தலித் பிரச்சினைகள்: மத்திய அரசு மீது பா.ஜனதா பெண் எம்.பி. தாக்கு, தர்ணா போராட்டம் அறிவிப்பு


தலித் பிரச்சினைகள்: மத்திய அரசு மீது பா.ஜனதா பெண் எம்.பி. தாக்கு, தர்ணா போராட்டம் அறிவிப்பு
x
தினத்தந்தி 13 May 2018 9:12 PM GMT (Updated: 13 May 2018 9:12 PM GMT)

தலித் பிரச்சினைகள் குறித்து மத்திய அரசை எதிர்த்து பா.ஜனதா பெண் எம்.பி.யான சாவித்ரி பாய் புலே தர்ணா போராட்டத்தை ஈடுபடபோவதாக அறிவித்துள்ளார்.

பரைக், 

உத்தரபிரதேசத்தின் அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தில் வைக்கப்பட்டு உள்ள ஜின்னா படத்தை அகற்றக்கோரி பா.ஜனதாவினர் சமீபத்தில் போர்க்கொடி தூக்கினர். ஆனால் மாநிலத்தின் பரைக் தொகுதி பா.ஜனதா பெண் எம்.பி.யான சாவித்ரி பாய் புலே, ஜின்னாவை புகழ்ந்து இருந்தார். அப்படி பா.ஜனதாவுக்கு எதிராக கருத்து வெளியிட்ட அவர் தற்போது தலித் பிரச்சினை விவகாரத்திலும் மத்திய அரசு மீது கடுமையான தாக்குதலை தொடுத்து உள்ளார்.

இது குறித்து நேற்று செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், ‘நாட்டில் ஜனநாயகம் மிகுந்த ஆபத்தில் இருக்கிறது. இது எனது கருத்து அல்ல. மாறாக நீதித்துறையும், மூத்த நீதிபதிகளும் கூறியுள்ளனர். தலித் மக்களுக்கு வழங்கப்பட்டு வரும் இட ஒதுக்கீட்டை ரத்து செய்ய அல்லது அதில் திருத்தம் கொண்டு வர சதி நடக்கிறது’ என்றார்.

இந்த விவகாரத்தை முன்வைத்து நாளை (செவ்வாய்க்கிழமை) தர்ணாவில் ஈடுபட போவதாக கூறிய அவர், தலித் மக்களின் உரிமைக்காக எந்த தியாகத்தையும் செய்ய தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார். தலித் மக்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்து உள்ள நிலையில், அவர்களின் பிரச்சினைகளை நிவர்த்தி செய்ய மத்திய அரசு தயாராக இல்லை என்றும் குற்றம் சாட்டினார்.

Next Story