தேசிய செய்திகள்

இறக்குமதி மணலை ஆய்வு செய்து தமிழக அரசு 16-ந்தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு + "||" + To file a Tamil Nadu government report Supreme Court directive

இறக்குமதி மணலை ஆய்வு செய்து தமிழக அரசு 16-ந்தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

இறக்குமதி மணலை ஆய்வு செய்து
தமிழக அரசு 16-ந்தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
இறக்குமதி மணலை ஆய்வு செய்து வருகிற 16-ந்தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்யுமாறு தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.
புதுடெல்லி, 

தமிழ்நாட்டில் தனியார் நிறுவனம் ஒன்று மலேசியாவில் இருந்து கப்பல் மூலம் தூத்துக்குடிக்கு இறக்குமதி செய்த 55 ஆயிரம் டன் “சிலிகா சாண்ட்” என்ற மணலை துறைமுகத்துக்கு வெளியில் எடுத்துச் செல்லவும், அரசின் அனுமதி இன்றி மணலை இறக்குமதி செய்யவும் மாவட்ட நிர்வாகம் தடை விதித்தது.

இதனை எதிர்த்து மணல் இறக்குமதி செய்யும் நிறுவனங்கள் தாக்கல் செய்த ரிட் மனுவை விசாரித்த மதுரை ஐகோர்ட்டு ஒற்றை நீதிபதி இந்த தடை உத்தரவை ரத்து செய்ததோடு, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மணல் குவாரிகளையும் கிரானைட் குவாரிகளையும் மூடுவதற்கு உத்தரவிட்டார்.

இந்த உத்தரவை எதிர்த்து திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர்கள் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை மதுரை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது.

மதுரை ஐகோர்ட்டின் இந்த தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, மதுரை ஐகோர்ட்டு வழங்கிய தீர்ப்புக்கு கடந்த பிப்ரவரி 5-ந்தேதி இடைக்கால தடை விதித்ததோடு தமிழக அரசின் மனுவுக்கு பதில் அளிக்குமாறு மணல் இறக்குமதி நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.

இந்த நிலையில், சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் மதன் பி.லோகுர் தீபக் குப்தா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இந்த மனு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. தமிழக அரசு தரப்பில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் சுப்பிரமணிய பிரசாத், அரசு வக்கீல் யோகேஷ் கன்னா ஆகியோர் ஆஜராகி, கடந்த 6-ந்தேதி தமிழக அரசு வெளியிட்ட அரசாணையில் மணலை வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்தாலும் அதை பொதுப்பணித்துறைக்கே விற்க முடியும் என்று கூறப்பட்டுள்ளது என கூறி அந்த அரசாணையை கோர்ட்டில் தாக்கல் செய்தனர்.

இதைத்தொடர்ந்து தனியார் நிறுவனம் தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் ரஞ்சித் குமார் வாதாடுகையில், “மணலை இறக்குமதி செய்யவும் விற்கவும் மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது. மலேசியாவில் இருந்து மணலை இறக்குமதி செய்து அது துறைமுகத்துக்கு வந்து இறங்கிய பிறகுதான் இந்த அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது. ஒரு டன்னுக்கு ரூ.2,300 வீதம் மொத்தம் 55 ஆயிரம் டன் மணல் இறக்குமதி செய்யப்பட்டு தூத்துக்குடி துறைமுகத்தில் உள்ளது” என்று கூறினார்.

உடனே நீதிபதிகள், “இறக்குமதி செய்யப்பட்ட மணலை தமிழகத்தில் எந்த பகுதியில் விற்பனை செய்ய இருக்கிறீர்கள்?” என்று கேள்வி எழுப்பினார்கள்.

அதற்கு வக்கீல் ரஞ்சித் குமார், “தூத்துக்குடி, கன்னியாகுமரி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் விற்க திட்டமிட்டு இருக்கிறோம்” என்று கூறினார்.

இதைத்தொடர்ந்து நீதிபதிகள், “மணல் இறக்குமதியான பிறகு இந்த அரசாணை வெளியிடப்பட்டு இருக்கிறது. இதனை ஏற்றுக்கொள்ள முடியாது. அந்த நிறுவனம் வியாபாரத்துக்காக மணலை இறக்குமதி செய்து உள்ளது. மனுதாரர் வியாபாரி என்பதால் மணலை விற்பதற்கு அனுமதிக்கிறீர்களா? அல்லது தமிழக அரசே வாங்கிக் கொள்கிறீர்களா? விலைக்கு வாங்குவதாக இருந்தால் என்ன விலைக்கு வாங்க முடியும்? எப்போது வாங்கப்படும்? என்பதையும், எவ்வளவு வாங்கப்படும்? என்பதையும் தமிழக அரசு அதிகாரிகளிடம் கேட்டு 12.45 மணிக்கு கோர்ட்டுக்கு தெரிவியுங்கள்” என்று கூறினர்.

அதன்படி, மீண்டும் 12.45 மணிக்கு தமிழக அரசு தரப்பில் மூத்த வக்கீல் முகுல் ரோகத்கி ஆஜராகி, “இந்த நிறுவனம் மலேசியாவில் இருந்து இறக்குமதி செய்து துறைமுகத்தில் வைக்கப்பட்டுள்ள மணல் கட்டுமானத்துக்கு உகந்தது அல்ல. அந்த மணலில் 81 சதவீதம் சிலிகா என்ற பொருள் அடங்கி உள்ளது. பொதுவாக மணலில் 60-ல் இருந்து 62 சதவீதம் வரை சிலிகா இருந்தால்தான் கட்டுமானப்பணிக்கு அந்த மணலை பயன்படுத்த முடியும். எனவே, இந்த மணலை சோதனை செய்ய வேண்டும். இதற்கு மேலும் சிறிது அவகாசம் தேவைப்படுகிறது” என்று கூறினார்.

இதனை மறுத்த மனுதாரர் வக்கீல் ரஞ்சித் குமார், இந்த மணல், மலேசியாவில் முறையாக சோதனை செய்யப்பட்டு கட்டுமானத்துக்கு உகந்தது என்று நிரூபிக்கப்பட்டு உள்ளது என்றார். அத்துடன், “தமிழக அரசு சோதனை செய்து இந்த மணலை வாங்க முன்வரவில்லை என்றால் நாங்கள் அதனை விற்பதற்கும், வெளிமாநிலங்களுக்கு அனுப்பவும் அனுமதி வழங்க வேண்டும்” என்றார்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், “இந்த வழக்கு வரும் மே 16-ந்தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது. அதற்குள் உரிய ஆய்வு மேற்கொண்டு மணலை தமிழக அரசு வாங்குவது குறித்தும், அப்படி வாங்கினால் என்ன விலைக்கு வாங்க முடியும் என்பது பற்றியும் கோர்ட்டுக்கு அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும்” என்று உத்தரவிட்டனர்.

இதற்கிடையே, காவிரி மற்றும் கொள்ளிடம் ஆற்றுப்படுகையில் அடுத்த 50 ஆண்டுகளுக்கு மணல் அள்ள தடை விதிக்க கோரும் மனுவும், மணல் இறக்குமதி தொடர்பான மனுவுடன் ஒன்றாக இணைக்கப்பட்டு இருந்தது. நேற்றைய விசாரணையின் போது அந்த மனுவை தனியாக பிரித்து கோடை விடுமுறைக்கு பிறகு விசாரிக்கப்படும் என்று நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.

தொடர்புடைய செய்திகள்

1. நடன பார்கள் பற்றிய சில சட்ட பிரிவுகளை தள்ளுபடி செய்து உத்தரவிட்ட சுப்ரீம் கோர்ட்டு
மகாராஷ்டிராவில் நடன பார்களுக்கான சில சட்ட பிரிவுகளை சுப்ரீம் கோர்ட்டு இன்று தள்ளுபடி செய்து தீர்ப்பளித்து உள்ளது.
2. ஸ்டெர்லைட் வழக்கு; சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புக்கு எதிராக சீராய்வு மனு தாக்கல் செய்வோம்: அமைச்சர் கடம்பூர் ராஜூ
ஸ்டெர்லைட் வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புக்கு எதிராக சீராய்வு மனு தாக்கல் செய்வோம் என அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறியுள்ளார்.
3. ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான தமிழக அரசு மனு மீது சுப்ரீம் கோர்ட்டில் 8ந்தேதி விசாரணை
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான தமிழக அரசு மனு மீது சுப்ரீம் கோர்ட்டில் வருகிற 8ந்தேதி விசாரணை நடைபெற உள்ளது.
4. ரபேல் விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை நிராகரித்த ராகுல் காந்தி, பிரதமர் மோடி மீது குற்றச்சாட்டு
ரபேல் விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை நிராகரித்த ராகுல் காந்தி பிரதமர் மோடி மீதான குற்றச்சாட்டை நீட்டித்துள்ளார்.
5. ரபேல் விவகாரம்: ஜேபிசி விசாரணைக்கு உத்தரவிடுங்கள் பார்க்கலாம் மோடி, அரசுக்கு காங்கிரஸ் சவால்
ரபேல் விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை அடுத்து ஜேபிசி விசாரணைக்கு உத்தரவிடுங்கள் பார்க்கலாம் என பிரதமர் மோடி மற்றும் மத்திய அரசுக்கு காங்கிரஸ் சவால் விடுத்துள்ளது.