ஆந்திராவில் சுற்றுலா படகில் திடீர் தீ; 80 பயணிகள் உயிர் தப்பினர்


ஆந்திராவில் சுற்றுலா படகில் திடீர் தீ; 80 பயணிகள் உயிர் தப்பினர்
x
தினத்தந்தி 12 May 2018 12:15 AM GMT (Updated: 11 May 2018 8:47 PM GMT)

ஆந்திராவில் கோதாவரி நதியில் சென்ற சுற்றுலா படகு திடீரென தீ விபத்தில் சிக்கியது. இதில் 80 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

நகரி, 

ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் கோதாவரி நதியில் ‘பாபி கொண்டலு’ என்னும் சுற்றுலாத்தலம் உள்ளது. இங்கு சென்றுவர ஆந்திர அரசு படகு சவாரிக்கும் ஏற்பாடு செய்து உள்ளது.

இதன் இயற்கை எழில்நிறைந்த அழகை ரசிப்பதற்காக ஏராளமான பயணிகள் தினமும் குவிவது வழக்கம். தற்போது பள்ளி, கல்லூரிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டு உள்ளதால் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது.

நேற்று தேவி பட்டினம் மண்டலத்தில் உள்ள பொசம்மம குடி என்னும் இடத்தில் இருந்து காலை 9 மணிக்கு ஒரு படகு 80 சுற்றுலா பயணிகளை ஏற்றிக்கொண்டு பாபி கொண்டலுவுக்கு புறப்பட்டது. அவர்களுக்கு காலை சிற்றுண்டியும் வழங்கப்பட்டது.

இந்த நிலையில் படகு கிளம்பிய சிறிது நேரத்தில் அதன் கீழ்த்தளத்தில் இருந்த சமையல் அறையில் திடீரென தீப்பிடித்துக்கொண்டது. அந்த தீ வேகமாக பரவியதால் மேல் பகுதியில் புகை மண்டலம் சூழ்ந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த பயணிகள் பீதியில் அலறினர். இதைத்தொடர்ந்து மேடான பகுதியில் படகு நிறுத்தப்பட்டது.

இதையடுத்து பயணிகள் படகில் இருந்து குதித்தனர். அப்போது ஒருவர் மீது ஒருவர் குதித்ததால் அவர்களில் பலருக்கு காயம் ஏற்பட்டது. படகு தீப்பிடித்து எரிவதைக் கண்ட அருகில் உள்ள வீரவர புலங்கா பகுதியை சேர்ந்த மக்களும், விரைந்து வந்த தீயணைப்பு படையினரும் சுற்றுலா பயணிகள் அனைவரையும் பத்திரமாக மீட்டனர்.

பின்னர் அவர்கள் அனைவரும் தேவி பட்டினம் போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கிருந்து சுற்றுலா பயணிகள் பஸ்கள் மூலம் அவர்களுடைய ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

படகில் தீவிபத்து ஏற்பட்டதற்கு கியாஸ் கசிவு காரணம் என்பது தெரியவந்துள்ளது. இந்த தீ விபத்தில் சுற்றுலா படகு முற்றிலுமாக எரிந்து நாசமானது.

Next Story