கர்நாடகாவில் ஆட்சியமைத்த பா.ஜனதா; ‘எங்களை ஆட்சியமைக்க அழையுங்கள்’ பீகார், கோவாவில் எதிர்க்கட்சிகள் களமிறங்கியது!


கர்நாடகாவில் ஆட்சியமைத்த பா.ஜனதா; ‘எங்களை ஆட்சியமைக்க அழையுங்கள்’ பீகார், கோவாவில் எதிர்க்கட்சிகள் களமிறங்கியது!
x
தினத்தந்தி 17 May 2018 11:31 AM GMT (Updated: 17 May 2018 11:31 AM GMT)

கர்நாடகாவில் பெரும்பான்மையில்லாமல் பா.ஜனதா ஆட்சியமைத்த விவகாரம் பீகார் மற்றும் கோவா அரசியலில் திருப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. #Goa #Bihar #Congress

புதுடெல்லி,

இதனைதொடர்ந்து 224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டசபைக்கு கடந்த 12–ந் தேதி தேர்தல் நடைபெற்றது. 2 தொகுதிகளை தவிர 222 தொகுதிக்கு நடந்த தேர்தலில் 72.36 சதவீத ஓட்டுகள் பதிவானது.

வாக்கு எண்ணிக்கை முடிவில் சட்டசபை தேர்தலில் கர்நாடகத்தில் எந்த கட்சிக்கும் தனி பெரும்பான்மை கிடைக்காததால், தொங்கு சட்டசபை அமைந்தது. பா.ஜனதா 104 தொகுதிகளிலும், காங்கிரஸ் 78 தொகுதிகளிலும், ஜனதா தளம்(எஸ்) கட்சி 38 தொகுதிகளிலும் வெற்றிபெற்றது. தேர்தல் முடிவுகள் முழுமையாக வெளியாவதற்கு முன்பே, கர்நாடகத்தில் புதிய ஆட்சி அமைக்க ஜனதா தளம்(எஸ்) கட்சிக்கு ஆதரவு அளிப்பதாக காங்கிரஸ் அவசர அவசரமாக அறிவித்தது. கோவா, மணிப்பூர் மாநிலங்களில் நடைபெற்ற தேர்தல்களில் பா.ஜனதா தனிப்பெரும் கட்சியாக வராத நிலையிலும் ஆட்சி அமைத்தது. இம்மாநிலங்களில் பா.ஜனதா இரண்டாவது இடம் பிடித்தது. இருப்பினும் ஆட்சி அமைக்க உரிமை கோரியது, ஆளுநர்களும் அதற்கு அனுமதியளித்தார்கள். இதே பார்முலாவை காங்கிரஸ் கர்நாடகாவில் முன்னெடுத்தது. ஆனால் பலனளிக்கவில்லை. எடியூரப்பா முதல்-மந்திரியாக பதவியேற்றார். இவ்விவகாரம் சுப்ரீம் கோர்ட்டு சென்று உள்ளது.

பா.ஜனதாவிற்கு எதிராக களமிறங்கிய எதிர்க்கட்சிகள்

இப்போது பாரதீய ஜனதாவின் பார்முலாவையே எதிர்க்கட்சிகள் வரிசையாக கையிலெடுக்க தொடங்கி உள்ளன. கோவாவில் முதலிடம் பிடித்த காங்கிரஸ் இப்போது ஆட்சியமைக்க எங்களுக்கு ஏன் அழைப்பு விடுக்கவில்லை என்ற கோரிக்கையை முன்வைத்து உள்ளது.

40 உறுப்பினர்களை கொண்ட கோவா சட்டசபைக்கு 2017 தொடக்கத்தில் நடந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு 17 இடங்களும், பாரதீய ஜனதாவுக்கு 13 இடங்களும் கிடைத்தன. இதுதவிர, மராட்டியவாடி கோமந்த கட்சி, கோவா பார்வர்டு கட்சி, சுயேச்சைகள் தலா 3 தொகுதிகளிலும் வெற்றி பெற்று உள்ளனர். சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் ஒரு தொகுதியில் வென்றது. 

இங்கு ஆட்சி அமைக்க குறைந்தபட்சம் 21 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு வேண்டும். கோவாவில் காங்கிரஸ் ஆட்சி அமைக்க மேலும் 4 உறுப்பினர்களின் ஆதரவு தேவை என்ற நிலை ஏற்பட்டது. ஆனால் பாரதீய ஜனதா மீண்டும் ஆட்சி அமைக்கவேண்டும் என்றால் மேலும் 8 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு தேவை என்ற நிலை உருவானது. ஆனால் ஆட்சியமைக்க பலம் இருப்பதாக பா.ஜனதா கூறி ஆட்சியை தனதாக்கியது. மணிப்பூர் மாநிலத்திலும் காங்கிரஸ் கட்சியே தனிப்பெரும் கட்சியாக வந்தது. ஆனால் உதிரி கட்சிகளை கொண்டு பா.ஜனதா ஆட்சி அமைத்தது. அங்கும் காங்கிரசுக்கு ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு விடுக்கவில்லை. பீகாரிலும் இதேநிலைதான். இப்போது இம்மாநிலங்களில் எல்லாம் எங்களை ஆட்சி அமைக்க அழைப்பு விடுங்கள் என எதிர்க்கட்சிகள் ஆளுநருக்கு கோரிக்கையை முன்வைத்து உள்ளன.

இப்போது கர்நாடகாவில் முதலிடம் பிடித்த பா.ஜனதாவை ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு விடுத்த விவகாரத்தை முன்வைத்து காங்கிரஸ் கோவாவில் கேள்வியை எழுப்பி உள்ளது. கோவாவில் தனிப்பெரும் கட்சியாக வந்த காங்கிரஸை ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு விடுக்கவில்லை என்பதை காங்கிரஸ் மையப்படுத்த தொடங்கி உள்ளது. கோவா காங்கிரஸ் தலைவர் யாதிஷ் நாய்க் பேசுகையில், “2017-ம் ஆண்டு நாங்கள் 17 தொகுதிகளில் வெற்றிப்பெற்றோம், தனிப்பெரும் கட்சியாக இருந்தோம். ஆனால் 13 தொகுதிகளில் வெற்றிப்பெற்ற பா.ஜனதாவை ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு விடுத்தார். ஆனால் கர்நாடகாவில் பா.ஜனதாவை அழைத்து உள்ளார். நாங்கள் எங்களை ஆட்சியமைக்க அழைப்பு விடுங்கள் என ஆளுநருக்கு கோரிக்கை விடுத்து உள்ளோம்,” என கூறிஉள்ளார். 

பீகார் விவகாரம் 

பீகாரில் 2015-ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ்-ஐக்கிய ஜனதா தளம்- ராஷ்டீரிய ஜனதா தளம் மகா கூட்டணியை அமைத்து போட்டியிட்டது. அங்கு அதிகப்பட்சமாக ராஷ்டீரிய ஜனதா தளம் 80 தொகுதிகளில் வெற்றிப்பெற்றது. ஐக்கிய ஜனதா தளம் 71 தொகுதிகளிலும், காங்கிரஸ் 27 தொகுதிகளிலும் வெற்றிபெற்றது. பாரதீய ஜனதா கட்சி 53 தொகுதிகளில் வெற்றி பெற்றது. ஐக்கிய ஜனதா தளம்- ராஷ்டீரிய ஜனதா தளம் கூட்டணி ஆட்சி அமைக்கப்பட்டது. இந்த கூட்டணி கடந்த அண்டு ஜூலையில் முடிவுக்கு வந்தது. நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம், பா.ஜனதாவுடன் கூட்டணி வைத்தது. அப்போது ஆளுநர் இக்கட்சிகளுக்கு அழைப்பு விடுத்தார். ஆனால் தனிப்பெரும்பான்மையான லாலுவின் ராஷ்டீரிய ஜனதா தளத்திற்கு அழைப்பு விடுக்கவில்லை. இப்போது அதுவே கர்நாடகாவில் மாறுபட்டு உள்ளது.

இப்போது ஆளுநர் எங்களை ஆட்சியமைக்க அழைப்பு விடுக்க வேண்டும் என்று ராஷ்டீரிய ஜனதா தளம் கோரிக்கையை முன்வைத்து உள்ளது. 

ராஷ்டீரிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் தேஜஸ்வி யாதவ் பேசுகையில், “நாங்கள் கர்நாடகாவில் ஜனநாயகம் படுகொலை செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை ஒருநாள் தர்ணா போராட்டம் நடத்த உள்ளோம். நாங்கள் எங்களை ஆட்சியமைக்க அழைப்பு விடுக்குமாறு பீகார் கவர்னருக்கு கோரிக்கை விடுக்கிறோம், கர்நாடகாவில் எப்படி தனிப்பெரும் கட்சி ஆட்சியமைக்க அழைப்பு விடுக்கப்பட்டதோ, அதன்படி பீகாரில் எங்களுக்கு அழைப்பு விடுக்க வேண்டும்,” என கூறிஉள்ளார். மேகலாயாவிலும் இதுபோன்ற கோரிக்கை எழ தொடங்கி உள்ளது. தனிப்பெரும்பான்மையான கட்சியை ஆட்சி அமைக்க அழைப்பு விடுங்கள் என இம்மாநிலங்களில் எதிர்க்கட்சிகள் ஆளுநரை சந்திக்க உள்ளது.

Next Story