கர்நாடகம் கையைவிட்டு போகக்கூடாது காங்கிரஸ் ‘ஸ்திரம்’ சோனியா காந்தி - பிரியங்கா கடைசிநேர வியூகம்!


கர்நாடகம் கையைவிட்டு போகக்கூடாது காங்கிரஸ் ‘ஸ்திரம்’ சோனியா காந்தி - பிரியங்கா கடைசிநேர வியூகம்!
x
தினத்தந்தி 18 May 2018 9:29 AM GMT (Updated: 18 May 2018 9:29 AM GMT)

கர்நாடகம் கையைவிட்டு போகக்கூடாது என்பதில் ஸ்திரமாக இருக்கும் காங்கிரஸ் அதற்காக எல்லாவிதமான போராட்டத்திலும் எதிர்கொள்ள தயாராகி உள்ளது. #Congress #PriyankaGandhi #BJP

பெங்களூரு,

கர்நாடக சட்டசபை தேர்தல் கடந்த 12–ந்தேதி நடந்தது. இதையடுத்து கடந்த 15–ந்தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில், பா.ஜனதா 104 இடங்களை பிடித்து தனிபெரும் கட்சியாக உருவெடுத்தது.

 காங்கிரஸ் கட்சி 78 இடங்களிலும், ஜனதா தளம்(எஸ்) 38 இடங்களில் வெற்றி பெற்றன. யாருக்கும் தனிபெரும்பான்மை கிடைக்கவில்லை. 

இந்த நிலையில், காங்கிரஸ் கட்சி அவசர, அவசரமாக ஜனதா தளம்(எஸ்) ஆட்சி அமைக்க ஆதரவு தெரிவிப்பதாக அறிவித்தது.

இதையடுத்து ஜனதா தளம்(எஸ்) கட்சி தலைவர் குமாரசாமி, தன்னை ஆட்சி அமைக்க அழைக்குமாறு கவர்னரிடம் கடிதம் கொடுத்தார். அதேபோல, தாங்கள் தனிபெரும் கட்சியாக உள்ளதால் தங்களை ஆட்சி அமைக்க அழைக்குமாறு எடியூரப்பாவும் கவர்னரிடம் கடிதம் கொடுத்தார். இந்த நிலையில் கவர்னர் வஜூபாய் வாலா, எடியூரப்பாவை ஆட்சி அமைக்க வருமாறு அழைப்பு விடுத்தார். அதன்படி எடியூரப்பா கர்நாடகத்தின் முதல்–மந்திரியாக நேற்று பொறுப்பேற்று கொண்டார். எடியூரப்பாவை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பு விடுத்ததுமே காங்கிரஸ் சுப்ரீம் கோர்ட்டு கதவை தட்டியது.

     தேர்தல் முடிவுகள் முழுமையாக வெளியாவதற்கு முன்பே, கர்நாடகத்தில் புதிய ஆட்சி அமைக்க ஜனதா தளம்(எஸ்) கட்சிக்கு ஆதரவு அளிப்பதாக காங்கிரஸ் அவசர அவசரமாக அறிவித்தது. கோவா, மணிப்பூர் மாநிலங்களில் நடைபெற்ற தேர்தல்களில் பா.ஜனதா தனிப்பெரும் கட்சியாக வராத நிலையிலும் ஆட்சி அமைத்தது. இதே வழிமுறையை காங்கிரஸ் கையில் எடுத்து உள்ளது. 
 
மத்தியில் பாரதீய ஜனதா ஆட்சி அமைந்த பின்னர் காங்கிரசுக்கு மாநில சட்டசபைத் தேர்தல்களில் ஒரே தோல்வி முகம் மட்டும்தான். தென் இந்தியாவில் பாரதீய ஜனதா எளிதாக கால்பதிக்க முடியாது, கர்நாடகாவில் நிச்சயமாக வெற்றி பெறுவோம் என பெரும் நம்பிகையோடு களமிறங்கிய காங்கிரசுக்கு தேர்வு முடிவுகள் பெரும் அதிர்ச்சியை கொடுக்கும் விதமாகவே இருந்தது. இருப்பினும் காங்கிரஸ் தன்னிடம் இருந்து போகக்கூடாது என்பதில் காங்கிரஸ் ஸ்திரமாக உள்ளது. இப்போது சுப்ரீம் கோர்ட்டில் நியாயம் கோரி காங்கிரஸ் போராடுகிறது. 

அதன்விளைவாக பா.ஜனதா நாளையே மெஜாரிட்டியை நிரூபிக்க வேண்டும் என உத்தரவிட்டு உள்ள சுப்ரீம் கோர்ட்டு, கூடுதல் அவகாசம் கொடுக்க மறுத்துவிட்டது. மறுபுறம் காங்கிரசும், மதசார்பற்ற ஜனதா தளமும் தங்களுடைய எம்.எல்.ஏ.க்களை காப்பாற்றுவதில் தீவிரமாக இறங்கி உள்ளது. 

கர்நாடக விவகாரத்தில் பா.ஜனதாவிற்கு எதிராக அனைத்து எதிர்க்கட்சிகளையும் தன்வசம் இழுப்பதிலும் காங்கிரஸ் தீவிரம் காட்டுகிறது.

சோனியா - பிரியங்காவிடம் ஆலோசனை

கர்நாடக விவகாரம் தொடர்பாக இன்று சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை தொடங்கும் நிலையில் காங்கிரஸ் எம்.பி. அபிசேஷ் சிங்வி, தலைவர் சோனியா காந்தியிடம் ஆலோசனையை மேற்கொண்டார். சோனியாவின் ரேபரேலி மற்றும் ராகுலின் அமேதி தொகுதியில் மட்டும் அரசியல் பிரவேசம் மேற்கொண்ட பிரியங்காவிடமும் இன்று ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. காங்கிரஸ் கட்சியின் வியூகத்தை வலுப்படுத்தும் விதமாக ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. பிரியங்கா அரசியலுக்கு வரவேண்டும் எனவும், இந்திராவின் தோற்றத்தில் இருக்கும் அவரால் மக்கள் மத்தியில் காங்கிரஸை மீண்டும் வலுப்படுத்த முடியும் என காங்கிரஸ் நிர்வாகிகள் முதல் அடிமட்ட தொண்டர்கள் வரையில் சொல்லும் நிலை இப்போதும் உள்ளது. தொடர்ந்து தோல்வி என்ற நிலையில் ராகுலுக்கு குஜராத் தேர்தல் கைகொடுத்தது.

 ஆனால் வெற்றிப்பெறும் நிலையில் இருந்த கர்நாடகாவில் தோல்வி என்றது அவருக்கு பின்னடைவாகவே கருதப்படுகிறது.

எதிர்க்கட்சிகள் ஆதரவு

கர்நாடகாவில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் அணி தாவிவிடக்கூடாது என்பதை உறுதி செய்யும் பணியானது குலாம் நபி ஆசாத் மற்றும் அசோக் கெலட்டிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது. இவ்விவகாரத்தில் திமுக, மம்தா பானர்ஜி, மாயாவதி, சீத்தாராம் யச்சூரி ஆகியோர் ஏற்கனவே தங்களுடைய ஆதரவை காங்கிரசுக்கு தெரிவித்து உள்ளனர். மூத்த காங்கிரஸ் தலைவர்கள் அகமது படேல், குலாம் நபி ஆசாத் ஆகியோர் தெலுங்கு தேசம் மற்றும் தெலுங்கானா ராஷ்டீரிய சமீதி கட்சியுடன் தொடர்பில் உள்ளார்கள்.

கோவா, மணிப்பூர் மற்றும் மேகலாயாவில் எப்படி ஆட்சி அமைக்கப்பட்டதோ அதேபோன்று கர்நாடகாவில் ஆட்சியை அமைக்க வேண்டும் என்று காங்கிரஸ் தீவிரமாக உள்ளது என்பதை அக்கட்சியின் தகவல்கள் தெரிவிக்கிறது.


Next Story