தேசிய செய்திகள்

காங்கிரஸ், ஜனதாதளம் (எஸ்) கட்சிகளின் எம்.எல்.ஏ.க்களை வளைக்க பா.ஜனதா தீவிரம் + "||" + BJP's intensity to bend the MLAs of Congress and Janata Dal (S) parties

காங்கிரஸ், ஜனதாதளம் (எஸ்) கட்சிகளின் எம்.எல்.ஏ.க்களை வளைக்க பா.ஜனதா தீவிரம்

காங்கிரஸ், ஜனதாதளம் (எஸ்) கட்சிகளின் எம்.எல்.ஏ.க்களை வளைக்க பா.ஜனதா தீவிரம்
கர்நாடக சட்டசபையில் மெஜாரிட்டியை நிரூபிக்க கவர்னர் 15 நாள் ‘கெடு’ விதித்துள்ள நிலையில், காங்கிரஸ், ஜனதா தளம் (எஸ்) எம்.எல்.ஏ.க்களை வளைக்கும் முயற்சியில் பாரதீய ஜனதா தீவிரமாக ஈடுபட்டு உள்ளது.
சொகுசு விடுதியில் தங்கி இருந்த காங்கிரஸ், ஜனதா தளம் (எஸ்) எம்.எல்.ஏ.க்கள் கொச்சிக்கு கொண்டு செல்லப்படுகின்றனர்.

பெங்களூரு,

224 உறுப்பினர்களை கொண்ட கர்நாடக சட்டசபைக்கு நடந்த தேர்தலில், தனித்து ஆட்சி அமைக்கக்கூடிய அளவுக்கு எந்த கட்சிக்கும் மெஜாரிட்டி கிடைக்கவில்லை.


222 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றதில், அதிகபட்சமாக பாரதீய ஜனதாவுக்கு 104 இடங்கள் கிடைத்தன. காங்கிரசுக்கு 78 இடங்களும், ஜனதாதளம் (எஸ்) கட்சிக்கு 37 இடங்களும், அதன் கூட்டணி கட்சியான பகுஜன் சமாஜூக்கு ஒரு இடமும் கிடைத்தன. 2 தொகுதிகளில் சுயேச்சைகள் வெற்றி பெற்றனர்.

தேர்தலுக்கு பிறகு காங்கிரசும், ஜனதாதளம் (எஸ்) கட்சியும் கூட்டணி சேர்ந்து ஆட்சி அமைக்க முயற்சித்தன. ஆனால் தனிப்பட்ட முறையில் அதிக இடங்களை கைப்பற்றிய பாரதீய ஜனதாவுக்கு, ஆட்சி அமைக்க வருமாறு கவர்னர் வஜூபாய் வாலா அழைப்பு விடுத்தார். அதை ஏற்று கர்நாடகத்தின் புதிய முதல்-மந்திரியாக பாரதீய ஜனதாவைச் சேர்ந்த எடியூரப்பா நேற்று பதவி ஏற்றார்.

சட்டசபையில் மெஜாரிட்டியை நிரூபிக்க எடியூரப்பாவுக்கு கவர்னர் 15 நாட்கள் அவகாசம் வழங்கி ‘கெடு’ விதித்து இருக்கிறார்.

இதுகுறித்து எடியூரப்பா நேற்று பெங்களூருவில் நிருபர்களிடம் பேசுகையில், 15 நாட்கள் வரை தான் காத்திருக்கப்போவது இல்லை என்றும், அதற்கு முன்னதாகவே சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு கோரி மெஜாரிட்டியை நிரூபிக்க இருப்பதாகவும் தெரிவித்தார். மக்கள் அளித்துள்ள தீர்ப்பை ஏற்று, சட்டசபையில் உறுப்பினர்கள் தங்கள் மனசாட்சிப்படி வாக்களிக்க வேண்டும் என்றும் அப்போது அவர் கூறினார்.

கர்நாடக சட்டசபைக்கு தேர்ந்து எடுக்கப்பட்ட மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 221. (ஜனதாதளம் (எஸ்) தலைவரான குமாரசாமி 2 தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்று உள்ளார்).

இதன் அடிப்படையில் பார்த்தால், சட்டசபையில் மெஜாரிட்டியை நிரூபிக்க எடியூரப்பாவுக்கு 111 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு தேவை. ஏற்கனவே பாரதீய ஜனதாவுக்கு 104 எம்.எல்.ஏ.க்கள் இருப்பதால் இன்னும் 7 பேரின் ஆதரவுதான் அந்த கட்சிக்கு தேவைப்படுகிறது. இந்த ஆதரவை எளிதில் திரட்டிவிட முடியும் என்று அக்கட்சி நம்புகிறது.

தென் மாநிலங்களை பொறுத்தமட்டில், கர்நாடகத்தில் தற்போது மீண்டும் ஆட்சியை கைப்பற்றி இருப்பதால், அதை தக்கவைத்துக்கொள்வதில் பாரதீய ஜனதா மேலிடம் மிகவும் உறுதியாக இருக்கிறது. மெஜாரிட்டிக்கு போதிய எம்.எல்.ஏ.க்களின் ஆதரவை திரட்டி ஆட்சியை தக்கவைத்துக்கொள்வதற்காக அக்கட்சி மேலிடம் சில அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு உள்ளது.

இதற்காக காங்கிரஸ், ஜனதாதளம் (எஸ்) கட்சிகளின் எம்.எல்.ஏ.க்களை வளைப்பதற்காக வலை வீசப்படுகிறது.

எடியூரப்பா, கர்நாடகத்தில் செல்வாக்கு பெற்று விளங்கும் லிங்காயத் சமூகத்தைச் சேர்ந்தவர். காங்கிரஸ், ஜனதாதளம் (எஸ்) கட்சிகளில் உள்ள லிங்காயத் சமூகத்தைச் சேர்ந்த 10-க்கும் அதிகமான எம்.எல். ஏ.க்களை தங்கள் பக்கம் இழுப்பதற்கான உத்திகளை பாரதீய ஜனதா வகுத்து வருகிறது.

தங்கள் சமுதாயத்தைச் சேர்ந்தவரின் (எடியூரப்பா) ஆட்சி கவிழ்வதை அவர்கள் விரும்பமாட்டார்கள் என்றும், எனவே அவர்கள் தங்களுக்கு ஆதரவாக திரும்புவார்கள் என்றும் பாரதீய ஜனதா மிகுந்த நம்பிக்கையுடன் இருக்கிறது. இது தொடர்பாக அந்த எம்.எல்.ஏ.க்களின் ஆதரவாளர்கள் மற்றும் உறவினர்களுடன் பாரதீய ஜனதா தலைவர்கள் பேசி வருகிறார்கள்.

இதுதவிர, அந்த கட்சிகளில் உள்ள சில அதிருப்தி எம்.எல்.ஏ.க்களை இழுக்கும் நடவடிக்கையையும் மேற்கொண்டு உள்ளனர்.

விஜயநகர் தொகுதியில் இருந்து காங்கிரஸ் சார்பில் தேர்ந்து எடுக்கப்பட்ட ஆனந்த் சிங், மஸ்கி தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பிரதாப் கவுடா பட்டீல் ஆகியோர் ஏற்கனவே பாரதீய ஜனதா பக்கம் சாய்ந்துவிட்டனர்.

இவர்களில் பிரதாப் கவுடா பட்டீல் முன்பு பாரதீய ஜனதா அரசில் மந்திரியாக இருந்தவர். சமீபத்தில்தான் அக்கட்சியில் இருந்து விலகி காங்கிரசில் சேர்ந்தார். இதேபோல் ஆனந்த் சிங்கும் முன்பு பாரதீய ஜனதாவில் இருந்தவர்தான்.

காங்கிரஸ், ஜனதாதளம் (எஸ்) எம்.எல்.ஏ.க்களை பேரம் பேசி பாரதீய ஜனதா இழுப்பதை தடுக்க அவர்கள் அனைவரும் பாதுகாப்பாக அழைத்துச் செல்லப்பட்டு பெங்களூரு அருகே உள்ள சொகுசு விடுதியில் தங்க வைக்கப்பட்டு இருந்தனர். அங்கிருந்து உம்னாபாத் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. ராஜசேகர் பட்டீல் ரகசியமாக வெளியேறி விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

எடியூரப்பா முதல்-மந்திரியாக நேற்று பதவி ஏற்றதை தொடர்ந்து, அந்த சொகுசு விடுதிக்கு போடப்பட்டு இருந்த போலீஸ் பாதுகாப்பு திடீரென்று வாபஸ் பெறப்பட்டது. இதைத்தொடர்ந்து, சொகுசு விடுதியில் இருக்கும் எம்.எல்.ஏ.க்கள் விலை போகாமல் இருக்க, விடுதியை காலி செய்து விட்டு, அவர் களை பெங்களூருவில் இருந்து கேரள மாநிலம் கொச்சிக்கு அழைத்துச் செல்கிறார்கள்.

கேரள மாநிலத்தில் இடதுசாரி கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது. கர்நாடகத்தில் அரசியல் குழப்பம் ஏற்பட்டதை தொடர்ந்து, அந்த மாநில எம்.எல்.ஏ.க்களுக்கு கேரள சுற்றுலா துறை அழைப்பு விடுத்து இருந்தது குறிப்பிடத்தக்கது ஆகும்.

சுயேச்சை எம்.எல்.ஏ.க்கள் 2 பேர் எந்த பக்கம் சாய்வது என்று தெரியாமல் மதில்மேல் பூனையாக இருக்கிறார்கள். அவர்களை தங்கள் பக்கம் இழுக்கும் வேலையில் பாரதீய ஜனதா தலைவர்கள் இறங்கி உள்ளனர்.

மேற்கண்ட காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 3 பேர், சுயேச்சை எம்.எல்.ஏ.க்கள் 2 பேர் என மொத்தம் 5 பேர் பாரதீய ஜனதா பக்கம் இருப்பது உறுதியாகிவிட்டால் தங்கள் பலம் 104-ல் இருந்து 109 ஆக உயர்ந்து விடும் என்று அக்கட்சி கருதுகிறது. இதுபோக மெஜாரிட்டிக்கு இன்னும் 2 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவுதான் தேவை என்பதால், அந்த ஆதரவை எளிதில் திரட்டிவிட முடியும் என்று அக்கட்சி உறுதியாக நம்புகிறது.

சட்டசபையில் எடியூரப்பா நம்பிக்கை வாக்கெடுப்பு கோரும் போது, அதில் காங்கிரஸ், ஜனதாதளம் (எஸ்) கட்சிகளைச் சேர்ந்த சில எம்.எல்.ஏ.க்களை கலந்து கொள்ளாமல் இருக்கச் செய்யும் முயற்சிகளையும் பாரதீய ஜனதா செய்து வருகிறது. அப்படி அந்த கட்சிகளின் எம்.எல்.ஏ.க் கள் சிலர் அன்று சட்டசபைக்கு வராமல் இருந்தால், சபையில் இருக்கும் மொத்த எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை குறையும் என்பதால், வாக்கெடுப்பில் எடியூரப்பா எளிதில் வெற்றி பெற்றுவிடமுடியும் என்று மற்றொரு வகையிலும் கணக்குபோடுகிறது.

மொத்தத்தில் காங்கிரசிடம் இருந்து பறித்த ஆட்சியை தக்க வைத்துக்கொள்வதற் கான அனைத்து முயற்சிகளையும் பாரதீய ஜனதா செய்து வருகிறது.

மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சி அதிகாரம் பாரதீய ஜனதாவின் கையில் இருப்பதால், தங்கள் எம்.எல்.ஏ.க் களை தக்கவைத்துக்கொள்வதற்கு காங்கிரசும், ஜனதாதளம் (எஸ்) கட்சியும் கடுமையாக போராடவேண்டி இருக்கிறது. என்றாலும் மெஜாரிட்டி பலம் இல்லாமல் பதவி ஏற்றுள்ள எடியூரப்பாவின் அரசை கவிழ்ப்பதில் அக்கட்சிகள் மிகவும் உறுதியாகவும் தீவிரமாகவும் உள்ளன.

இந்த பலப்பரீட்சையில் யாருக்கு வெற்றி? என்பது, கர்நாடக அரசியலில் அடுத்து வரும் நாட்களில் ஏற்படும் அதிரடி திருப்பங்களை பொறுத்தே அமையும்.