ஆபத்தான தருணத்தில் பெண்களை பாதுகாக்க சாதனம் உருவாக்கிய நிறுவனத்துக்கு ரூ.6¾ கோடி பரிசு


ஆபத்தான தருணத்தில் பெண்களை பாதுகாக்க சாதனம் உருவாக்கிய நிறுவனத்துக்கு ரூ.6¾ கோடி பரிசு
x
தினத்தந்தி 7 Jun 2018 10:45 PM GMT (Updated: 7 Jun 2018 10:12 PM GMT)

ஆபத்தான தருணத்தில் பெண்கள் தங்களை பாதுகாத்து மீட்கப்படுவதற்கு உதவுகிற ‘சேபர் புரோ’ என்ற சாதனத்தை டெல்லியை சேர்ந்த நிறுவனம் உருவாக்கி உள்ளது.

புதுடெல்லி, 

எத்தனை சட்டங்கள் கொண்டு வந்தாலும், பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறை சம்பவங்கள் குறைந்த பாடில்லை. ஆங்காங்கே நடந்தபடியே உள்ளது.

இந்த நிலையில், ஆபத்தான தருணத்தில் பெண்கள் சிக்கிக்கொண்டால், அதில் இருந்து அவர்கள் தங்களை பாதுகாத்து மீட்கப்படுவதற்கு உதவுகிற ‘சேபர் புரோ’ என்ற சாதனத்தை டெல்லியை சேர்ந்த ‘ஸ்டார்ட்-அப்’ நிறுவனம் ‘லீப் வேரபிள்ஸ்’ உருவாக்கி உள்ளது.

சிறிய ‘சிப்’ போன்ற இந்த சாதனத்தை பெண்கள் தங்களது ஆடை, அணிகலன்களில் அல்லது மற்றொரு சாதனத்தில் பொருத்திக்கொள்ள முடியும்.

சேபர் புரோ’ சாதனத்தில் தங்களை ஆபத்பாந்தவர்களாக வந்து காக்கக்கூடிய 5 பேர் பற்றிய தகவல்களை பெண்கள் முன்கூட்டியே பதிவு செய்து தங்கள் ஆடை, அணிகலன்களில் அல்லது வேறு ஏதேனும் சாதனத்தில் பொருத்தி தங்களுடன் வைத்துக்கொள்ள வேண்டும்.

எந்த ஒரு ஆபத்தான சூழலிலும் அந்த சாதனத்தில் உள்ள பொத்தானை அழுத்தி விட்டால் போதும், அவர்கள் எந்த இடத்தில் ஆபத்தில் இருக்கிறார்கள் என்பது அவர்கள் பதிவு செய்து வைத்து உள்ள 5 பேருக்கும் போய்ச் சேர்ந்து விடும். அவர்கள், அந்தப் பெண்களை மீட்க நடவடிக்கை எடுப்பார்கள். எந்த தகவலையும் பேசி ஒலிப்பதிவு செய்தும் இதன்மூலம் அனுப்ப முடியும்.

இந்த சாதனம், டெல்லி ஐ.ஐ.டி. மற்றும் டெல்லி தொழில் நுட்ப பல்கலைக்கழக மாணவர்களின் கூட்டு முயற்சியால் உருவாக்கப்பட்டு உள்ளது. இந்த சாதனத்துக்கு அனு மற்றும் நவீன் ஜெயின் பெண்கள் பாதுகாப்பு பரிசு கிடைத்து உள்ளது. பரிசு 10 லட்சம் டாலர் (சுமார் ரூ.6¾ கோடி) ஆகும்.

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடந்த நிகழ்ச்சியில் ‘லீப் வேரபிள்ஸ்’ நிறுவனத்தின் சார்பில் மாணிக் மேத்தா, நிஹரிகா ராஜீவ், அவினாஷ் பன்சால் ஆகியோர் கூட்டாக பரிசை பெற்று கொண்டனர். 

Next Story