‘ஆப்ரேஷன் கமல்’ பணம், பதவி காங்கிரஸ் எம்.எல்.ஏ.விற்கு ஜனார்த்தன ரெட்டி ஆசைவார்த்தை! ஆடியோ வெளியீடு


‘ஆப்ரேஷன் கமல்’ பணம், பதவி காங்கிரஸ் எம்.எல்.ஏ.விற்கு ஜனார்த்தன ரெட்டி ஆசைவார்த்தை! ஆடியோ வெளியீடு
x
தினத்தந்தி 18 May 2018 2:08 PM GMT (Updated: 18 May 2018 2:08 PM GMT)

கர்நாடகாவில் அமைச்சர் பதவி, பணம் தருவதாக காங்கிரஸ் எம்.எல்.ஏ.விற்கு ஜனார்த்தன் ரெட்டி ஆசைவார்த்தை கூறியதாக காங்கிரஸ் ஆடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளது. #JanardhanaReddy #Congress #BJP

பெங்களூரு,

கர்நாடகாவில் நாளை பெரும்பான்மையை நிரூபிக்க பா.ஜனதாவின் எடியூரப்பாவிற்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. இதற்கிடையே எம்.எல்.ஏ.க்களை வாங்க பாரதீய ஜனதா அனைத்து வழிகளிலும் முயற்சி செய்து வருகிறது என காங்கிரஸ், ஜேடிஎஸ் குற்றம் சாட்டி வருகிறது. ஆட்சிக்காக ‘ஆப்ரேஷன் கமல்’ பா.ஜனதாவால் மீண்டும் முன்னெடுக்கும் என குமாரசாமி குற்றம் சாட்டினார். இப்போது காங்கிரஸ் கட்சியின் சார்பில் வீடியோ ஒன்று வெளியிடப்பட்டு உள்ளது. பணம், அமைச்சர் பதவி தருவதாக ராய்சூர் காங்கிரஸ் எம்.எல்.ஏ.விற்கு ஜனார்த்தன் ரெட்டி ஆசைவார்த்தை கூறியதாக காங்கிரஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதுதொடர்பான ஆடியோ கிளிப்பை காங்கிரஸ் வெளியிட்டு உள்ளது.

செய்தியாளர்கள் சந்திப்பின் போது வெளியிடப்பட்ட ஆடியோ கிளிப்பில் கன்னட மொழியில் இருவர் உரையாடுவது பதிவாகி உள்ளது. காங்கிரஸ் கட்சியின் ராய்சூர் எம்.எல்.ஏ.விடம் ஜனார்த்தன் ரெட்டி பேசியதாக காங்கிரஸ் கூறிஉள்ளது. “உங்களுக்கு என்ன வேண்டும், நாம் ஒருவருக்கு ஒருவர் பேசிக்கொள்ளலாம், பின்னர் முன்செல்வோம்... இன்று, நீங்கள் அமைச்சராகலாம். கட்சியின் மேலிடத்துடன் இருந்து பேசும் வாய்ப்பை உங்களுக்கு தர நான் உறுதியளிக்கிறேன், (அமித் ஷாவுடன் நேரடியாக பேச) உங்களுக்கு அளிக்கும் வாக்குறுதிகளை அவர்கள் நிறைவேற்றுவார்கள். அவர்கள் இந்த நாட்டை ஆளுகிறார்கள். உங்களுக்கு எவ்வளவு பணம் தேவையோ கேளுங்கள், கொடுக்கப்படும். 

உங்களால் 100 மடங்கு அதிகமான சொத்துக்களை உருவாக்க முடியும்,” என ஜெனார்த்தன ரெட்டி பேசியதாக ஆடியோ வெளியிடப்பட்டு உள்ளது. இதற்கிடையே  ஜனதா தளம்(எஸ்), பகுஜன் சமாஜ் கட்சிகளைச் சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் எச்.விஷ்வநாத், மகேசை இழுக்க பா.ஜனதா குதிரை பேரம் நடத்தியதாகவும் குற்றம் சாட்டப்பட்டு உள்ளது, அவர்களும் பணம், பதவி தருவதாக ஆசை காட்டியதாக தகவல் வெளியாகி உள்ளது.

Next Story