தேசிய செய்திகள்

அச்சுறுத்தும் ‘நிபா’ வைரஸ்! தெரிந்துக்கொள்ள வேண்டியவை; உலக சுகாதார அமைப்பு உதவியை நாட கேரளா பரிசீலனை + "||" + Kerala may seek WHO help to battle Nipah

அச்சுறுத்தும் ‘நிபா’ வைரஸ்! தெரிந்துக்கொள்ள வேண்டியவை; உலக சுகாதார அமைப்பு உதவியை நாட கேரளா பரிசீலனை

அச்சுறுத்தும் ‘நிபா’ வைரஸ்! தெரிந்துக்கொள்ள வேண்டியவை; உலக சுகாதார அமைப்பு உதவியை நாட கேரளா பரிசீலனை
‘நிபா’ வைரசுக்கு எதிரான போராட்டத்தில் கேரளா உலக சுகாதார அமைப்பின் உதவியை நாட பரிசீலனை செய்து வருகிறது. #Nipah #Kerala #WHO

கேரளாவில் உயிர்க்கொல்லி ‘நிபா வைரஸ்’ பரவல் தொடர்பான அச்சம் பரவலாகி உள்ளது, தமிழக எல்லையோர பகுதிகளில் கண்காணிப்பு பணிகள் தொடங்கப்பட்டு உள்ளது. 

கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தில் மட்டும் கடந்த சில நாட்களில் நிபா வைரஸ் காரணமாக 10 பேர் உயிரிழந்து உள்ளனர். பாதிக்கப்பட்டு 20-க்கும் அதிகமானோர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்த மாநில நிர்வாகம் தரப்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடங்கப்பட்டு உள்ளது. மத்திய அரசும் சிறப்பு குழுவை மாநிலத்திற்கு அனுப்பி உள்ளது. தமிழக அரசும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக எல்லைப் பகுதிகளில் கண்காணிப்பை தீவிரம் காட்ட தொடங்கி உள்ளது. நிபா வைரஸின் பாதிப்பு, எங்கிருந்து பரவியது, தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்ன என்பதை தெரிந்துக்கொள்வோம். 

நிபா ரைஸ் 

புதியதாக வளர்ந்துவரும் நிபா வைரஸ் (விலங்குகள் வாயிலாக மனிதர்களுக்கு பரவுவது) மனிதர்களுக்கும், விலங்குகளுக்கும் பல்வேறு நோய்களை ஏற்படுத்தும். பெரும்பாலும் பெர்டோபொடிடே குடும்பத்தை சேர்ந்த பழம் திண்ணி வவ்வால்கள் மற்றும் பறக்கும் நரிகள் போன்ற உயிரினங்கள்தான் வைரஸின் இருப்பிடமாக உள்ளது. ஹெபினாவைரஸ் என்ற இனத்தை சேர்ந்த பேரமிக்ஸோவிரிடே என்ற குடும்பத்தை சேர்ந்த வைரஸின் (ஆர்.என்.ஏ) ரைபோ கரு அமிலம்தான் நிபா வைரஸ்.

 மலேசியாவில் கண்டுபிடிக்கப்பட்டது

முதல் முறையாக நிபா வைரஸ் மலேசியா மற்றும் சிங்கப்பூரில் தாக்குதல் காரணமாக கண்டுபிடிக்கப்பட்டது. 1998-ம் ஆண்டு மலேசியாவின் காம்பங் சுங்காய் நிபா என்ற கிராமத்தில் முதல் முறையாக வைரஸ் தாக்குதல் கண்டறியப்பட்டது. உயிரிழப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து தான் கிராமத்தின் பெயரில் வைரசுக்கு நிபா என பெயர் வந்து உள்ளது. அப்போது பன்றிகள் வாயிலாக வைரஸ் பரவியது. இதனையடுத்து வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக பன்றிகள் கொல்லப்பட்டது. மலேசியாவில் வனங்கள் அளிக்கப்பட்டபோது இருப்பிடத்தை இழந்த வவ்வால்கள் கிராமங்களுக்குள் வந்தபோது வைரஸ் தாக்கம் ஏற்பட்டது.

2004-ம் ஆண்டு வங்காளதேசத்தில் பாதிப்பு காணப்பட்டது. அப்போது மக்களுக்கு பாதிப்பு அதிகமாக நேரிட்டது.

  பழம் திண்ணி பறவைகளால் வைரஸ் பரவல் காணப்பட்டது. அதாவது, பனை மற்றும் தென்னை மரங்களில் இறக்கப்படும் கள் குடித்தவர்களுக்கு இந்த பாதிப்பு இருந்தது. வைரஸ் பரவலுக்கு பழம் திண்ணி வவ்வால்கள் காரணமாக இருந்தது கண்டறியப்பட்டது. மனிதர்களுக்கும் பரல் அதிகரிப்பது தெரியவந்தது.

இந்திய துணைக்கண்டத்தில் பாதிப்பு

 2001-ம் ஆண்டு மேற்கு வங்காள மாநிலம் சில்குரியில் நிபா வைரஸ் பாதிப்பு நேரிட்டது. இதில் 66 பேர் பாதிக்கப்பட்டனர். 45 பேர் உயிரிழந்தனர். 

2011-ம் ஆண்டு வங்காளதேசத்தில் வைரஸ் பாதிப்பு அதிகரித்தது, அப்போது 56 பேர் பாதிக்கப்பட்டனர், 50 பேர் உயிரிழந்தனர். 

வைரஸ் பரவல்

பழம் திண்ணி வவ்வால்கள், பறக்கும் நரிகள் மூலமாகதான் நிபா வைரஸ் பரவி வருகிறது. அவைகளிடம் இருந்து வைரஸ் பிற உயிரினங்களுக்கு பரவுகிறது. வைரஸ் இருக்கும் வவ்வால்கள் தின்னும் பழங்கள் கீழே விழும் போது அதனை பன்றி, ஆடு போன்ற விலங்குகளும் சாப்பிடுகிறது. அப்போது அவைகளுக்கும் வைரஸ் பரவுகிறது. அவை நெருங்கும் போது மக்களுக்கும் தொற்று ஏற்படுகிறது. பழத்தை மனிதர்கள் சாப்பிடும் போதும் பாதிப்பு நேரிடுகிறது. வவ்வால்களின் சிறுநீர், மலம், உமிழ் நீர், விந்தணு நீரிலிருந்து இந்த வைரஸ் பரவுகிறது.

நிபா வைரஸ் கிருமியானது மனிதர்களுக்கு என்செஃபாலிட்டிஸ் எனும் மூளைக் காய்ச்சல் நோயை ஏற்படுத்தி கொல்லுகிறது.

நிபா அறிகுறிகள்

நிபா வைரஸ் தொற்று எற்பட்டதுமே பாதிப்பை தொடங்கி விடுகிறது, 14 நாட்களில் ஒருவருடைய உயிரை குடிக்கும் வைரசாக உள்ளது. 10-12 நாட்கள் வரையில் பாதிப்பாக நகரும் வைரஸ் அதற்கு பின்னர் உயிரை எடுக்கிறது. வைரஸ் மூளையின் நரம்பை பாதிக்க செய்து, வீக்கம் அடைய செய்து உயிரிழப்பை ஏற்படுத்துகிறது. மூச்சுவிட முடியாமை, குறைந்த இரத்த அழுத்தம், காய்ச்சல், தலைவலி, மயக்கம், குழப்பமான மனநிலை, கோமா போன்றவை வைரஸ் தாக்கத்திற்கான அறிகுறிகளாக மருத்துவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

நோய் தாக்கிய சில நாட்களிலேயே எல்லாம் நடந்து முடிந்து விடுகிறது. பெரும்பாலும் மூளைக்காய்ச்சல் ஏற்படுத்தியே கொல்லுகிறது.  

சிகிச்சை 

நிபா வைரஸ் தாக்குதல் காரணமாக பாதிக்கப்படும் மனிதர்கள் மற்றும் விலங்குகளை காப்பாற்ற எந்தஒரு மருந்தும் இதுவரையில் கண்டுபிடிக்கப்படவில்லை. தொடர்ச்சியான கண்காணிப்பே முதல்கட்ட சிகிச்சையாக உள்ளது. இருப்பினும் உயிரை காப்பது என்பது 30 சதவிதம் மட்டும்தான். வைரஸ் பாதிப்பு ஏற்பட்டால் 70 சதவிதம் மரணம் நிச்சயம் என உலக சுகாதார நிறுவனம் தெரிவிக்கிறது.  பாதிக்கப்பட்ட நபரை மருத்துவமனையில் தனிமைப்படுத்தி சிகிச்சை அளிப்பது அவசியம். 

பாதிக்கப்பட்ட நோயாளிக்கு சிகிச்சை அளிக்கும் போதும், பரிசோதனை மேற்கொள்ளும் போது மருத்துவர்கள், மருத்துவ ஊழியர்கள் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். முன்னெச்சரிக்கையின்மை, கவனக்குறைவாலும் நோய் எளிதில் தொற்றிக்கொள்ள வாய்ப்பு உள்ளது. 

ஆஸ்திரேலியாவில் குதிரைகள் மூலம் பரவிய ஹென்றா வைரஸ் பாதிப்புக்கான தடுப்பு மருந்துக்களை பிரயோகிக்க வாய்ப்பிருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. 
  
முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்

வைரசால் நோயுற்ற பன்றிகள் மற்றும் வவ்வால்கள் உள்ள பகுதிகளை அணுகாமல் இருப்பது. 

பறவைகள் சாப்பிட்டு மரத்தில் இருந்து விழும் பழங்களை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். கள் குடிப்பதை தவிர்க்க வேண்டும். பழங்களை சுத்தமாக கழுவியோ, தோலை உரித்துவிட்டோ பயன்படுத்துங்கள். 

பாதிக்கப்பட்டவர்களை சந்திக்க நேரிட்டால் கைகளை சுத்தமாக கழுவ வேண்டும். அவர்களை சந்திக்கும் போது முககவசம் அணிய வேண்டும்.

உலக சுகாதார அமைப்பு

நிபா வைரசுக்கு எதிரான போராட்டத்தில் கேரள அரசு உலக சுகாதார மையத்தின் உதவியை நாட வாய்ப்பு உள்ளது என செய்தி வெளியாகி உள்ளது.

 தேசிய நோய் கட்டுப்பாட்டு மையம் கேரளாவில் நிபா வைரஸ் தாக்குதலை மூன்றாவது மிகப்பெரிய தாக்குதல் என குறிப்பிடுகிறது. நிபா வைரஸ் பாதிப்பு மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. மாநில அரசு சார்பில் விழிப்புணர்வு பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டு உள்ளது. மாநில அரசு, உலக சுகாதார மையத்தின் உதவியை நாடவும் பரிசீலனை செய்து வருகிறது என தகவல்கள் வெளியாகி உள்ளது. 

கேரளாவில் முதன் முதலில் நிபா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டதை தொடர்ந்து மாநிலம் முழுவதும் கடும் உஷார் நிலை பிறப்பிக்கப்பட்டு உள்ளது. கோழிக்கோட்டில் இந்த நோயால் இறந்துபோன ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேரும் வசித்து வந்த வீட்டில் உள்ள கிணற்றில் கூட வவ்வால் ஒன்று இருந்ததை மருத்துவ அதிகாரிகள் கண்டுபிடித்தனர். அந்த கிணறு தொடர்ந்து மூடியே கிடப்பது குறிப்பிடத்தக்கது. அங்கிருந்த வவ்வால்களை சுகாதாரத்துறை அதிகாரிகள் பிடித்தனர். மேலும் பல்வேறு நிலைகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. 

 மாநில சுகாதார மந்திரி சைலஜா பேசுகையில், நிலைமை கட்டுக்குள் உள்ளது, இதில் அச்சம் அடைய தேவையில்லை. நிபா வைரஸை எதிர்க்கொள்ள அனைத்து நிலைகளிலும் தயார் நிலையில் உள்ளோம், பயப்பட தேவையில்லை என கூறி உள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

1. பொங்கல் விழாவையொட்டி கேரளாவில் 6 மாவட்டங்களுக்கு விடுமுறை
பொங்கல் விழாவையொட்டி, கேரளாவில் 6 மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
2. தொழிற்சங்கத்தினர் வேலைநிறுத்தம் - கேரளா, மேற்குவங்காளத்தில் ரெயில் மறியல்
தொழிற்சங்கத்தினர் வேலைநிறுத்தம் காரணமாக, கேரளா மற்றும் மேற்குவங்காளத்தில் ரெயில் மறியல் போராட்டம் நடைபெற்றது.
3. சபரிமலை விவகாரம்: கேரளாவில் வன்முறை நீடிப்பு
சபரிமலை விவகாரத்தில் கேரளாவில் வன்முறை சம்பவங்கள் நீடிப்பதால் மாநிலத்தின் பல பகுதிகளில் தொடர்ந்து பதற்றம் நிலவுகிறது.
4. முல்லைப் பெரியாறில் புதிய அணை: கேரளாவுக்கு எதிராக தமிழக அரசு கோர்ட்டு அவமதிப்பு வழக்கு
முல்லைப் பெரியாறில் புதிய அணை கட்டுவது தொடர்பாக கேரளாவுக்கு எதிராக தமிழக அரசு, கோர்ட்டு அவமதிப்பு வழக்கினை தாக்கல் செய்தது.
5. சபரிமலையில் 2 பெண்கள் தரிசனம், போராட்டம் வெடித்தது, பினராயி விஜயன் நவீன அவுரங்கசீப் என விமர்சனம்
சபரிமலையில் 2 பெண்கள் தரிசனம் செய்ததற்கு எதிராக போராட்டம் வெடித்துள்ளது.