கர்நாடகாவில் பா.ஜனதா ஆட்சி: ‘அரசியல் சாசனம் கேலிக்கூத்து ஆக்கப்பட்டு உள்ளது’


கர்நாடகாவில் பா.ஜனதா ஆட்சி: ‘அரசியல் சாசனம் கேலிக்கூத்து ஆக்கப்பட்டு உள்ளது’
x
தினத்தந்தி 17 May 2018 11:15 PM GMT (Updated: 17 May 2018 9:44 PM GMT)

கர்நாடகாவில் பா.ஜனதாவை ஆட்சியமைக்க அழைத்ததன் மூலம் அரசியல் சாசனம் கேலிக்கூத்தாக்கப்பட்டு இருப்பதாக ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்து உள்ளார்.

புதுடெல்லி,

கர்நாடகாவில் 222 சட்டசபை தொகுதிகளுக்கு சமீபத்தில் நடந்த தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், பா.ஜனதா 104 இடங்களை பெற்று தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற்றது. காங்கிரஸ் கட்சி 78 தொகுதிகளிலும், ஜனதாதளம் (எஸ்) 37 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன.

அங்கு ஆட்சியமைக்க அழைக்குமாறு பா.ஜனதாவின் எடியூரப்பா கவர்னர் வஜூபாய் வாலாவை சந்தித்து கோரிக்கை விடுத்தார். இதைப்போல காங்கிரஸ் ஆதரவை பெற்றிருந்த ஜனதாதளம் (எஸ்) கட்சித்தலைவர் குமாரசாமியும் கவர்னரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார். இதனால் மாநில அரசியலில் குழப்பம் நீடித்து வந்தது.

நீண்ட இழுபறிக்குப்பின் பா.ஜனதாவின் எடியூரப்பாவை, ஆட்சியமைக்குமாறு நேற்று முன்தினம் இரவு கவர்னர் அழைப்பு விடுத்தார். அதன்படி கர்நாடகாவின் புதிய முதல்–மந்திரியாக எடியூரப்பா நேற்று காலையில் பதவியேற்றார்.

தங்கள் கூட்டணிக்கு பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவு இருக்கும் நிலையில், பா.ஜனதாவை ஆட்சியமைக்க அழைப்பு விடுத்ததற்கு காங்கிரஸ், ஜனதாதளம் (எஸ்) கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளன. கர்நாடக கவர்னரின் முடிவை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்து உள்ளார்.

இது குறித்து அவர் தனது டுவிட்டர் தளத்தில், ‘கர்நாடகாவில் பா.ஜனதாவுக்கு போதுமான பெரும்பான்மை கிடைக்காத போதும், மாநிலத்தில் அரசு அமைக்க பகுத்தறிவற்ற முறையில் வலியுறுத்தி நமது அரசியல் சாசனம் கேலிக்கூத்தாக்கப்பட்டு உள்ளது. இன்று (நேற்று) காலையில் பா.ஜனதா தனது போலி வெற்றியை கொண்டாடும் வேளையில், ஜனநாயகம் தோற்கடிக்கப்பட்டதை இந்தியா அனுசரிக்கும்’ என்று குறிப்பிட்டு இருந்தார்.

சத்தீஷ்காரில் நேற்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசிய ராகுல் காந்தி, நாட்டின் அரசியல் சாசனம் கடுமையான தாக்குதலுக்கு உள்ளாகி வருவதாகவும், நாடு முழுவதும் ஒருவித அச்சம் நிறைந்த சூழல் நிலவுவதாகவும் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:–

கர்நாடகாவில் எம்.எல்.ஏ.க்கள் ஒருபுறமும், கவர்னர் மறுபுறமும் இருக்கின்றனர். அங்கு எத்தகைய முயற்சி நடந்து வருகிறது என்பது உங்களுக்கு தெரியும். தங்கள் எம்.எல்.ஏ.க்களுக்கு பா.ஜனதா கட்சி ரூ.100 கோடி பேரம் பேசுவதாக ஜனதாதளம் (எஸ்) தலைவர் குமாரசாமி கூறியுள்ளார்.

நாட்டின் நீதித்துறை, ஊடகங்கள் என ஜனநாயக அமைப்புகள் அனைத்தும் அச்சத்தில் இருக்கின்றன. பா.ஜனதா எம்.பி.க்கள் கூட அதே பயத்தில்தான் இருக்கின்றனர். ஏனெனில் பிரதமர் (மோடி) முன்னிலையில் அவர்களால் ஒரு வார்த்தை கூட பேச முடியவில்லை.

பொதுவாக மக்கள் நியாயம் வேண்டி நீதித்துறைக்கு செல்வதை கடந்த 70 ஆண்டுகளாக காண முடிந்தது. ஆனால் முதல் முறையாக சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் 4 பேர் வெளியே வந்து மக்களின் ஆதரவை கேட்டுள்ளனர். தங்களை பணியாற்ற விடவில்லை என அவர்கள் கூறுகின்றனர். இதை வரலாற்றிலேயே முதல் முறையாக பார்க்க முடிந்தது.

இதுபோன்ற சம்பவங்கள் பாகிஸ்தான் மற்றும் சில ஆப்பிரிக்க நாடுகளில்தான் நடைபெறும். அங்கு சர்வாதிகாரி ஒருவர் நீதித்துறை மற்றும் ஊடகங்களை முடக்கி வைப்பார். அப்படி சர்வாதிகாரத்தின் கீழ் நடைபெறுவது போலவே இந்த சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. 70 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, தேசியக்கட்சி ஒன்றின் தலைவராக கொலைக்குற்றவாளி ஒருவர் இருக்கிறார்.

தலித் பிரிவினர், பழங்குடி மக்கள் மற்றும் பெண்களை ஒடுக்கி வரும் ஆர்.எஸ்.எஸ். மற்றும் பா.ஜனதாவினர் நாட்டின் செல்வத்தை சில குறிப்பிட்ட நபர்களுக்கு வழங்கி வருகின்றனர். ஆனால் விவசாயிகளின் பயிர்க்கடனை தள்ளுபடி செய்ய எந்த கொள்கையும் இல்லை என நிதி மந்திரி கூறுகிறார்.

இவ்வாறு ராகுல் காந்தி கூறினார்.

இதற்கிடையே கர்நாடகாவில் பா.ஜனதா ஆட்சியமைத்ததை, இந்திய ஜனநாயகத்தில் விழுந்த கரும்புள்ளி என காங்கிரஸ் வர்ணித்து இருக்கிறது. இது குறித்து கட்சியின் செய்தி தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜேவாலா தனது டுவிட்டர் தளத்தில் கூறுகையில், ‘முதல்–மந்திரி பதவியின் ஒரு கேலிக்கூத்தான பதவிப்பிரமாணம் இது. பெரும்பான்மை பெற மோசடி நடக்கிறது. அரசியல் சாசனத்துக்கு துரோகம் இழைக்கப்படுகிறது. ஒரு ஜனநாயக மோசடி நடக்கிறது’ என்று குற்றம் சாட்டி இருந்தார்.

கர்நாடக கவர்னர் எடியூரப்பாவுக்கு சட்ட விரோதமாக பதவி பிரமாணம் செய்து வைத்திருப்பதாகவும், பா.ஜனதா அலுவலகமாக கவர்னர் மாளிகை மாறியிருப்பதாகவும் கண்டனம் தெரிவித்துள்ள அவர், ஜனநாயகத்தில் விழுந்துள்ள இந்த கரும்புள்ளி அழிக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.


Next Story