பஞ்சாப் தேசிய வங்கி ஊழல் வழக்கு; அலகாபாத் வங்கி மேலாண் இயக்குநரின் அதிகாரங்களை பறிக்க உத்தரவு


பஞ்சாப் தேசிய வங்கி ஊழல் வழக்கு; அலகாபாத் வங்கி மேலாண் இயக்குநரின் அதிகாரங்களை பறிக்க உத்தரவு
x
தினத்தந்தி 14 May 2018 11:43 AM GMT (Updated: 14 May 2018 11:43 AM GMT)

பஞ்சாப் தேசிய வங்கியில் நடந்த ஊழல் வழக்கில் அலகாபாத் வங்கியின் மேலாண் இயக்குநர் உஷா அனந்த சுப்ரமணியனின் அனைத்து அதிகாரங்களையும் பறிக்கும்படி நிதி அமைச்சகம் கேட்டு கொண்டுள்ளது. #PNBScamCase

புதுடெல்லி,

பஞ்சாப் தேசிய வங்கியில் ரூ.6 ஆயிரம் கோடி அளவிலான நிதி முறைகேடு நடந்துள்ளது என சி.பி.ஐ.க்கு புகார் அளிக்கப்பட்டது.  இதன் அடிப்படையில் எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டது.  இதில், நிதி முறைகேடுகளில் ஈடுபட்டனர் என்ற குற்றச்சாட்டின் பேரில் பிரபல வைர வியாபாரியான நீரவ் மோடி மற்றும் அவரது உறவினர்களின் பெயர்கள் சேர்க்கப்பட்டன.

இந்த வழக்கில் பஞ்சாப் தேசிய வங்கியின் முன்னாள் தலைவர் மற்றும் தலைமை செயல் அதிகாரியான உஷா அனந்த சுப்ரமணியனிடம் சி.பி.ஐ. சமீபத்தில் விசாரணை நடத்தியது.  இவர், கடந்த 2015ம் ஆண்டு முதல் 2017ம் ஆண்டு வரை வங்கியின் மேலாண் இயக்குநர் மற்றும் தலைமை செயல் அதிகாரியாக இருந்துள்ளார்.

இவர் அலகாபாத் வங்கியின் மேலாண் இயக்குநர் மற்றும் தலைமை செயல் அதிகாரியாக இருந்து வருகிறார்.

இந்நிலையில், மும்பையில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் இன்று சி.பி.ஐ. குற்றப்பத்திரிகையை சமர்ப்பித்து உள்ளது.  இதில், உஷாவின் பெயரும் இடம் பெற்றுள்ளது.  பஞ்சாப் தேசிய வங்கியின் செயல் இயக்குநர்கள் கே.வி. பிரம்மாஜி ராவ் மற்றும் சஞ்சீவ் சரண் மற்றும் பொது மேலாளர் (சர்வதேச நடவடிக்கைகள்) நேஹால் ஆஹாத் ஆகியோரது பெயர்களும் சேர்க்கப்பட்டு உள்ளன.

இந்த நிலையில், குற்றப்பத்திரிகை சமர்ப்பித்த பின்னர் மத்திய நிதி அமைச்சகம், உஷாவின் அனைத்து அதிகாரங்களையும் பறிக்கும்படி அலகாபாத் வங்கியிடம் கேட்டு கொண்டுள்ளது.

இதேபோன்று பஞ்சாப் தேசிய வங்கியின் இரு செயல் இயக்குநர்களான கே.வி. பிரம்மாஜி ராவ் மற்றும் சஞ்சீவ் சரண் ஆகியோரது அனைத்து அதிகாரங்களையும் பறிக்கும்படியும் கேட்டு கொள்ளப்பட்டு உள்ளது.

இதனை நிதி துறை செயலாளர் ராஜீவ் குமார் செய்தியாளர்களிடம் இன்று கூறியுள்ளார்.  பஞ்சாப் தேசிய வங்கியின் வாரிய கூட்டத்தின் முடிவுக்காக நிதி அமைச்சகம் காத்திருக்கிறது என்றும் அவர் கூறியுள்ளார்.


Next Story