1,300 டாஸ்மாக் கடைகளை மூடும் விவகாரம்: சென்னை ஐகோர்ட்டு உத்தரவுக்கு தடை விதிக்க முடியாது - சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு


1,300 டாஸ்மாக் கடைகளை மூடும் விவகாரம்: சென்னை ஐகோர்ட்டு உத்தரவுக்கு தடை விதிக்க முடியாது - சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 14 May 2018 11:15 PM GMT (Updated: 14 May 2018 8:31 PM GMT)

சென்னை ஐகோர்ட்டு பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்க முடியாது என சுப்ரீம் கோர்ட்டு நேற்று உத்தரவிட்டது.

புதுடெல்லி,

1,300 டாஸ்மாக் கடைகளை மூடும் விவகாரத்தில் சென்னை ஐகோர்ட்டு பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்க முடியாது என சுப்ரீம் கோர்ட்டு நேற்று உத்தரவிட்டது.

தமிழகம் முழுவதும் நெடுஞ்சாலைகளில் உள்ள டாஸ்மாக் கடைகளை மூட சுப்ரீம் கோர்ட்டு கடந்த ஆண்டு உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து மாநிலம் முழுவதும் சுமார் 3 ஆயிரம் மதுக்கடைகள் மூடப்பட்டன. அதன் பின்னர், தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளை உள்ளாட்சி சாலைகளாக வகை மாற்றம் செய்யப்பட்டு, அடைக்கப்பட்ட மதுக்கடைகளில் பல மீண்டும் திறக்கப்பட்டன. தமிழக அரசின் இந்த நடவடிக்கையை எதிர்த்து வக்கீல்களுக்கான சமூகநீதிப்பேரவையின் தலைவர் கே.பாலு சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

இதை விசாரித்த ஐகோர்ட்டு ‘தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளை உள்ளாட்சி சாலைகளாக வகை மாற்றம் செய்து, அதுகுறித்த முறையான அறிவிப்பு வெளியிடாமல், அந்த சாலைகளில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டு இருந்தால், அப்படிப்பட்ட கடைகளை உடனடியாக மூட வேண்டும்’ என கடந்த 28-ந்தேதி உத்தரவிட்டது. வகைமாற்றம் செய்யாமல் புதிதாக டாஸ்மாக் கடைகளை திறக்கவும் தடை விதித்த நீதிபதிகள், நட்சத்திர ஓட்டல்களில் உள்ள மதுபான விடுதிகளுக்கு எந்த தடையும் இல்லை என்றும் உத்தரவு பிறப்பித்தனர்.

இதனால் 1,300 மதுக்கடைகள் மூடும் நிலை ஏற்பட்டது. எனவே சென்னை ஐகோர்ட்டின் உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட மதுக்கடைகள் திடீரென்று மூடப்படுவதால் பல்லாயிரக்கணக்கான ஊழியர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக கூறியிருந்த தமிழக அரசு, மதுவால் ஏற்படும் சாலை விபத்துகளை தவிர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் கூறியிருந்தது.

இந்த மனு நேற்று சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, ஏ.எம்.கன்வில்கர், டி.ஒய்.சந்திரசூட் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில் மூத்த வக்கீல்கள் முகுல் ரோத்தகி, யோகேஷ் கன்னா ஆகியோர் ஆஜரானார்கள்.

அவர்கள் தங்கள் வாதத்தில், ‘டாஸ்மாக் கடைகள் மூடும் விவகாரத்தில் சென்னை ஐகோர்ட்டு வழங்கி உள்ள தீர்ப்பு சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்புக்கு எதிராக அமைந்துள்ளது. சண்டிகர் தொடர்பான வழக்கின் தீர்ப்புக்கு தமிழக அரசு தாக்கல் செய்த விளக்கம் கோரும் மனுவின் மீது சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில்தான் நகராட்சி பகுதிகளில் புதிதாக மதுக்கடைகள் திறக்கப்பட்டன. எனவே சென்னை ஐகோர்ட்டின் தீர்ப்புக்கு தடை விதிக்க வேண்டும்’ என்று கூறினர்.

ஆனால் மனுதாரர் கே.பாலு மற்றும் அவரது சார்பில் ஆஜரான வக்கீல் தனஞ்செயன் தங்கள் வாதத்தில், ‘சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பில் நகராட்சி பகுதிகளில் செல்லும் நெடுஞ்சாலைகளுக்கு முழு விதிவிலக்கு அளிக்கவில்லை. ஆனால் தமிழ்நாடு அரசு சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவை தவறாக புரிந்து கொண்டு, இரவோடு இரவாக 1,300 மதுக்கடைகளை நகராட்சி பகுதிகளில் திறந்துள்ளது’ என்று குற்றம் சாட்டினர். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், இந்த விவகாரத்தில் தங்கள் உத்தரவு தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது எனக்கூறியதுடன், சென்னை ஐகோர்ட்டின் தீர்ப்புக்கு தடை விதிக்க முடியாது எனவும் உத்தரவு பிறப்பித்தனர்.

அவர்கள் மேலும் கூறுகையில், ‘நகராட்சி பகுதிகளில் வரும் நெடுஞ்சாலைகளில் மதுக்கடைகள் திறப்பது குறித்து கடைவாரியாகத்தான் முடிவெடுத்து இருக்க வேண்டும். ஒரே உத்தரவில் இத்தனை கடைகள் திறந்துள்ளதை அனுமதிக்க முடியாது. எனவே சுப்ரீம் கோர்ட்டின் முந்தைய உத்தரவை அடிப்படையாக கொண்டு புதிய உத்தரவை பிறப்பித்து அதை சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு தாக்கல் செய்ய வேண்டும்’ என உத்தரவிட்டனர். பின்னர் இந்த வழக்கின் விசாரணையை 23-ந்தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

Next Story