண்ட கொலிஜியம், மத்திய அரசுக்கு பரிந்துரை செய்கிறது. மத்திய அரசு பரிசீலித்து முடிவு எடுக்கிறது.


ஆனால் இதில் இரு தரப்பினருக்கு இடையே மோதல் போக்கு உள்ளது.

சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியாக உத்தரகாண்ட் ஐகோர்ட்டு தலைமை நீதிபதி கே.எம். ஜோசப்பை நியமிக்க கொலிஜியம் செய்த பரிந்துரையை 3 மாதங்களுக்கு பிறகு சமீபத்தில் மத்திய அரசு திருப்பி அனுப்பியது நினைவுகூரத்தக்கது.

இந்த நிலையில் உயர்நீதித்துறை நீதிபதிகள் நியமனம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் மதன் பி. லோகுர், தீபக் குப்தா ஆகியோர் தலைமையில் நேற்று விசாரணை நடைபெற்றது.

நீதிபதிகளிடம் மத்திய அரசின் தலைமை வக்கீல் கே.கே. வேணுகோபால், மணிப்பூர், மேகாலயா, திரிபுரா மாநிலங்களில் 40 நீதிபதிகள் பணியிடம் காலியாக உள்ளபோது, கொலிஜியம் 3 பேரை மட்டுமே பரிந்துரைத்து இருப்பதாக கூறினார். மேலும் கொலிஜியம் பரிந்துரை செய்யாமல் அரசால் ஒன்றும் செய்ய முடியாது என சுட்டிக்காட்டினார்.

உடனே நீதிபதிகள் அவரிடம், “கொலிஜியம் சிபாரிசு செய்த எத்தனை பேரது பெயர்கள் உங்களிடம் நிலுவையில் உள்ளன, சொல்லுங்கள்” என்றனர்.

அதற்கு அவர் தான் கண்டறிந்து சொல்வதாக பதில் அளித்தபோது நீதிபதிகள், “அரசு தரப்பு என்றால், நாங்கள் கண்டறிந்து சொல்ல வேண்டும் என்று சொல்லி விடுகிறீர்கள்” என சுருக்கென்று கூறினார்.

தொடர்ந்து, “அரசுதான் நியமனங்கள் செய்யவேண்டும்” என்று நீதிபதிகள் நினைவூட்டினர்.

மேகாலயா ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாக யாக்கூப் மிர்ரையும், மணிப்பூர் ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாக ராமலிங்கம் சுதாகரையும் நியமிக்க கொலிஜியம் கடந்த மாதம் 19-ந் தேதி பரிந்துரை செய்தது. இதுபற்றி நீதிபதிகள் கேள்வி எழுப்பியபோது கே.கே. வேணுகோபால், “ஆய்வில் இருக்கிறது, விரைவில் உத்தரவு போடப்படும்” என கூறியபோது, நீதிபதிகள், “விரைவில் என்பது 3 மாதங்களாக கூட ஆகி விடும்” என்றனர்.

இப்படி சுப்ரீம் கோர்ட்டுக்கும், மத்திய அரசுக்கும் உயர்நீதித்துறை நீதிபதிகள் நியமனத்தில் உள்ள மோதல் போக்கு பகிரங்கமானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.