உச்சத்தை நோக்கி செல்கிறது பெட்ரோல், டீசல் விலை


உச்சத்தை நோக்கி செல்கிறது பெட்ரோல், டீசல் விலை
x
தினத்தந்தி 21 May 2018 12:00 AM GMT (Updated: 20 May 2018 10:35 PM GMT)

பெட்ரோல், டீசல் விலை உச்சத்தை நோக்கி செல்கிறது. நேற்று பெட்ரோல் விலை லிட்டருக்கு 35 காசுகளும், டீசல் விலை லிட்டருக்கு 28 காசுகளும் அதிகரித்தது.

புதுடெல்லி,

கர்நாடக சட்டசபை தேர்தலையொட்டி பெட்ரோல், டீசல் விலை 19 நாட்கள் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது.

அங்கு தேர்தல் முடிந்து விட்டதை அடுத்து மீண்டும் தினந்தோறும் அவற்றின் விலையை பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தி வருகின்றன.

கடந்த 16-ந் தேதி முதல் 20-ந் தேதி வரையிலான 5 நாளில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 1 ரூபாய், 20 காசுகள் உயர்ந்து உள்ளது.

16-ந் தேதி ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.77.93 ஆக இருந்தது. 17-ந் தேதி 23 காசுகள் உயர்ந்து ரூ.78.16 ஆனது. இது 18-ந் தேதி 30 காசுகள் உயர்ந்து ரூ78.46 ஆனது. 19-ந் தேதி 32 காசுகள் அதிகரித்து ரூ.78.78 ஆனது. 20-ந் தேதி (நேற்று) 35 காசுகள் உயர்ந்து ரூ.79.13 ஆனது.

சென்ற 16-ந் தேதி சென்னையில் டீசல் விலை லிட்டருக்கு ரூ.70.25 ஆக இருந்தது. 17-ந் தேதி 24 காசுகள் உயர்ந்து ரூ.70.49 ஆக அதிகரித்து. இது 18-ந் தேதி 31 காசுகள் அதிகரித்து ரூ.70.80 ஆனது. 19-ந் தேதி 24 காசுகள் அதிகரித்து ரூ.71.04 ஆனது. 20-ந் தேதி (நேற்று) மேலும் 28 காசுகள் அதிகரித்து ரூ.71.32 ஆக உயர்ந்தது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்து வருவதும், அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு சரிந்து வருவதும்தான் பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு காரணம் என்று கூறப்பட்டு வருகிறது.

இருப்பினும் இந்த விலையில், மத்திய அரசு விதிக்கிற உற்பத்தி வரியும், மாநில அரசுகள் விதிக்கிற மதிப்பு கூட்டு வரியும் முக்கிய பங்கு வகிக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

பெட்ரோல், டீசல் விலை உயர்வின் தாக்கம் அனைத்து பொருட்களிலும் எதிரொலிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உதாரணத்துக்கு குளிர்பதனப்பெட்டி (பிரிஜ்), சலவை எந்திரம் (வாஷிங் மெஷின்) உற்பத்தியில் முன்னணியில் உள்ள நிறுவனங்களில் ஒன்றான கோத்ரேஜ் நிறுவனத்தார், ஜூன் மாதம் முதல் 2 முதல் 3 சதவீதம் வரை விலை உயர்வு செய்ய உள்ளதாக அறிவித்துள்ளனர்.

இதே போன்று அத்தியாவசிய பொருட்கள், காய்கறிகள், நுகர்வோர் பயன்பாட்டு சாதனங்கள், ஆட்டோ கட்டணம், கால்டாக்சி கட்டணம் என எல்லாமே உயரும்.

தற்போது சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை பீப்பாய் ஒன்றுக்கு 80 டாலரை (சுமார் ரூ.5 ஆயிரத்து 440) கடந்து விட்டது. ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் விலை 80 டாலர் என்று இருக்கிற போது ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.80, ஒரு லிட்டர் டீசல் 71.50 என்கிற அளவுக்கு எட்டி உள்ளது.

ஆனால் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து ஏறுமுகம்தான் காணப்போகிறது.

2016-ம் ஆண்டு 29 டாலர் என்று இருந்த ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் விலைதான் இப்போது கிட்டத்தட்ட 3 மடங்கு ஆகி உள்ளது. இது மேலும் உயர்ந்து விரைவில் 90 டாலர் ஆகி விடும் என அமெரிக்காவின் மோர்கன் ஸ்டான்லி நிறுவனம் எச்சரித்து உள்ளது.

பாங்க் ஆப் அமெரிக்கா மெர்ரில் லிஞ்ச், சர்வதேச சூழல்கள் காரணமாக கச்சா எண்ணெய் விலை 100 டாலருக்கு உயரும் என கணித்து உள்ளது. சவுதி அரேபியாவும் இதை எதிர்பார்ப்பதாக ராயிட்டர்ஸ் செய்தி நிறுவனம் கூறி உள்ளது.

இப்படி 100 டாலர் என்று வரலாற்றில் இல்லாத அளவுக்கு கச்சா எண்ணெய் விலை உயர்ந்தால், அது பெட்ரோல், டீசல் விலையையும் இதுவரை இல்லாத உச்சத்துக்கு கொண்டு செல்லும். 

Next Story