திருப்பதியில் பா.ஜனதா தலைவர் அமித் ஷாவிற்கு எதிராக போராட்டம், பாதுகாப்பு வாகனம் மீது கற்கள் வீச்சு!


திருப்பதியில் பா.ஜனதா தலைவர் அமித் ஷாவிற்கு எதிராக போராட்டம், பாதுகாப்பு வாகனம் மீது கற்கள் வீச்சு!
x
தினத்தந்தி 11 May 2018 12:50 PM GMT (Updated: 11 May 2018 12:50 PM GMT)

திருப்பதியில் பா.ஜனதா தலைவர் அமித் ஷாவிற்கு எதிராக போராட்டம் நடத்தியவர்கள் பாதுகாப்பு வாகனங்கள் மீது கற்களை வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது. #AmitShah



 திருப்பதி,

 
ஆந்திராவில் இருந்து தெலுங்கானா பிரிக்கப்பட்ட போது கொண்டுவரப்பட்ட சட்டத்தின்படி ஆந்திராவிற்கு கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை என அங்குள்ள அரசியல் கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. அம்மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் விவகாரத்திலும் மத்திய அரசு நேர்மறையான நகர்வை முன்னெடுக்கவில்லை. இதனால் மோதல் ஏற்பட்டு மத்திய அரசில் இருந்து மாநிலத்தில் ஆளும் தெலுங்கு தேசம் வெளியேறியது. 

இந்நிலையில் கர்நாடக தேர்தலில் பிரசாரத்தில் ஈடுபட்ட பா.ஜனதா தலைவர் அமித்ஷா நேற்று இரவு திருப்பதி வந்தார். காலை திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்தார். பின்னர் அவர் ரேணிகுண்டா விமான நிலையத்துக்கு காரில் புறப்பட்டார். அவருடன் பா.ஜனதா கட்சியினரின் கார்களும் சென்றன. திருப்பதி மலை அடிவாரத்தில் உள்ள அலிபிரியில் தெலுங்குதேசம் கட்சியினர் திரண்டு ஆந்திராவுக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றாததை கண்டித்து அமித்ஷாவுக்கு எதிராக போராட்டம் நடத்தினர். அமித்ஷாவின் கார் அந்த பகுதியை கடந்தபோது கூட்டத்தில் இருந்த சிலர் கற்களை வீசினர். 

இதில் அமித்ஷாவின் கார் மீது கற்கள் விழவில்லை என்றாலும் அவருடன் வந்த ஒரு கார் மீது கல் விழுந்ததாக கூறப்படுகிறது. ஆந்திர முதல்–மந்திரி சந்திரபாபு நாயுடு கட்சியினரின் இத்தகைய ஒழுங்கீனமான நடவடிக்கைகளை ஏற்றுக்கொள்ள முடியாது என்று கண்டனம் தெரிவித்துள்ளார். கல்வீச்சு சம்பவம் குறித்து விசாரித்து வருவதாக போலீஸ் தெரிவித்து உள்ளது. பாரதீய ஜனதாவினர் தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டு உள்ளது, எங்களுக்கு முதல்கட்ட தகவல்கள் கிடைத்து உள்ளது, உண்மைதன்மை தொடர்பாக விசாரிக்கிறோம் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.


Next Story