தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து தமிழக அரசிடம் மத்திய உள்துறை இலாகா விளக்கம் கேட்கிறது


தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து தமிழக அரசிடம் மத்திய உள்துறை இலாகா விளக்கம் கேட்கிறது
x
தினத்தந்தி 24 May 2018 12:00 AM GMT (Updated: 23 May 2018 8:27 PM GMT)

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக தமிழக அரசு விரிவான விளக்கம் அளிக்கும்படி மத்திய உள்துறை இலாகா உத்தரவிட்டு உள்ளது.

புதுடெல்லி, 

தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி நேற்று முன்தினம் நடந்த 100-வது நாள் போராட்டத்தின்போது மாவட்ட கலெக்டர் அலுவலகம் நோக்கி 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பேரணியாக சென்றனர்.

அப்போது பல இடங்களில் பயங்கர வன்முறை வெடித்தது. இதைக் கட்டுப்படுத்த போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியதில் 10-க்கும் மேற்பட்டோர் பலியாயினர். 50-க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்தனர்.

இந்த நிலையில் தூத்துக்குடியில் அமைதியை நிலைநாட்டும் பணியில் துணை ராணுவப் படையினரை ஈடுபடுத்தக்கூடும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இதுகுறித்து மத்திய உள்துறை செயலாளர் ராஜீவ் கவுபாவிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

பொதுவாக இதுபோன்ற பதற்றமான நேரங்களில் அந்தந்த மாநிலங்களுக்கு துணை ராணுவப்படை அனுப்பி வைக்கப்படும். ஆனால் நாங்களாக விரும்பி துணை ராணுவப்படையை அனுப்ப மாட்டோம். சம்பந்தப்பட்ட மாநிலங்கள் மத்திய உள்துறையிடம் கேட்க வேண்டும்.

அந்த வகையில் தமிழக அரசு, மத்திய உள்துறை இலாகாவிடம் துணை ராணுவப்படையை அனுப்பி வைக்க கோரினால் உடனே அனுப்பி வைப்போம். தமிழக அரசுக்கு உதவ நாங்கள் தயாராக இருக்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

தற்போது நிலைமை கட்டுப்பாட்டில் உள்ளதா? என்றும் அவர் தமிழக அரசை கேட்டுள்ளார்.

இதற்கிடையே, கலவரம் தொடர்பாக விரிவான அறிக்கை அளிக்குமாறு மத்திய உள்துறை இலாகா, தமிழக அரசுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.

அந்த கடிதத்தில், ‘போராட்டம் கலவரமாக மாறியது ஏன்? போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்துவதற்கான அவசியம் என்ன? இத்தனை பெரிய கலவரம் ஏற்பட வாய்ப்பிருப்பதாக தமிழக உளவுத்துறை முன்கூட்டியே அறியாமல் இருந்தது ஏன்? என்பன போன்ற கேள்விகளுக்கெல்லாம் விடை அளிக்கும் வகையில் அந்த அறிக்கை விரிவானதாக இருக்கவேண்டும்’ என்று கூறப்பட்டு இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story