பாம்பு கடித்தது தெரியாமல் தாய்ப்பால் கொடுத்த தாய் - குழந்தை பலி


பாம்பு கடித்தது தெரியாமல் தாய்ப்பால் கொடுத்த தாய் - குழந்தை பலி
x
தினத்தந்தி 26 May 2018 7:38 AM GMT (Updated: 26 May 2018 7:38 AM GMT)

தூங்கும் போது பாம்பு கடித்தது தெரியாமல் தாய்ப்பால் கொடுத்ததால் தாயுடன் சேர்ந்து குழந்தையும் பலியான சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது. #UttarPradesh

முசாபர்நகர்,

உத்தரப்பிரதேச மாநிலம், முசாபர்நகர் மாவட்டத்தில் வசித்து வந்த 35 வயது பெண் ஒருவர், நேற்று இரவு வீட்டில் தனது இரண்டரை வயது குழந்தையுடன் உறங்கிக் கொண்டிருந்தார். அப்போது நள்ளிரவில் அப்பெண்ணை பாம்பு ஒன்று கடித்தது. ஆனால், அந்தப்பெண் அதை அறியவில்லை. இதனால் கொஞ்சம் கொஞ்சமாக பாம்பு விஷம் அவரது உடல் முழுவதும் பரவியது.

இந்நிலையில், குழந்தை பசியால் அழவே, அப்பெண் உறக்கத்திலேயே குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்துள்ளார். இதனால், விஷம் தாய்ப்பால் வழியாக அக்குழந்தையின் உடலுக்கும் பரவியது. விஷத்தின் தீவிரத்தால் சிறிது நேரத்தில் இருவரும் ஆபத்தான நிலைக்குச் சென்றனர். உடனடியாக அவர்கள் இருவரையும் உறவினர்கள் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே பரிதாபமாக இருவரும் உயிரிழந்தனர்.

தாயும், குழந்தையும் தூங்கிக் கொண்டிருந்த அறைக்கு அடுத்த அறையில் பாம்பு ஒன்று இருந்ததாகவும், ஆனால் பிடிப்பதற்குள் அது தப்பிவிட்டதாகவும் அவரது உறவினர்கள் போலீசாரிடம் தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து முசாபர்நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்தியாவில் சுமார் 300க்கும் அதிகமான பாம்பு வகைகள் உள்ளன. அவற்றில் அறுபதுக்கும் மேற்பட்டவை கொடிய விஷத்தன்மை உள்ளவை. கடந்த 2011ம் ஆண்டு நடத்தப்பட்ட அமெரிக்க மருத்துவ மற்றும் சுகாதார ஆய்வின்படி, உலகளவில் ஆண்டுதோறும், சுமார் ஒரு லட்சத்திற்கும் அதிகமாக பேர் பாம்புக் கடிக்கு பலியாகின்றனர். இதில் இந்தியாவில் மட்டும் சுமார் 46 ஆயிரம் பேர் பலியாகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story