கதுவா சிறுமி பலாத்கார - கொலை வழக்கு, ஜம்மு மக்களை அவமதிக்க சதிதிட்டம் - பா.ஜனதா தலைவர் பேச்சு


கதுவா சிறுமி பலாத்கார - கொலை வழக்கு, ஜம்மு மக்களை அவமதிக்க சதிதிட்டம் - பா.ஜனதா தலைவர் பேச்சு
x
தினத்தந்தி 14 May 2018 12:33 PM GMT (Updated: 14 May 2018 12:33 PM GMT)

கதுவாவில் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் பா.ஜனதா தலைவர் பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. #KathuaCase #BJP



ஜம்மு,

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் கதுவாவில் 8 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் கோபத்தை ஏற்படுத்தியது. இதனையடுத்து 12 வயதுக்கு குறைவான சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்தால் மரண தண்டனை விதிக்கும் வகையில் போஸ்கோ சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்பட்டது. சிறுமி வழக்கில் பா.ஜனதாவினர் தொடக்கம் முதலே குற்றவாளிகளுக்கு ஆதரவாக உள்ளனர் என குற்றம் சாட்டப்பட்டு வருகிறது.

 பா.ஜனதா தலைவர்கள் குற்றவாளிகளுக்கு ஆதரவாகவும் போராட்டம் நடத்தினார்கள். இதன் விளைவாக அமைச்சரவையில் மாற்றம் கொண்டுவரப்பட்டது.

இந்நிலையில் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் பா.ஜனதா தலைவர் பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

குற்றவாளிகளுக்கு ஆதரவாக போராடியவர்களின் ஒருவரும், அமைச்சரவில் இருந்து விலகியவருமான பா.ஜனதா தலைவர் லால் சிங் பேசுகையில், ஜம்மு மக்களுக்கு அவமதிக்கும் வகையில் சதிதிட்டம் செய்யப்பட்டு உள்ளது என குற்றம் சாட்டிஉள்ளார். இவ்விவகாரத்தில் சிபிஐ விசாரணைக்கு மாநில அரசு எதிர்ப்பு தெரிவிப்பது குறித்து கேள்வியையும் எழுப்பி உள்ளார். “இவ்வழக்கில் சிபிஐ விசாரணையை வேண்டாம் என்பவர்களிடம் சிபிஐ என்ன பாகிஸ்தான் முகமையா? என கேள்வியை கேட்க விரும்புகிறேன்,” எனவும் குறிப்பிட்டு உள்ளார். 

இவ்விவகாரத்தில் சிபிஐ விசாரணை வேண்டும் என்ற எங்களுடைய கோரிக்கையானது, நிறைவேற்றப்படும் வரையில் ஓயாது எனவும் குறிப்பிட்டு உள்ளார் லால் சிங். 

Next Story