தேசிய செய்திகள்

3 நாள் பா.ஜனதா ஆட்சி முடிந்தது ஓட்டெடுப்புக்கு முன்னதாகவே எடியூரப்பா ராஜினாமா + "||" + 3 day BJP rule ended yeddeurappa resigned before the polling

3 நாள் பா.ஜனதா ஆட்சி முடிந்தது ஓட்டெடுப்புக்கு முன்னதாகவே எடியூரப்பா ராஜினாமா

3 நாள் பா.ஜனதா ஆட்சி முடிந்தது ஓட்டெடுப்புக்கு முன்னதாகவே எடியூரப்பா ராஜினாமா
காங்கிரஸ் அணி எம்.எல்.ஏ.க்களை இழுக்கும் முயற்சி தோல்வி அடைந்ததால், நம்பிக்கை ஓட்டெடுப்புக்கு முன்னதாகவே எடியூரப்பா ராஜினாமா செய்தார்.
பெங்களூரு,

கர்நாடகத்தில் பாரதீய ஜனதா ஆட்சி 3 நாளில் முடிவுக்கு வந்தது.

கர்நாடக சட்டசபைக்கு நடந்த தேர்தலில் எந்த கட்சிக்கும் மெஜாரிட்டி கிடைக்காததால், 78 இடங்களில் வெற்றி பெற்ற காங்கிரஸ், 38 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்ற ஜனதாதளம் (எஸ்) கூட்டணி ஆட்சி அமைப்பதற்கு ஆதரவு அளிக்க முன்வந்தது.


ஆனால் அதிகபட்சமாக 104 இடங்களை பெற்ற பாரதீய ஜனதாவைச் சேர்ந்த எடியூரப்பாவுக்கு, ஆட்சி அமைக்க கடந்த புதன்கிழமை அழைப்பு விடுத்த கவர்னர் வஜூபாய் வாலா, 15 நாட்களில் சட்ட சபையில் மெஜாரிட்டியை நிரூபிக்குமாறு அவருக்கு ‘கெடு’ விதித்தார்.

கவர்னரின் இந்த முடிவை எதிர்த்து காங்கிரஸ், ஜனதா தளம் (எஸ்) கட்சிகள் அன்று இரவே சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தன. அந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு கவர்னரின் முடிவுக்கு தடை விதிக்க மறுத்து விட்டதால், கர்நாடகத்தின் புதிய முதல்-மந்திரியாக எடியூரப்பா வியாழக்கிழமை பதவி ஏற்றார்.

இந்தநிலையில் காங்கிரஸ், ஜனதாதளம் (எஸ்) கட்சிகள் தொடர்ந்த வழக்கு நேற்றுமுன்தினம் மீண்டும் விசாரணைக்கு வந்த போது, எடியூரப்பா சட்டசபையில் சனிக்கிழமை மாலை 4 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு கோர வேண்டும் என்றும், மூத்த உறுப்பினர் ஒருவரை தற்காலிக சபாநாயகராக நியமிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது.

இதைத்தொடர்ந்து, பாரதீய ஜனதா கட்சியைச் சேர்ந்த மூத்த எம்.எல்.ஏ.யான கே.ஜி. போப்பையாவை தற்காலிக சபாநாயகராக நியமித்து அவருக்கு கவர்னர் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

நம்பிக்கை வாக்கெடுப்பின் போது கே.ஜி.போப்பையா பாரதீய ஜனதாவுக்கு ஆதரவாக செயல்படுவார் என்று கருதிய காங்கிரஸ், ஜனதாதளம் (எஸ்) கட்சிகள், அவரது நியமனத்தை எதிர்த்தும், அவருக்கு பதிலாக வேறொரு மூத்த உறுப்பினரை தற்காலிக சபாநாயகராக நியமிக்கவேண்டும் என்றும் கோரி நேற்றுமுன்தினம் சுப்ரீம் கோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்தன.

இதற்கிடையே, நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெறுவதற்காக காங்கிரஸ், ஜனதாதளம் (எஸ்) கட்சிகளில் உள்ள சில எம்.எல்.ஏ.க்களை இழுக்கும் முயற்சியில் பாரதீய ஜனதா ஈடுபட்டது.

சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற குறைந்தபட்சம் 111 உறுப்பினர்களின் ஆதரவு தேவை என்பதால், பாரதீய ஜனதாவுக்கு மேலும் 7 எம்.எல்.ஏ.க் களின் ஆதரவு தேவைப்பட்டது. எதிர் அணியில் இருந்து எப்படியாவது 7 எம்.எல்.ஏ.க் களை இழுத்துவிட அந்த கட்சி கடுமையாக போராடியது.

இந்த நிலையில், பாதுகாப்பு கருதி ஐதராபாத்தில் உள்ள நட்சத்திர ஓட்டல்களில் தங்க வைக்கப்பட்டு இருந்த காங்கிரஸ், ஜனதாதளம் (எஸ்) கட்சிகளின் எம்.எல்.ஏ.க்கள் அங்கிருந்து நேற்று காலை பெங்களூருவுக்கு அழைத்து வரப்பட்டனர்.

இதற்கிடையே, தற்காலிக சபாநாயகராக கே.ஜி.போப்பையா நியமிக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை நேற்று காலை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள், நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற இருக்கும் சூழ்நிலையில் அவரை மாற்றி விட்டு வேறொருவரை தற்காலிக சபாநாயகராக நியமிக்க வேண்டும் என்றால், வாக்கெடுப்பு தாமதம் ஆகும் என்றும், எனவே கே.ஜி.போப்பையாவே தற்காலிக சபாநாயகராக நீடிக்கட்டும் என்றும் கூறினார்கள்.

அதை காங்கிரஸ், ஜனதா தளம் (எஸ்) கட்சிகளின் சார்பில் ஆஜரான வக்கீல்கள் ஏற்றுக் கொண்டனர். இதனால் தற்காலிக சபாநாயகரை மாற்றும் பிரச்சினை முடிவுக்கு வந்தது.

இந்த பரபரப்பான சூழ் நிலையில், எடியூரப்பா நம்பிக்கை வாக்கெடுப்பு கோருவதற்காக நேற்று காலை 11 மணிக்கு சட்டசபை கூடியது. ஐதராபாத்தில் இருந்து திரும்பிய காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம்(எஸ்) எம்.எல்.ஏ.க்கள் மற்றும் பா.ஜனதா எம்.எல். ஏ.க்கள் சட்டசபைக்கு வந்தனர். தேர்ந்தெடுக்கப்பட்ட 221 எம்.எல்.ஏ.க்களும் சபைக்கு வந்து இருந்தனர்.

தேர்தல் முடிவு வெளியானதில் இருந்து எங்கு இருக்கிறார்கள் என தெரியாமல் இருந்த காங்கிரசைச் சேர்ந்த ஆனந்த் சிங், பிரதாப்கவுடா பட்டீல் ஆகியோரும் சபைக்கு வந்து இருந்தனர்.

கூட்டம் தொடங்கியதும் தொகுதிகளின் வரிசை எண் வாரியாக எம்.எல்.ஏ.க்களுக்கு தற்காலிக சபாநாயகர் போப்பையா பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

எம்.எல்.ஏ.க்கள் பதவி ஏற்கும் நிகழ்ச்சி முடிந்தும், பிற்பகல் 3.45 மணிக்கு முதல்-மந்திரி எடியூரப்பா தனது அரசின் மீதான நம்பிக்கை தீர்மானத்தை தாக்கல் செய்து 25 நிமிடங்கள் உருக்கமாக பேசினார். அப்போது, என் உயிர் உள்ள வரை கர்நாடக மக்களுக்காக போராடுவேன் என்றும், உழைப்பேன் என்றும் நா தழுதழுக்க பேசிய அவர், “எங்கள் கட்சிக்கு முழு மெஜாரிட்டி இல்லாததால், முதல்- மந்திரி பதவியை ராஜினாமா செய்கிறேன்” என்று அறிவித்தார்.

அப்போது காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம்(எஸ்) கட்சிகளின் எம்.எல்.ஏ.க்கள் கைகளை உயர்த்தி இரட்டை விரலை காட்டி வெற்றியை கொண்டாடினர். ஒருவரை ஒருவர் கட்டித்தழுவி மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர்.

பேசி முடித்ததும் சபையில் இருந்து வெளியேறிய எடியூரப்பா, அரசு காரை தவிர்த்துவிட்டு தனது சொந்த காரில் கவர்னர் மாளிகைக்கு சென்றார். அங்கு கவர்னர் வஜூபாய் வாலாவை நேரில் சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை வழங்கினார். அதை கவர்னர் பெற்றுக் கொண்டார்.

காங்கிரஸ், ஜனதாதளம் (எஸ்) கட்சிகளில் இருந்து சில எம்.எல்.ஏ.க்களை இழுத்து நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைத்துக்கொள்ள முடியும் என்று எடியூரப்பா மிகுந்த நம்பிக்கையில் இருந்தார். ஆனால் எம்.எல்.ஏ.க்களை இழுக்கும் முயற்சி தோல்வி அடைந்ததால் நம்பிக்கை தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடைபெறுவதற்கு முன்னதாகவே, அதாவது சட்டசபையில் பலப்பரீட்சையை சந்திக்காமலேயே அவர் ராஜினாமா செய்து விட்டார்.

பெரும்பான்மை பலம் இல்லாததால் அவரது தலைமையிலான பாரதீய ஜனதா அரசு பதவி ஏற்ற 3 நாளிலேயே முடிவுக்கு வந்துவிட்டது.

கர்நாடகத்தின் 23-வது முதல்-மந்திரியாக கடந்த 17-ந் தேதி காலை 9 மணிக்கு பதவி ஏற்ற எடியூரப்பா, பதவி ஏற்பு விழா முடிந்ததும் நேராக விதான சவுதாவுக்கு வந்து பூஜை செய்து முதல்-மந்திரி நாற்காலியில் அமர்ந்தார். ஆனால் அந்த நாற்காலி அவருக்கு நிரந்தரம் இல்லாமல் போய்விட்டது.

இதன்மூலம் கர்நாடகத்தில் குறைந்த நாட்கள், அதாவது 3 நாட்கள் மட்டுமே முதல்-மந்திரி பதவியில் இருந்தவர் என்ற பெயர் எடியூரப்பாவுக்கு கிடைத்து இருக்கிறது.