தேசிய செய்திகள்

‘மக்கள் அனைவருக்கும் மலிவு விலையில் மருத்துவ வசதி’பிரதமர் மோடி உறுதி + "||" + Medical facility at affordable prices for all people Prime Minister Modi confirmed

‘மக்கள் அனைவருக்கும் மலிவு விலையில் மருத்துவ வசதி’பிரதமர் மோடி உறுதி

‘மக்கள் அனைவருக்கும் மலிவு விலையில் மருத்துவ வசதி’பிரதமர் மோடி உறுதி
மக்கள் அனைவருக்கும் மலிவு விலையில் மருத்துவ வசதி கிடைக்க செய்வதே அரசின் நோக்கம் என பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.
புதுடெல்லி, 

மலிவு விலையில் இதய ‘ஸ்டென்டுகள்’ மற்றும் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்தவர்கள், மத்திய அரசின் ‘பிரதம மந்திரி பாரதிய ஜனஉஷாதி பரியோஜனா’ திட்டத்தின் பயனாளிகள் மற்றும் பல்வேறு சுகாதார திட்ட பயனாளிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி நேற்று காணொலி காட்சி மூலம் கலந்துரையாடினார்.

நாட்டின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஏராளமான பயனாளர்கள் பங்கேற்ற இந்த நிகழ்ச்சியில் அவர் உரையாற்றும் போது கூறியதாவது:-

நாட்டில் உள்ள ஏழை மக்களுக்கு, நோய்களுக்கான மருந்துகளை வாங்குவதுதான் மிகப்பெரிய கவலையாக இருக்கிறது. ஒவ்வொரு குடிமகனுக்கும் மலிவு விலையில் மருத்துவ வசதி கிடைக்க செய்வதே எங்கள் அரசின் நிலையான முயற்சியும், நோக்கமும் ஆகும்.

ஏழை, நடுத்தர மக்கள் மலிவு விலையில் மருந்துகளை வாங்குவதற்காக பிரதம மந்திரி பாரதிய ஜனஉஷாதி பரியோஜனா தொடங்கப்பட்டது. இதன் மூலம் அவர்களின் நிதிச்சுமை குறைந்துள்ளது.

நாடு முழுவதும் 3,600 மலிவு விலை மருந்தகங்கள் திறக்கப்பட்டு உள்ளன. அங்கு 700 வகையான மருந்துகள், மார்க்கெட் விலையில் இருந்து 50 முதல் 90 சதவீதம் வரை குறைந்த விலையில் கிடைக்கின்றன. இத்தகைய மருந்தகங்களின் எண்ணிக்கை விரைவில் 5 ஆயிரமாக உயர்த்தப்படும்.

இதயத்தில் பொருத்தப்படும் ஸ்டென்டுகளை வாங்குவதற்கு முன்பெல்லாம் மக்கள் தங்கள் சொத்துகளை விற்கவோ, அடமானம் வைக்கவோ செய்தார்கள். ஆனால் ஏழை மற்றும் நடுத்தர மக்களின் வசதிக்காக இந்த ஸ்டென்டுகளின் விலையை அரசு கணிசமாக குறைத்தது. அதன்படி ரூ.2 லட்சத்தில் இருந்து ரூ.29 ஆயிரமாக அது குறைக்கப்பட்டு உள்ளது.

இந்தியாவில் ஆண்டொன்றுக்கு 1½ லட்சம் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படுவதாக கணிக்கப்பட்டு இருக்கிறது. இந்த சிகிச்சைக்கான கட்டணமும் 60 முதல் 70 சதவீதம் வரை, அதாவது ரூ.2½ லட்சத்தில் இருந்து ரூ.70 ஆயிரமாக குறைக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் பொதுமக்களுக்கு ரூ.1,500 கோடி வரை மிச்சமாகி இருக்கிறது.

பிரதம மந்திரி ராஷ்ட்ரீய டயாலிசிஸ் திட்டம் மூலம் 500-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் 2.25 லட்சம் நோயாளிகளுக்கு 22 லட்சம் டயாலிசிஸ் சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன. மேலும் மிஷன் இந்திராதனுஷ் திட்டத்தின் கீழ் 528 மாவட்டங்களில் 3.15 கோடி குழந்தைகள் மற்றும் 80 லட்சம் கர்ப்பிணிகளுக்கு தடுப்பூசி போடப்பட்டு உள்ளன.

காசநோயை முற்றிலும் ஒழிக்க சர்வதேச அளவில் விதிக்கப்பட்டுள்ள காலக்கெடுவில் இருந்து 5 ஆண்டுகளுக்கு முன்னரே, அதாவது 2025-ம் ஆண்டுக்குள்ளே இந்தியாவில் காச நோயை ஒழிக்க அரசு திட்டமிட்டு உள்ளது. சர்வதேச யோகா தினம் விரைவில் கொண்டாடப்படும் நிலையில், மக்கள் அனைவரும் யோகாவை தங்கள் வாழ்வின் ஒரு அங்கமாக மாற்றிக்கொள்ள வேண்டும்.

இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.