சென்னையை சேர்ந்த 2 ரவுடிகள் படுகொலை: ஆந்திர எல்லையில் உடல்கள் வீச்சு


சென்னையை சேர்ந்த 2 ரவுடிகள் படுகொலை: ஆந்திர எல்லையில் உடல்கள் வீச்சு
x
தினத்தந்தி 13 May 2018 11:45 PM GMT (Updated: 13 May 2018 8:34 PM GMT)

சித்தூர் அருகே முட்புதரில் பிணமாக கிடந்த 2 பேர் சென்னையை சேர்ந்த பிரபல ரவுடிகள் என்பதும், அவர்கள் கொலை செய்யப்பட்டதும் தெரியவந்துள்ளது.

சித்தூர்,

ஆந்திர மாநிலம் சித்தூரில் இருந்து வேலூர் செல்லும் சாலையில் குடிபாலா அருகே சாலை ஓரம் கடந்த 3 நாட்களுக்கு முன்பு முட்புதரில் அடையாளம் தெரியாத 2 ஆண் பிணங்கள் கிடப்பதாக குடிபாலா போலீசுக்கு தகவல் வந்தது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, 2 பேரின் பிணங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சித்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அவர்களின் உடல்களில் பயங்கர வெட்டுக்காயங்கள் இருந்தன.

இருவரையும், தமிழகத்தில் மர்ம நபர்கள் யாரோ கொலை செய்து, வாகனத்தில் பிணங்களை ஏற்றி, இங்கு கொண்டு வந்து முட்புதரில் வீசி சென்றிருக்கலாம் என போலீசார் சந்தேகித்தனர்.

இது தொடர்பாக குடிபாலா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் தமிழக போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். இது பற்றி ஊடகங்களில் செய்தி பரவின. போலீசாரின் விசாரணையில் 2 பேரும் சென்னையை சேர்ந்த பிரபல ரவுடிகளான அசோக் (வயது 30), கோபி (26) என்பது தெரியவந்தது. இது குறித்து தெரிவிக்கப்பட்ட தகவலின் பேரில் இருவரின் குடும்பத்தினரும், உறவினர்களும் சித்தூருக்கு வந்தனர்.

சித்தூர் அரசு ஆஸ்பத்திரியில் வைத்திருந்த இருவரின் உடல்களை உறவினர்கள் பார்வையிட்டு, இறந்தவர்கள் அசோக், கோபி என்பதை உறுதிப்படுத்தினர். இதையடுத்து 2 பிணங்களையும் பிரேத பரிசோதனை செய்த பிறகு, உடல்களை உறவினர்களிடம் போலீசார் ஒப்படைத்தனர்.

இறந்த ரவுடிகளில் ஒருவரான அசோக் சென்னை கே.கே.நகர் பகுதியை சேர்ந்தவர் ஆவார். அவர் மீது சென்னையில் உள்ள பல்வேறு போலீஸ் நிலையங்களில் 30 வழக்குகள் நிலுவையில் உள்ளன.

மற்றொருவரான கோபி சென்னை குன்றத்தூர் பகுதியைச் சேர்ந்தவர். அவர் மீது சென்னையில் உள்ள பல்வேறு போலீஸ் நிலையங்களில் 10-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. முன்விரோதம் காரணமாக சென்னையைச் சேர்ந்த ரவுடிகள் யாரோ இருவரையும் கொலை செய்து, பிணங்களை வாகனத்தில் கொண்டு வந்து, குடிபாலா அருகே முட்புதரில் வீசி சென்றுள்ளனர். கொலையாளிகள் குறித்து துப்புதுலக்க சென்னை போலீசாரின் உதவியை சித்தூர் போலீசார் நாடியுள்ளனர்.

Next Story