காஷ்மீரில் அத்துமீறி நடந்த பாகிஸ்தான் ராணுவ தாக்குதலில் வாலிபர் சாவு


காஷ்மீரில் அத்துமீறி நடந்த பாகிஸ்தான் ராணுவ தாக்குதலில் வாலிபர் சாவு
x
தினத்தந்தி 11 May 2018 10:30 PM GMT (Updated: 11 May 2018 8:46 PM GMT)

காஷ்மீரில் அத்துமீறி நடந்த பாகிஸ்தான் ராணுவ தாக்குதலில் வாலிபர் ஒருவர் பலியாகியுள்ளார்.

ஜம்மு, 

காஷ்மீரில் இந்தியா-பாகிஸ்தான் இடையே அமலில் இருக்கும் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி சர்வதேச எல்லைப்பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகிறது. அந்தவகையில் அங்குள்ள பூஞ்ச் மாவட்டத்தின் குல்பூர்-பக்யால் தாரா எல்லைப்பகுதியில் நேற்று முன்தினம் நள்ளிரவும் பாகிஸ்தான் ராணுவம் திடீர் தாக்குதல் நடத்தியது.

துப்பாக்கிகள் மற்றும் சிறிய ரக ஆயுதங்கள் மூலம் நடத்திய இந்த தாக்குதலில், கல்சான் மால்டி பகல்தாரா பகுதியில் நடந்த ஒரு திருமணத்தில் பங்கேற்றிருந்த முகமது இக்லாக் (வயது 22) என்ற வாலிபர் சிக்கிக்கொண்டார். இதில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

பாகிஸ்தான் ராணுவத்தின் இந்த தாக்குதலுக்கு இந்திய வீரர்களும் தகுந்த பதிலடி கொடுத்தனர். இதனால் அங்கு இரு தரப்புக்கும் இடையே சிறிது நேரம் பயங்கர தாக்குதல் நடந்தது. இந்த சண்டையால் அங்கு நள்ளிரவில் பதற்றம் ஏற்பட்டது.

காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் நடத்தி வரும் அத்துமீறிய தாக்குதல் இந்த ஆண்டு அதிகரித்து உள்ளது. இதுவரை 700-க்கும் மேற்பட்ட முறை நடந்த இத்தகைய தாக்குதல்களில் 16 வீரர்கள் உள்பட 31 பேர் உயிரிழந்துள்ளனர்.

Next Story