பெட்ரோல் லிட்டருக்கு 7 பைசாவும், டீசல் லிட்டருக்கு 5 பைசாவும் குறைப்பு


பெட்ரோல் லிட்டருக்கு 7 பைசாவும், டீசல் லிட்டருக்கு 5 பைசாவும் குறைப்பு
x
தினத்தந்தி 31 May 2018 1:59 AM GMT (Updated: 31 May 2018 1:59 AM GMT)

பெட்ரோல் லிட்டருக்கு 7 பைசாவும், டீசல் லிட்டருக்கு 5 பைசாவும் குறைக்கப்பட்டுள்ளன. #PetrolPrice

புதுடெல்லி,

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை மாற்றத்தை பொறுத்து மாதத்தில் 2 முறை பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் செய்யப்பட்டு வந்தது. இதில் மாற்றம் கொண்டுவரப்பட்டு தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலையை மாற்றும் முறை கடந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் நடைமுறைக்கு வந்தது.இந்த நிலையில் கர்நாடக சட்டசபை தேர்தலையொட்டி 19 நாட்களுக்கு பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் கொண்டு வரும் முறை நிறுத்திவைக்கப்பட்டிருந்தது.

கடந்த 14-ந் தேதி முதல் மீண்டும் அந்த முறை நடைமுறைக்கு வந்தது. அதன் பிறகு கடந்த 16 நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை நாளுக்குநாள் உயர்ந்துகொண்டே இருந்தது.அதன்படி பெட்ரோல் லிட்டருக்கு ரூ.3.80 காசுகளும், டீசல் லிட்டருக்கு ரூ.3.38 காசுகளும் உயர்ந்தன. அவர்களுக்கு சற்று ஆறுதல் அளிக்கும் விதமாக நேற்று காலை, பெட்ரோல் விலை லிட்டருக்கு 60 காசும், டீசல் விலை லிட்டருக்கு 56 காசும் குறைக்கப்படுவதாக இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனின் இணையதளத்தில் அறிவிப்பு வெளியானது.

ஆனால் சில மணி நேரத்தில், இந்த விலை குறைப்பு அறிவிப்பு தவறானது என்றும், பெட்ரோல், டீசல் விலையை கணக்கிடுவதில் குளறுபடி ஏற்பட்டதாகவும் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் அறிவித்தது. மேலும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை லிட்டருக்கு தலா 1 காசு மட்டுமே குறைக்கப்படுவதாகவும் அறிவிப்பு வெளியானது. இது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், இன்று 2-வது நாளாக பெட்ரோல், டீசல் விலை குறைகப்பட்டுள்ளது. பெட்ரோல் விலை லிட்டருக்கு 0.7 பைசாவும், டீசல் விலை 0.5 பைசாவும் குறைக்கப்பட்டுள்ளன. டெல்லியில் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை ரூ.78.35 ஆகவும் டீசல் 69.25க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.81.35 ஆகவும், டீசல் விலை ரூ.73.12 க்கும் இன்று விற்பனை செய்யப்படுகிறது. 

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணைய் விலை உயர்வு தணிந்துள்ளதால், எண்ணை விலை குறைக்கப்பட்டுள்ளதாக எண்ணை நிறுவன வட்டார தகவல்கள் கூறுகின்றன. 

Next Story