கர்நாடகாவில் பரமேஷ்வரா தலைமையிலான காங்கிரஸ் குழுவுக்கு ஆளுநர் இல்லத்தில் அனுமதி மறுப்பு


கர்நாடகாவில் பரமேஷ்வரா தலைமையிலான காங்கிரஸ் குழுவுக்கு ஆளுநர் இல்லத்தில் அனுமதி மறுப்பு
x
தினத்தந்தி 15 May 2018 10:33 AM GMT (Updated: 15 May 2018 10:33 AM GMT)

கர்நாடகாவில் பரமேஷ்வரா தலைமையில் ஆளுநரை சந்திக்க சென்ற காங்கிரஸ் குழுவுக்கு ஆளுநர் இல்லத்தில் அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது. #KarnatakaElections2018

பெங்களூரு,

கர்நாடகாவில் மொத்தம் உள்ள 224 தொகுதிகளில் ஜெயநகர், ராஜராஜேஸ்வரி நகர் தவிர்த்து 222 தொகுதிகளுக்கு கடந்த 12-ந் தேதி தேர்தல் நடந்தது.  இந்த தேர்தலில், காங்கிரஸ், பா.ஜனதா, ஜனதா தளம்(எஸ்)-பகுஜன் சமாஜ் கூட்டணி ஆகிய 3 கட்சிகள் இடையே கடும் போட்டி இருந்து வந்தது. 

இந்த தேர்தலில் 72.36 சதவீத ஓட்டுகள் பதிவாகின என தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது.  மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மாநிலம் முழுவதும் 38 மையங்களில் வைக்கப்பட்டு இருந்தன.  அந்த மையங்களில் ஓட்டு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது.

இதில் தொடக்கத்தில் இருந்தே பாரதீய ஜனதா கட்சி முன்னிலை வகித்து வந்தது.  பாரதீய ஜனதா முதல் மந்திரி வேட்பாளர் எடியூரப்பா ஷிகாரிபுரா தொகுதியில் 35 ஆயிரத்து 397 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

ஆட்சி அமைக்க தேவையான எண்ணிக்கையிலான தொகுதிகள் கைவசம் இல்லாத நிலையில் காங்கிரஸ் கட்சி, மதசார்பற்ற ஜனதா தளத்திற்கு ஆதரவு தர முன்வந்துள்ளது.  இன்று மாலை 4 மணிக்கு ஆளுநரை சந்திக்க முதல் மந்திரி சித்தராமையா முடிவு செய்துள்ளார்.

இந்த நிலையில், பரமேஷ்வரா தலைமையில் ஆளுநரை சந்திக்க காங்கிரஸ் குழு ஒன்று சென்றது.  ஆனால் ஆளுநர் இல்லத்தில் அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது.  இதனை தொடர்ந்து பரமேஷ்வரா தலைமையிலான குழு அங்கிருந்து திரும்பி விட்டது.

Next Story