பிளிப் கார்ட்டை வால்மார்ட் வாங்குவதால் இந்தியாவில் ஒரு கோடி பேருக்கு வேலை வாய்ப்பா?


பிளிப் கார்ட்டை வால்மார்ட் வாங்குவதால் இந்தியாவில் ஒரு கோடி பேருக்கு வேலை வாய்ப்பா?
x
தினத்தந்தி 11 May 2018 12:00 AM GMT (Updated: 10 May 2018 8:11 PM GMT)

பிளிப் கார்ட்டை வால்மார்ட் வாங்குவதால் இந்தியாவில் ஒரு கோடி பேருக்கு வேலை வாய்ப்பு உண்டாகும் என்று வால்மார்ட் தலைமை செயல் அதிகாரி கூறினார்.

புதுடெல்லி,

நமது நாட்டில் ஆன்லைன் வர்த்தகம் என்று அழைக்கப்படுகிற இணையவழி வர்த்தகம், சமீப காலமாக பிரபலமாகி வருகிறது. இங்கு பெங்களூருவை தலைமையிடமாக கொண்டு 2007-ம் ஆண்டு ‘ஸ்டார்ட் அப்’ நிறுவனமாக தொடங்கப்பட்ட ‘பிளிப் கார்ட்’ இதில் நல்லதொரு பங்களிப்பை செய்து வந்தது.

இந்த நிலையில், இந்த நிறுவனத்தின் 77 சதவீத பங்குகளை அமெரிக்க ஆன்லைன் சந்தையில் கொடிகட்டிப் பறக்கிற நிறுவனங்களில் ஒன்றான ‘வால்மார்ட்‘ நிறுவனம் 16 பில்லியன் டாலர் (சுமார் ரூ.1 லட்சத்து 7 ஆயிரத்து 200 கோடி) கொடுத்து வாங்கி, தன் வசப்படுத்துகிறது. இதற்கான பேரம் முடிந்து உள்ளது. இது, உலக அளவில் ஆன்லைன் சந்தையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அதே நேரத்தில் இந்தப் பேரம் சர்ச்சையையும் ஏற்படுத்தி உள்ளது. இந்தப் பேரம் பற்றிய தகவல் நேற்று முன்தினம் வெளியான சிறிது நேரத்தில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் பொருளாதார பிரிவான சுதேசி ஜக்ரான் மஞ்ச், கடுமையாக சாடியது.

“இந்தியாவுக்குள் புறவாசல் வழியாக நுழைவதற்கு வால்மார்ட் விதிமுறைகளை சுற்றி வளைத்து இருக்கிறது, நாட்டு நலன் கருதி இதில் பிரதமர் மோடி தலையிட வேண்டும்” என்று அது கூறியது.

இது தொடர்பாக அந்த அமைப்பின் இணை ஒருங்கிணைப்பாளர் பிரதமர் மோடிக்கு ஒரு அவசர கடிதம் எழுதினார்.

அதில் அவர், “இந்த நடவடிக்கை, சிறிய மற்றும் நடுத்தர வணிகங்களையும், சிறிய கடைகளையும், அதிக வேலை வாய்ப்புகளை உருவாக்குதற்கான வாய்ப்புகளையும் ஒழித்துக்கட்டி விடும். ஏற்கனவே பெரும்பாலான சிறிய தொழில் நிறுவனங்கள் இருந்து தாக்குப்பிடிப்பதற்கு போராடி வருகின்றன. வால்மார்ட் நிறுவனத்தின் பிரவேசம், அவற்றுக்கு மேலும் பிரச்சினைகளை ஏற்படுத்தி விடும்” என்று குறிப்பிட்டு உள்ளார்.

இந்த நிலையில் வால்மார்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி டக் மேக்மில்லன், டெல்லியில் நேற்று குறிப்பிட்ட சில பத்திரிகையாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது அவரிடம் இந்த பேரம் தொடர்பாக பிரதமர் மோடியையோ, மூத்த மந்திரிகள் யாரையுமோ சந்தித்து பேச முடியாமல் போனது பற்றி கேள்வி எழுப்பினர்.

அதற்கு அவர், “கடந்த காலத்தில் அதிகாரிகளை சந்தித்து பேசி இருக்கிறோம். எதிர்காலத்திலும் சந்தித்து பேசுவோம். பிளிப் கார்ட்டின் 77 சதவீத பங்குகளை நாங்கள் வாங்குவதற்கு போட்டி ஆணையத்தில் இருந்து ஒழுங்குமுறை ஒப்புதல் பெறுவதில் எந்த கஷ்டமும் இருப்பதாக கருதவில்லை. இந்த பேரம் வாடிக்கையாளர்களுக்கு நல்லது. நாட்டில் வேலை வாய்ப்புகளை உருவாக்கும். சமூகத்துக்கு உதவியாக இருக்கும்” என்று குறிப்பிட்டார்.

“பிரதமர் மோடியையோ, வர்த்தக மந்திரி சுரேஷ் பிரபுவையோ சந்திக்க முடியாமல் போனது, வால்மார்ட்டுக்கு சரியான வரவேற்பு இல்லை என்று உணர்த்துவது போல அமைந்து விடாதா?” என்று அர்த்தம் தொனிக்கும் வகையில் கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு அவர், “நான் உண்மையிலேயே அப்படி எடுத்துக்கொள்ளவில்லை. நாங்கள் எப்போதும் அரசின் அனைத்து மட்டங்களிலும் எல்லா நேரமும் தொடர்பில் உள்ளோம். இதற்கு முன்பும் சந்தித்து பேசி இருக்கிறோம். இனியும் சந்திப்போம்” என பதில் அளித்தார்.

“பிரதமர் மோடியை சந்திக்க நேரம் ஒதுக்கித்தருமாறு கேட்கப்பட்டதா?” என கேள்வி எழுப்பியபோது அவர், “வால்மார்ட் புதிய நிறுவனம் அல்ல. அந்த சந்திப்பு மிக முக்கியமான நிகழ்வு அல்ல. புகைப்படத்துக்காக ‘போஸ்’ கொடுப்பது எங்களுக்கு தேவை இல்லை” என பதில் அளித்தார்.

வால்மார்ட் வேலை வாய்ப்பை பெருக்கும் என்று கூறுவது பற்றி கேள்வி எழுப்பியபோது அவர், “இணையவழி வர்த்தக வெளியில் எவ்வளவு வேலை வாய்ப்புகள் உருவாகும் என துல்லியமாக கணித்து கூறுவது கடினம். ஆனாலும் பல லட்சக்கணக்கான நேரடி மற்றும் மறைமுக வேலை வாய்ப்புகள் உருவாகும் என மூன்றாம் தரப்பு ஆய்வு தெரிவிக்கிறது” என்று கூறினார்.

மேலும், “இனி வரும் ஆண்டுகளில் இந்தியாவில் 1 கோடி வேலை வாய்ப்புகளை உருவாக்குவதற்கான வாய்ப்பு உள்ளது. அதே நேரத்தில் இவ்வளவு காலத்துக்குள் இந்த வாய்ப்பு உருவாகும் என காலநிர்ணயம் செய்து கூற முடியாது. அதற்கான ஆய்வு எங்களிடம் உள்ளது. வேலை வாய்ப்பு என்பது கம்பெனியில் மட்டுமல்லாது, பிளிப்கார்ட் தளத்தில் தங்கள் பொருட்களை விற்பனை செய்கிற வினியோகஸ்தர்களிடமும் பெருகும். வால்மார்ட் 90 சதவீதத்துக்கும் மேலான பொருட்களை உள்நாட்டில், உள்ளூரில் வாங்குகிறது” என்று குறிப்பிட்டார்.

பிளிப் கார்ட் நிறுவனத்தின் 77 சதவீத பங்குகளை வாங்கி, அந்த நிறுவனத்தை தன்வசப்படுத்துவதின் மூலம் வால்மார்ட் நிறுவனம், இந்தியாவில் அமெரிக்க நிறுவனமான அமேசான் நிறுவனத்துக்கு பலத்த போட்டியை ஏற்படுத்த முயற்சிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. 

Next Story