இனி வரும் தேர்தலில் போட்டியிட மாட்டேன்; சித்தராமையா அறிவிப்பு


இனி வரும் தேர்தலில் போட்டியிட மாட்டேன்; சித்தராமையா அறிவிப்பு
x
தினத்தந்தி 13 May 2018 7:11 AM GMT (Updated: 13 May 2018 7:11 AM GMT)

இனி வரும் தேர்தலில் போட்டியிட போவதில்லை என கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா அறிவித்தார். #Siddaramaiah

பெங்களூர்,

இனி வரும் தேர்தலில் போட்டியிட மாட்டேன் என கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா செய்தியாளர்களின் சந்திப்பில் இன்று அறிவித்தார்.

கர்நாடக சட்டசபை தேர்தல் தற்போது நடந்து முடிந்துள்ளது. இதற்கான வாக்கு எண்ணிக்கை மே 15ம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.மொத்தம் 222 தொகுதிகளுக்கு தேர்தல் நடந்து உள்ளது. இந்த நிலையில் தற்போது பல்வேறு ஊடகங்கள் நடத்திய தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு வெளியாகி உள்ளது.இதில் பா.ஜ.க கட்சி பெரிய அளவில் வெற்றி பெறும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, தேர்தலுக்கு பின் நடத்தப்படும் கருத்து கணிப்புகள் எல்லாம் வெறும் பொழுதுபோக்கு, தொண்டர்கள் யாரும் அதை பார்த்து கவலைப்படாமல் இருக்க வேண்டும் என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா டுவிட்டரில் பதிவு செய்துள்ளார். மேலும் கர்நாடகாவில் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகளில் 8ல் 6 கருத்து கணிப்புகளில் பாஜக கட்சியே வெற்றிபெறும் என்று கூறப்பட்டுள்ளது. அதில் ஒரு கருத்து கணிப்பில் பா.ஜ.க தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து டுவிட் செய்துள்ள சித்தராமையா ''இன்னும் இரண்டு நாட்களுக்கு தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் நல்ல பொழுதுபோக்கை கொடுக்கும். தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பை நம்புவது எல்லாம், ஒரு ஆற்றின் சராசரி ஆழம் 4 என்று புள்ளியியலாளர் சொன்னதை நம்பி ஆற்றில் இறங்குவதற்கு சமமாகும். 6 அடி 4அடி 2அடி இருந்தால் மட்டுமே சராசரியாக 4 அடி ஆழம் இருக்கும். இதனால் 6 அடி ஆழம் ஆற்றில் வரும் போது, நீரில் மூழ்க வேண்டியதுதான்'' என்று பதிவிட்டுள்ளார்.

மேலும் ''ஆகவே கட்சியில் இருக்கும் அன்பானவர்களே, நலம் விரும்பிகளே, தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பை பார்த்து கவலைப்படாதீர்கள், சந்தோசமாக வார இறுதியை கொண்டாடுங்கள். நாம் தான் மீண்டும் வருகிறோம்'' என்று கூறியுள்ளார்.

இந்நிலையில் இன்று, இனி வரும் காலங்களில் தேர்தலில் போட்டியிட மாட்டேன் என்றும் இதுவரை ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்வதாக மைசூருவில் செய்தியாளர் சந்திப்பில் சித்தராமையா கூறினார்.



Next Story