உத்தரபிரதேசத்தில் வெறிநாய்கள் கடித்து குதறியதில் சிறுமி சாவு: ஒரே மாதத்தில் 7 பேர் பலியான பரிதாபம்


உத்தரபிரதேசத்தில் வெறிநாய்கள் கடித்து குதறியதில் சிறுமி சாவு: ஒரே மாதத்தில் 7 பேர் பலியான பரிதாபம்
x
தினத்தந்தி 13 May 2018 11:30 PM GMT (Updated: 13 May 2018 8:34 PM GMT)

உத்தரபிரதேசத்தில் வெறிநாய்கள் கடித்து குதறியதில் சிறுமி ஒருவர் பலியாகியுள்ளார். இந்நிலையில் வெறிநாய்கள் கடித்து குதறியதில் ஒரே மாதத்தில் 7 பேர் பலியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

சிதாப்பூர், 

உத்தரபிரதேச மாநில தலைநகரான லக்னோவில் இருந்து 92 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது சீதாபூர். இங்குள்ள கைராபாத், மகேஷ்பூர் உள்ளிட்ட 22 கிராமங்களில் கடந்த ஒரு வருடமாக தெருக்களில் சுற்றும் வெறிநாய்களின் தொந்தரவு அதிகமாக உள்ளது. கடந்த ஆண்டு நவம்பரில் இருந்து தற்போது வரை 13 குழந்தைகள் வெறிநாய்களிடம் கடிபட்டு உயிரிழந்து உள்ளனர்.

இந்நிலையில் நேற்று மகேஷ்பூர் கிராமத்தில் தெருவில் விளையாடிக்கொண்டிருந்த 12 வயது சிறுமியை வெறிநாய்கள் கடித்து குதறின. இதில் சிறுமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தாள்.

இந்த மாதத்தின் தொடக்கத்தில் இருந்து தற்போது வரை 7 சிறுவர்-சிறுமிகள் வெறிநாய்கள் கடித்து உயிர் இழந்து உள்ளனர். கடந்த 1-ந்தேதி மட்டும் ஒரே நாளில் 3 சிறுவர்கள் வெறிநாய்கள் கடிக்கு பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் பிரச்சனையில் எதிர்க்கட்சிகள் ஆளும் பா.ஜ.க. அரசை கண்டித்து குரல் எழுப்பி வருகின்றனர்.

இதற்கிடையே, கடந்த வெள்ளிக்கிழமை சீதாபூர் மாவட்டத்துக்கு சென்ற முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத், வெறிநாய்கள் கடித்து பலியான குழந்தைகளின் குடும்பங்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

மேலும் பலியான குழந்தைகள் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சமும், காயம் அடைந்தவர்களுக்கு ரூ.25 ஆயிரமும் இழப்பீடு வழங்கப்படும் என அறிவித்தார்.

Next Story