காஷ்மீரில் சுற்றுப்பயணம்: ராஜ்நாத் சிங்குடன் பல்வேறு குழுவினர் சந்திப்பு


காஷ்மீரில் சுற்றுப்பயணம்: ராஜ்நாத் சிங்குடன் பல்வேறு குழுவினர் சந்திப்பு
x
தினத்தந்தி 8 Jun 2018 11:15 PM GMT (Updated: 8 Jun 2018 6:59 PM GMT)

காஷ்மீரில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ராஜ்நாத் சிங்குடன் பல்வேறு குழுவினர் சந்திக்கவுள்ளனர்.

குப்வாரா, 

மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங், 2 நாள் பயணமாக நேற்று முன்தினம் காஷ்மீர் சென்றார். அன்று ஸ்ரீநகரில் நடந்த பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்ற அவர், நேற்று ஹெலிகாப்டர் மூலம் குப்வாரா மாவட்டத்துக்கு சென்றார். அங்கு பணியின் போது உயிரிழந்த போலீசாருக்கு முதலில் அஞ்சலி செலுத்தினார்.

பின்னர் அங்குள்ள தக் மாளிகையில் தங்கியிருந்த அவரை, உள்ளூரை சேர்ந்த ஏராளமான தலைவர்கள் மற்றும் குழுவினர் சந்தித்து பேசினர். குறிப்பாக குஜ்ஜார் மற்றும் பகர்வால் இனத்தை சேர்ந்த குழுவினர் ராஜ்நாத் சிங்கை சந்தித்து பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளித்தனர்.

ராணுவத்தில் குஜ்ஜார் படைப்பிரிவை உருவாக்குதல், குப்வாரா மாவட்டத்தை சேர்ந்த இளைஞர்களை சிறப்பு போலீஸ் அதிகாரிகளாக நியமித்தல், எல்லையோர நகரான டாங்தரை 4 வழிச்சாலை மற்றும் ரெயில் பாதை மூலம் இணைத்தல் என்பது போன்ற கோரிக்கைகளை அவர்கள் வலியுறுத்தினர். இந்த மனுக்களை பெற்றுக்கொண்ட அவர், இந்த கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என உறுதியளித்தார்.

இதைப்போல கெரன், கர்னா போன்ற எல்லையோர பகுதிகளை சேர்ந்த பல்வேறு அமைப்பினர் ராஜ்நாத் சிங்கை சந்தித்து, தங்கள் பகுதிகளுக்கு அனைத்து காலநிலையிலும் பயன்படுத்தக்கூடிய சாலை வசதி ஏற்படுத்துமாறு கோரிக்கை விடுத்தனர்.

Next Story