மராட்டிய மாநில கூடுதல் டி.ஜி.பி. ஹிமான்சு ராய் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை


மராட்டிய மாநில கூடுதல் டி.ஜி.பி. ஹிமான்சு ராய் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை
x
தினத்தந்தி 11 May 2018 3:02 PM GMT (Updated: 11 May 2018 3:02 PM GMT)

ஐ.பி.எல். சூதாட்டத்தை வெளிக்கொண்டு வந்த மராட்டிய கூடுதல் டி.ஜி.பி. ஹிமான்சு ராய் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். #HimanshuRoy


 மும்பை, 

மராட்டிய மாநில கூடுதல் டி.ஜி.பி.யாக இருந்த ஹிமான்சு ராய் (வயது 54) புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இருந்தார். இதற்காக சிகிச்சை பெற்று வந்த அவர் கடந்த 2016-ம் ஆண்டு முதல் மருத்துவ விடுமுறையில் இருந்தார். கொலபாவில் உள்ள வீட்டில் அவரை அவரது குடும்பத்தினர் கவனித்து வந்தனர். இந்த நிலையில் ஹிமான்சு ராய் வீட்டில் இருந்து மதியம் திடீரென துப்பாக்கிச்சுடும் சத்தம் கேட்டது. இதனால் பதறிப்போன அவரது குடும்பத்தினர் ஓடி வந்து பார்த்தனர். அப்போது ஹிமான்சு ராய் குண்டு பாய்ந்து ரத்த வெள்ளத்தில் கிடந்தார். அவர் துப்பாக்கியால் சுட்டு கொண்டது தெரியவந்தது. 

உடனடியாக அவரை மீட்டு மும்பை சென்டிரலில் உள்ள பாம்பே மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். தகவல் அறிந்து போலீஸ் அதிகாரிகள் ஆஸ்பத்திரிக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். 
1988-ம் ஆண்டு பேட்ஜ் ஐ.பி.எஸ். அதிகாரியான ஹிமான்சு ராய், புற்றுநோய் பாதிப்பில் இருந்து மீள்வதற்காக எடுத்துக்கொண்ட மருந்துகள் மற்றும் மன உளைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக அவர் தற்கொலை முடிவை எடுத்து இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 

“உயிரிழந்த நிலையிலே மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டார், அவர் தன்னைத் தானே சுட்டுக்கொண்டு உள்ளார்,” என மருத்துவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.  

1988-ம் ஆண்டு பேட்ஜ் ஐ.பி.எஸ். அதிகாரியான ஹிமான்சு ராய் 2013-ம் ஆண்டு நடந்த ஐ.பி.எல். போட்டிகளில் நடைபெற்ற சூதாட்டத்தை வெளிக்கொண்டு வந்தார். அதன்பின்னர் பயங்கரவாத தடுப்பு பிரிவுக்கு மாற்றப்பட்டார். பல்வேறு குற்ற வழக்குகளில் அவரது மிக சிறப்பான செயல்பாடுகளுக்காக வெகுவாக புகழப்பட்டார். ஹிமான்சு ராய் உடற்பயிற்சியில் மிகுந்த ஆர்வம் கொண்டவர். குற்றவாளிகளுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்த ஐ.பி.எஸ். அதிகாரி தற்கொலை செய்து கொண்டது மராட்டிய போலீஸ் மத்தியில் அதிர்ச்சியையும், கவலையையும் ஏற்படுத்தி உள்ளது.


Next Story