கர்நாடகாவில் பா.ஜனதா நகர்வுக்கு ‘செக்’ குமாரசாமிக்கு ஆதரவு என இருகட்சி எம்.எல்.ஏ.க்களிடம் கையெழுத்து


கர்நாடகாவில் பா.ஜனதா நகர்வுக்கு ‘செக்’ குமாரசாமிக்கு ஆதரவு என இருகட்சி எம்.எல்.ஏ.க்களிடம் கையெழுத்து
x
தினத்தந்தி 16 May 2018 9:36 AM GMT (Updated: 16 May 2018 9:36 AM GMT)

கர்நாடகாவில் பா.ஜனதாவின் ஆட்சி அமைக்கும் நகர்வுக்கு காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதா தளம் சார்பில் ‘செக்’ வைக்கப்பட்டு உள்ளது. #HDKumaraswamy #KarnatakaElections2018

பெங்களூரு,

தொங்கு சட்டசபை அமைந்துள்ள கர்நாடகாவில் பாரதீய ஜனதாவும், காங்கிரஸ்- மதசார்பற்ற ஜனதா தளம் கூட்டணியும் ஆட்சி அமைக்கும் முயற்சியில் தீவிரமாக இறங்கி உள்ளது. கோவா, மணிப்பூர் மாநிலங்களில் தனிப்பெரும் கட்சியாக வந்தபோதும் காங்கிரஸ் ஆட்சி அமைக்க முடியவில்லை,  இரண்டாவது இடம்பிடித்த பா.ஜனதா உடனடியாக ஆட்சி அமைக்க உரிமை கோரி உதிரி கட்சிகளை இணைத்தது. இவ்விவகாரத்தில் பாடம் படித்த காங்கிரஸ் அதே வழியை பின்பற்றுகிறது. இது வெற்றியடையுமா? என்பது கவர்னர் முடிவில் உள்ளது. இதற்கிடையே காங்கிரஸ் பின்வாசல் வழியாக ஆட்சி அமைக்க முயற்சிக்கிறது என எடியூரப்பா குற்றம் சாட்டினார். 

இதற்கிடையே எம்.எல்.ஏ.க்களை இழுக்க பா.ஜனதா குதிரை பேரத்தில் ஈடுபடுவதாக காங்கிரசும், மதசார்பற்ற ஜனதா தளமும் குற்றம் சாட்டி வருகிறது.

ரூ. 100 கோடி மற்றும் அமைச்சரவையில் இடம் என எம்.எல்.ஏ.க்களுக்கு பா.ஜனதா ஆசைவார்த்தை கூறுகிறது என குமாரசாமி குற்றம் சாட்டிஉள்ளார். இதனை பாரதீய ஜனதாவின் பிரகாஷ் ஜவடேகர் மறுத்து உள்ளார். இருப்பினும் பா.ஜனதா எம்.எல்.ஏ.க்களை இழுக்க தீவிரம் காட்டும் என காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தளம் எம்.எல்.ஏ.க்களை பாதுகாக்கவும் நடவடிக்கை எடுக்கிறது. பாரதீய ஜனதாவை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பு விடுத்தாலும், பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. பாரதீய ஜனதாவுக்கு 8 எம்.எல்.ஏ.க்கள் தேவை உள்ளது. இந்நிலையில் எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு குமாரசாமிக்குதான் என்பதை உறுதிசெய்யும் வகையில் அக்கட்சிகள் நடவடிக்கையை தொடங்கி உள்ளது. 

அதாவது குமாரசாமிக்கு ஆதரவு அளிக்கிறோம் என மதசார்பற்ற ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏ.க்கள் கையெழுந்து பெறப்படுகிறது. அவர்களுடைய ஆதரவு அடங்கிய ஆவணத்தை ஆளுநரிடம் தாக்கல் செய்யவும் முடிவு செய்யப்பட்டு உள்ளது. எம்.எல்.ஏ.க்கள் குமாரசாமிக்கு ஆதரவு கையெழுத்து அடங்கிய ஆவணம் தாக்கல் செய்யப்படும் நிலையில் பா.ஜனதாவிற்கு ‘செக்’காக அமையும் என பார்க்கப்படுகிறது. பா.ஜனதாவிடம் பெரும்பான்மையில்லாத நிலையில் காங்கிரஸ் - மதசார்பற்ற ஜனதா தளத்திற்கு கூடுதலான எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு என்பதை தெளிவுப்படுத்தும்.

Next Story