அனைத்து கோர்ட்டுகளிலும் பாலியல் தொல்லை தடுப்பு குழு: 2 மாதங்களில் அமைக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு


அனைத்து கோர்ட்டுகளிலும் பாலியல் தொல்லை தடுப்பு குழு: 2 மாதங்களில் அமைக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 11 May 2018 11:00 PM GMT (Updated: 11 May 2018 8:46 PM GMT)

அனைத்து கோர்ட்டுகளிலும் பாலியல் தொல்லை தடுப்பு குழுவை 2 மாதங்களில் அமைக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

புதுடெல்லி, 

சுப்ரீம் கோர்ட்டில் பெண் வக்கீல் ஒருவர் ‘ரிட்’ வழக்கு ஒன்றை தாக்கல் செய்து இருந்தார். அந்த வழக்கில் அவர், தான் டெல்லி திஸ் ஹசாரி மாவட்ட கோர்ட்டில் ஒரு வழக்கில் ஆஜராகி வாதாட சென்று இருந்தபோது, அங்கே வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு இருந்த வக்கீல்கள் தன்னை தாக்கியதாக கூறி, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி உள்ளார்.

அந்த வழக்கு, தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நாட்டில் உள்ள அனைத்து மாவட்ட கோர்ட்டுகளிலும், பெண்களுக்கு எதிரான பாலியல் தொல்லை தடுப்பு குழுக்களை 2 மாதங்களில் அமைக்குமாறு ஐகோர்ட்டுகளுக்கு நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.

அதே நேரத்தில் டெல்லியில் உள்ள அனைத்து மாவட்ட கோர்ட்டுகளிலும் பாலியல் தொல்லை தடுப்பு குழுக்களை ஒரு வாரத்திற்குள் அமைக்குமாறு ஐகோர்ட்டு தற்காலிக தலைமை நீதிபதி கீதா மிட்டலுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மேலும் வழக்கு தொடுத்த வக்கீலும், வக்கீல் சங்க தலைவர்களும் தங்கள் பிரச்சினைகளை இணக்கமாக பேசி தீர்த்துக்கொள்ளவும் நீதிபதிகள் அறிவுறுத்தினர். இரு தரப்பு வக்கீல்கள் பரஸ்பரம் ஒருவர் மீது மற்றவர்கள் வழக்கு தொடருகிறபோது, கைது நடவடிக்கைகளை மேற்கொள்ளக்கூடாது எனவும் கூறி வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.

Next Story