ஜம்முவில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி துப்பாக்கிச்சூடு: இந்திய எல்லை பாதுகாப்பு படை வீரர் பலி


ஜம்முவில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி துப்பாக்கிச்சூடு: இந்திய எல்லை பாதுகாப்பு படை வீரர் பலி
x
தினத்தந்தி 15 May 2018 2:27 AM GMT (Updated: 15 May 2018 2:27 AM GMT)

ஜம்மு காஷ்மீரில் உள்ள சர்வதேச எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் இந்திய எல்லை பாதுகாப்பு படை வீரர் ஒருவர் வீர மரணம் அடைந்துள்ளார். #JammuAndKashmir

ஜம்மு, 

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் சம்பா மாவட்டத்தில் உள்ள சர்வதேச எல்லைப்பகுதியில் பாகிஸ்தான் ராணுவம், போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி துப்பாக்கிச்சூடு நடத்தியது. இதில் எல்லை பாதுகாப்பு படை வீரர் ஒருவர் வீர மரணம் அடைந்தார். 

நேற்றிரவு 11.30 மணியளவில் மங்குசாக் எல்லைப்பகுதியில், பாகிஸ்தான் ராணுவத்தினர் கண்மூடித்தனமான துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்டனர். இத்தாக்குதல் சம்பவத்திற்கு தக்க பதிலடி கொடுக்கும் விதமாக இந்திய ராணுவத்தினர் எதிர்தாக்குதலில் ஈடுபட்டனர். இருப்பினும் இந்த பயங்கர தாக்குதல் சம்பவத்தில் துப்பாக்கி குண்டு பாய்ந்து இந்திய எல்லை பாதுகாப்பு படை வீரர் தேவேந்தர் சிங் வீர மரணம் அடைந்தார். 

குண்டு பாய்ந்ததும் உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட தேவேந்தர் சிங் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக மூத்த அதிகாரி ஒருவர் வருத்தம் தெரிவித்துள்ளார். இந்நிலையில் இந்த வருடம் மட்டும் பாகிஸ்தான் ராணுவத்தினர் சுமார் 700-க்கும் அதிகமான தடவை எல்லை மீறிய தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டுள்ளதாகவும், துப்பாக்கிச்சூடு சம்பவத்தால் 17 இந்திய பாதுகாப்பு படை வீரர்கள் உயிரிழந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிரதமர் நரேந்திர மோடி வரும் 19-ந் தேதி ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு வருகை தரும் நிலையில்,  இச்சம்பவம் நடைபெற்றுள்ளது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.  மேலும் மாநிலத்தின் பதற்றமான பகுதிகளில் தொடர்ந்து 2-வது நாளாக இந்திய ராணுவத்தினர் ஹெலிகாப்டரில் மூலம் கண்காணித்து பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

Next Story