ப.சிதம்பரம் குடும்பத்தினருக்கு 14 நாடுகளில் சொத்துக்கள், 21 வெளிநாட்டு வங்கிகளில் கோடிக்கணக்கில் டெபாசிட் - நிர்மலா சீதாராமன்


ப.சிதம்பரம் குடும்பத்தினருக்கு 14 நாடுகளில் சொத்துக்கள், 21 வெளிநாட்டு வங்கிகளில் கோடிக்கணக்கில் டெபாசிட் - நிர்மலா சீதாராமன்
x
தினத்தந்தி 13 May 2018 3:26 PM GMT (Updated: 13 May 2018 3:26 PM GMT)

வெளிநாட்டுகளில் சொத்துகளை மறைத்த விவகாரத்தில், ப.சிதம்பரத்திடம் ராகுல் காந்தி விசாரணை நடத்துவாரா? என நிர்மலா சீதாராமன் கேள்வியை எழுப்பி உள்ளார். #PChidambaram #NirmalaSitharaman


புதுடெல்லி,

 
வெளிநாட்டு வருமானம் மற்றும் சொத்துகளை மறைத்ததாக முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரத்தின் மனைவி நளினி சிதம்பரம், மகன் கார்த்தி சிதம்பரம், மருமகள் ஸ்ரீநிதி ஆகியோர் மீது வருமான வரித்துறை புகார் மனுவை தாக்கல் செய்துள்ளது.

இங்கிலாந்தில், 5.37 கோடி ரூபாய் மற்றும் 80 லட்ச ரூபாய் மதிப்புடைய இரண்டு சொத்துகளும், அமெரிக்காவில் 3.28 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்தும் வாங்கியதை, முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ வருமான வரிக் கணக்கில் காட்டாமல் மறைத்ததாகக் கூறி, நளினி சிதம்பரம், கார்த்தி சிதம்பரம், ஸ்ரீநிதி மற்றும் செஸ் குளோபல் என்ற நிறுவனம் ஆகியோர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. கருப்பு பணம் (வெளிநாட்டு வருமானம் மற்றும் சொத்துகள்) மற்றும் வரி சுமத்தும் சட்டத்தின் 50-ம் பிரிவின் கீழ் சென்னையில் உள்ள சிறப்பு கோர்ட்டில் இந்த புகார் மனுவை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

செஸ் குளோபல் நிறுவனத்தில் இயக்குனர்களில் ஒருவராக கார்த்தி சிதம்பரம் இருக்கிறார். இந்த முதலீடுகளை வருமான வரித்துறை அதிகாரிகளிடம் காட்டாதது, கருப்பு பணச்சட்டத்தை மீறுவதாகும் என்று குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

எனது குடும்பத்தினர் மீது கூறப்படும் குற்றச்சாட்டுகள் அனைத்தும் அடிப்படை ஆதாரமற்றவை என்று ப.சிதம்பரம் கூறியுள்ளார்.

இந்நிலையில் டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி நிர்மலா சீதாராமன், வெளிநாட்டுகளில் சொத்துகளை மறைத்த விவகாரத்தில், ப.சிதம்பரத்திடம் ராகுல் காந்தி விசாரணை நடத்துவாரா? என கேள்வி எழுப்பினார். 

கொஞ்ச காலமாக முன்னாள் நிதி மந்திரி ப.சிதம்பரம் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எதிராக வருமான வரித்துறை அதிகாரிகள் நிறைய நடவடிக்கைகள் எடுத்து வருவதாக நாம் கேள்விப்படுகிறோம். காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் வெளிநாடுகளில் சேர்த்து வைத்துள்ள சொத்துக்களை இன்னும் வெளியிடாமல் உள்ளார். இது பாகிஸ்தானில் நவாஷ் செரீப் செய்தது போன்று உள்ளது. பாகிஸ்தானில் நவாஷ் செரீப் வெளிநாட்டில் வைத்துள்ள சொத்துக்களை வெளியிடாத காரணத்தால், பிரதமர் பதவி வகிக்க அந்நாட்டு நீதிமன்றம் தடை விதித்தது. அதுபோல் இங்கு காங்கிரஸ் கட்சி செய்யுமா?  

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, இந்த மூத்த தலைவர் ப.சிதம்பரம் வெளிநாட்டு வருமானத்தை மறைத்த விவகாரத்தில் நிச்சயமாக கருத்து சொல்ல வேண்டும். அவர் ப.சிதம்பரத்திடம் விசாரணை நடத்துவாரா? என்பது குறித்து நாட்டு மக்களிடம் கூற வேண்டும் என நிர்மலா சீதாராமன் பேசினார். வெளிநாட்டில் குவிக்கப்பட்டு உள்ள கருப்பு பணத்தை இங்கே கொண்டு வந்து சேர்ப்போம் என்பது நாங்கள் அளித்த தேர்தல் வாக்குறுதி. எனவேதான் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, வெளிநாடுகளில் குவிக்கப்பட்ட கருப்பு பணத்தை இங்கே கொண்டு வந்து சேர்க்க நடவடிக்கை எடுத்து வருகிறது.

வருமான வரித்துறை மதிப்பீடுகளின்படி, ப.சிதம்பரம் குடும்பத்தினர் 14 நாடுகளில், 21 வெளிநாட்டு வங்கி கணக்குகளில் 3 பில்லியன் டாலர் (சுமார் ரூ.20 ஆயிரத்து 100 கோடி) அளவுக்கு சட்ட விரோத சொத்துகளை குவித்து இருப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது எனவும் குறிப்பிட்டார். 

ப.சிதம்பரம் பதில் 

நிர்மலா சீதாராமன் பேச்சுக்கு டுவிட்டரில் பதில் அளித்து உள்ள ப.சிதம்பரம், இந்தியாவின் மிகப் பணக்காரக் கட்சியின் தலைவர் கோடிக்கணக்கான டாலர்களைப் பற்றிக் கனவு காண்கிறார். அந்தப் பணத்தை மீட்டு ஒவ்வொரு இந்தியனின் வங்கிக் கணக்கிலும் ரூ 15 லட்சம் போட வேண்டியதுதானே என குறிப்பிட்டு உள்ளார். திருமதி நிர்மலா சீதாராமனை பாதுகாப்பு அமைச்சர் பதவியிலிருந்து நீக்கிவிட்டு, வருமான வரித்துறையின் வழக்கறிஞராக நியமிக்க வேண்டும், அவரை பார் கவுன்சிலுக்கு வரவேற்கிறோம் எனவும் கூறிஉள்ளார். 


Next Story