தேர்தல் முறையில் மக்கள் நம்பிக்கை இழந்தால், ஜனநாயகத்துக்கு ஆபத்து: சிவசேனா எச்சரிக்கை


தேர்தல் முறையில் மக்கள் நம்பிக்கை இழந்தால், ஜனநாயகத்துக்கு ஆபத்து: சிவசேனா எச்சரிக்கை
x
தினத்தந்தி 30 May 2018 3:25 PM GMT (Updated: 2018-05-30T20:55:20+05:30)

தேர்தல் முறையில் மக்கள் நம்பிக்கை இழந்தால், ஜனநாயகத்துக்கு ஆபத்து என்று சிவசேனா தெரிவித்து உள்ளது.

மும்பை,

மத்தியில் ஆளும் பாஜக அரசு தன்னுடைய சுயநலத்துக்காக மின்னணு வாக்கு இயந்திரங்களில் முறைகேடுகள் செய்கிறது. தேர்தல் முறையில் மக்கள் நம்பிக்கை இழந்தால், ஜனநாயகத்துக்கு மிகப்பெரிய ஆபத்தாகும் என்று தேர்தல் ஆணையத்துக்கு சிவசேனா கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.சமீபத்தில் 4 மக்களவைத் தொகுதிகள், 10 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத் தேர்தல் நடந்தது. இதற்கான வாக்கு எண்ணிக்கை நாளை நடைபெறவுள்ளது. இந்த இடைத் தேர்தலின் போது கர்நாடக, மகாராஷ்டிராவில் வாக்குப்பதிவு இயந்திரங்களில் கோளாறு ஏற்பட்டு வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டு மீண்டும் தொடங்கியது.

வாக்குப்பதிவு இயந்திரங்கள் பழுதானது குறித்து கடும் அதிருப்தி தெரிவித்துள்ள சிவசேனா கட்சி, தேர்தல் ஆணையத்துக்கு எச்சரிக்கை செய்து தனது அதிகாரப்பூர்வ நாளேடான சாம்னாவில் தலையங்கத்தில் குறிப்பிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:மத்தியில் ஆளும் பாஜக அரசு ஏதேச்சதிகார மனப்பான்மையுடன் செயல்பட்டு, தன்னுடைய சுயலாபத்துக்காக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடு செய்கிறது. நமது நாட்டில் ஜனநாயகம் நீண்ட நெடுங்காலமாக நீடித்து இருப்பதால்தான், உலகில் மிகப்பெரிய ஜனநாயகமாக இருக்கிறது. ஆனால், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களால் ஜனநாயகம் சீரழிகிறது.

தேர்தல் முறையில் மக்கள் நம்பிக்கை இழந்துவிட்டால், அது ஜனநாயகத்துக்கு ஆபத்தாகும்.இதே மின்னணு இயந்திரங்களை பாஜக எதிர்த்தது நினைவிருக்கும். இப்போது ஒட்டுமொத்த நாடே மின்னணு வாக்கு இயந்திரங்களை எதிர்க்கிறது. ஆனால், பாஜக அதை ஆதரிக்கிறது. ஒட்டுமொத்த உலகமும் மின்னணு வாக்கு எந்திரங்களை எதிர்க்கும் போது, ஏன் பாஜக அரசு மட்டும் ஆதரிக்கிறது.இவ்வாறு சிவசேனா கட்சித் தெரிவித்துள்ளது.


Next Story