துப்பாக்கிசூடு பற்றி விசாரிக்க தேசிய மனித உரிமை ஆணைய விசாரணை குழு - தூத்துக்குடி வருகை


துப்பாக்கிசூடு பற்றி விசாரிக்க தேசிய மனித உரிமை ஆணைய விசாரணை குழு - தூத்துக்குடி வருகை
x
தினத்தந்தி 30 May 2018 11:45 PM GMT (Updated: 30 May 2018 8:40 PM GMT)

துப்பாக்கிசூடு பற்றி விசாரிக்க தேசிய மனித உரிமை ஆணைய விசாரணை குழு இன்று தூத்துக்குடி வருகிறது.

புதுடெல்லி,

தூத்துக்குடி துப்பாக்கிசூடு சம்பவம் பற்றி விசாரணை நடத்த, தேசிய மனித உரிமை ஆணைய விசாரணைக்குழு இன்று தூத்துக்குடி வருகிறது.

ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி தூத்துக்குடியில் நடைபெற்ற போராட்டத்தில் துப்பாக்கிசூடு நடந்தது. இதில் 13 பேர் கொல்லப்பட்டனர். இதனைக் கண்டித்து போராட்டங்கள் நடத்தப்பட்டன. இந்த நிலையில், துப்பாக்கிசூடு நடைபெற்ற இடங்களில் தேசிய மனித உரிமை ஆணையம் நேரடியாக களஆய்வு நடத்த வேண்டும் என வலியுறுத்தி தமிழகத்தைச் சேர்ந்த வக்கீல் ஏ.ராஜராஜன் சார்பில் டெல்லி ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவை விசாரித்த கோர்ட்டு, ‘மனுதாரர் இதுதொடர்பாக தேசிய மனித உரிமை ஆணையத்தில் ஆஜராகி தனது தரப்பு வாதங்களை முன்வைக்கலாம்’ என்று கூறியது. அத்துடன், ‘மனுதாரரின் கோரிக்கை தொடர்பாக தேசிய மனித உரிமை ஆணையம் உடனடியாக முடிவெடுக்க வேண்டும்’ என்றும் உத்தரவிட்டு இருந்தது.

இதனைத் தொடர்ந்து மனுதாரர் தேசிய மனித உரிமை ஆணையத்தை அணுகி தனது வாதங்களை முன்வைத்தார். அதனை பரிசீலித்த தேசிய மனித உரிமைகள் ஆணையம், தூத்துக்குடியில் களஆய்வு நடத்தி உண்மையை கண்டறிய ஒரு குழுவை அமைப்பதாக அறிவித்தது. அதன்படி தற்போது அந்த குழு அமைக்கப்பட்டு உள்ளது.

அக்குழுவில் மூத்த போலீஸ் துணை சூப்பிரண்டு தலைமையில் 4 பேர் இடம்பெற்று உள்ளனர். அவர்கள் இன்று (வியாழக்கிழமை) காலை டெல்லியில் இருந்து புறப்பட்டு விமானம் மூலம் சென்னை வருகிறார்கள். சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி செல்கிறார்கள். அவர்கள், தூத்துக்குடியில் துப்பாக்கிசூடு நடைபெற்ற இடங்களை பார்வையிடுவதுடன், துப்பாக்கிசூட்டில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரிடம் விசாரணை மேற்கொள்கிறார்கள்.

பின்னர் தேசிய மனித உரிமை ஆணையத்தில் 2 வாரங்களுக்குள் அறிக்கை சமர்ப்பிப்பார்கள்.

Next Story