ஆர்.எஸ்.எஸ். முகாமில் பிரணாப் முகர்ஜி பங்கேற்பு: கருத்து சொல்ல காங்கிரஸ் மறுப்பு


ஆர்.எஸ்.எஸ். முகாமில் பிரணாப் முகர்ஜி பங்கேற்பு: கருத்து சொல்ல காங்கிரஸ் மறுப்பு
x
தினத்தந்தி 29 May 2018 11:00 PM GMT (Updated: 29 May 2018 8:12 PM GMT)

ஆர்.எஸ்.எஸ். முகாமில் பிரணாப் முகர்ஜி பங்கேற்பது குறித்து கருத்து சொல்ல காங்கிரஸ் மறுப்பு தெரிவித்தது.

புதுடெல்லி,

மராட்டிய மாநிலம், நாக்பூரில் வரும் 7-ந் தேதி நடக்க உள்ள ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் பயிற்சி முகாம் நிறைவு விழாவில், முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, தலைமை விருந்தினராக கலந்துகொண்டு பேசுகிறார் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஆர்.எஸ்.எஸ். அமைப்பும், பாரதீய ஜனதா கட்சியும் வெறுப்புணர்வு கொள்கையை பின்பற்றுவதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டுகிற நேரத்தில், அந்தக் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவராக திகழ்ந்த முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, ஆர்.எஸ்.எஸ். நிகழ்ச்சியில் பங்கேற்று பேசுவது, அந்த கட்சியில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

டெல்லியில் காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் டாம் வேதக்கண் நேற்று பேட்டி அளித்தபோது, இது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது அவர், “அந்த நிகழ்ச்சி நடந்து விடவில்லை. ஊடகத்தின் மூலம்தான் நான் அறிந்துகொண்டேன். மேலும் விவரங்களை சேகரிக்கிறேன். தற்போது இது குறித்து கருத்து கூறுவதற்கு இல்லை” என்று பதில் அளித்தார்.

இதற்கு இடையே மும்பையில் மத்திய மந்திரி நிதின் கட்காரி நேற்று பேட்டி அளித்தபோது ஆர்.எஸ்.எஸ். நிகழ்ச்சியில் பிரணாப் முகர்ஜி கலந்துகொள்ள சம்மதம் தெரிவித்து உள்ளது பற்றி நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு அவர், “ஆர்.எஸ்.எஸ். அமைப்பு ஒன்றும், பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ. அல்ல. இது தேசியவாதிகளின் அமைப்பு. இதன் அழைப்பை பிரணாப் முகர்ஜி ஏற்றுக்கொண்டிருப்பது, ஒரு நல்ல தொடக்கம். அரசியலில் தீண்டத்தகாமை நல்லது அல்ல” என பதில் அளித்தார்.

Next Story