கர்நாடகா தேர்தல் பிரசாரம் பிரதமர் மோடி - அமித்ஷாவுக்கு சத்ருஹன் சின்ஹா எதிர்ப்பு


கர்நாடகா தேர்தல் பிரசாரம் பிரதமர் மோடி - அமித்ஷாவுக்கு  சத்ருஹன் சின்ஹா எதிர்ப்பு
x
தினத்தந்தி 11 May 2018 9:19 AM GMT (Updated: 11 May 2018 9:19 AM GMT)

மடாதிபதியாக ஞானம், அனுபவம் தேவை பிரதமராக தகுதி தேவையில்லை என கர்நாடகா தேர்தல் பிரசாரம் குறித்து பிரதமர் மோடி - அமித்ஷாவுக்கு சத்ருஹன் சின்ஹா எதிர்ப்பு தெரிவித்து உள்ளார். #PMModi #ShatrughanSinha #KarnatakaElection2018

புதுடெல்லி

பிரதமர் மோடியும், பாஜக தலைவர் அமித் ஷாவும் தங்களின் பேச்சில் உள்ள கடுமையை, ஆவேசத்தைக் குறைத்து, கண்ணியம் காக்க வேண்டும். மடாதிபதியாக வருவதற்குக்கூடத் தகுதி வேண்டும், பிரதமராவதற்குத் தகுதி தேவையில்லை என்று பாஜக எம்.பியும், நடிகருமான சத்ருஹன் சின்ஹா அறிவுறுத்தியுள்ளார்.

பாஜகவின் மூத்த தலைவரான சத்ருஹன் சின்ஹா அவ்வப்போது கட்சியின் தலைமையை விமர்சித்தும், கட்சியின் தவறான செயல்பாடுகளைத் துணிச்சலாகவும் பேசி அவ்வப்போது அறிக்கை வெளியிடுவார். இதற்கு முன் பிரதமர் மோடி நடைமுறைப்படுத்திய பணமதிப்பிழப்பு நடவடிக்கை, ஜிஎஸ்டி வரி, ஆட்சிநிர்வாகம் ஆகியவற்றையும் சத்ருஹன் சின்ஹா கடுமையாக விமர்சித்து இருந்தார்.

இந்நிலையில் கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடியும், பாஜக தேசியத் தலைவர் அமித்ஷாவும் காங்கிரஸ் கட்சிக்கு எதிராகக் கடுமையான வார்த்தைகளைப் பிரயோகம் செய்து பிரச்சாரம் செய்தனர். அதிலும், ராகுல் காந்தி, சோனியா காந்தி குறித்து பிரதமர் மோடி விமர்சித்தார்.

இது குறித்து பாஜக மூத்த தலைவரும், நடிகருமான சத்ருஹன் சின்கா தனது டுவிட்டரில்  கூறியிருப்பதாவது:-

கர்நாடக மாநிலத்தில் தேர்தல் பிரச்சாரம் முடிவுக்கு வந்துவிட்டது. பணபலம் பெரிதா அல்லது மக்கள் சக்தி பெரிதா என்பது தெரிந்துவிடும். என் மீது கட்சிக்குள் இருக்கும் வெறுப்பு, அதிருப்தி காரணமாக என்னைப் பிரச்சாரத்துக்கு பாஜக தலைமை அழைக்கவில்லை.

பிகார் முதல் குஜராத் மாநிலம் வரை நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக தலைமை என்னைப் பிரச்சாரத்துக்கு அழைக்கவில்லை. அதற்கான காரணம் அனைவருக்கும் நன்கு தெரியும். நான் உங்களுடைய நீண்டகால நண்பர், நலம் விரும்பி, பாஜக ஆதரவாளர் என்பதால், நான் எப்போதும் வரம்பு மீறி பேசியது இல்லை. அதிலும் யாரையும் தனிப்பட்ட முறையில் விமர்சித்தது இல்லை.

எந்தவிதமான பிரச்சினைகளையும், விவகாரங்களையும் மிகவும் நாகரீகமான முறையில், மிகவும் நளினமாக எடுத்துரைக்க வேண்டும். ஒழுக்கத்துடன் நடப்பதும், கண்ணியத்துடன் பேசுவதும் முக்கியம். மரியாதைக்குரிய பிரதமர் மோடியும், பாஜக தேசியத் தலைவர் அமித் ஷாவும் மரியாதையையும், கண்ணியத்தையும் பேணிக்காப்பது அவசியமாகும்.

எதற்காக பிரச்சாரத்தில் நாம் முட்டாள்தனமான விளக்கங்களை அளிக்கிறோம் எனத் தெரியவில்லை. பிரதமர் மோடி காங்கிரஸ் குறித்துப் பேசியுள்ளார். அதாவது கர்நாடகத் தேர்தலில் காங்கிரஸ் தோற்றபின்னால், அந்தக் கட்சி புதுச்சேரி, பஞ்சாப் பரிவார் என்ற நிலைக்கு அங்கு மட்டும் ஆட்சியில் இருக்கும் கட்சியாக இருக்கும் என்று கூறியுள்ளார். தேர்தல் முடிவுகள் 15-ம் தேதி வெளியாகிவிடும். அந்த நேரத்தில் எதுவேண்டுமானாலும் நடக்கலாம்.

இந்த நாட்டில் மடாதிபதியாக இருப்பதற்கும், வருவதற்கும் கூட சிறந்த ஞானம், அனுபவம், நிர்வாகத்திறமை தேவைப்படுகிறது. ஆனால், இந்த நாட்டில் விவேகமுள்ள நபர்தான் பிரதமராக வரவேண்டும் என்பதில்லை. பிரதமராக வருவதற்கு எந்தவிதமான சிறப்புத் தகுதியும் தேவையில்லை. நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இருந்தாலே போதுமானது.

பிரதமர் மோடி நீங்கள் பிபிபி என்ற வார்த்தைக்கு நீங்கள் கொடுத்த விளக்கம் தேர்தலுக்கு பின் மாறினால் என்ன நடக்கும்?. உங்களின் பிபிபி என்ற வார்த்தை மக்களுக்கான, மக்களால் உருவாக்கிய ஆட்சி என மாறிவிட்டால் என்ன செய்வது. அல்லது, பாப்புலர் பீப்பிள்ஸ் பார்ட்டி என்று மாறிவிட்டால் என்ன செய்வது. சிறந்த வேட்பாளர்கள் யார், அவர்களை வெற்றி பெறச் செய்வது குறித்து கர்நாடக மக்கள் முடிவு செய்வார்கள்.

இவ்வாறு சத்ருஹன் சின்ஹா தெரிவித்துள்ளார்.

Next Story